துல்லியமற்ற ரத்த சர்க்கரை அளவீடுக்கான காரணிகள்
சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக மக்கள்தொகையில் 42.5 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2045ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62.9 கோடிகளைத் தொடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கிராமப்புறப் பகுதிகளைக் காட்டிலும், நகர்ப்புறப் பகுதிகளிலேயே, நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் 1975ஆம் ஆண்டில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புறப் பகுதிகளில் 1975ஆம் ஆண்டில் 1 சதவீதமாக இருந்த நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டில் 16 சதவீதமாக அதிகரித்தது.
ரத்த சர்க்கரை அளவைச் சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது நீரிழிவு பராமரிப்பின் முக்கிய பகுதியாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்போது, அது உங்களை உற்சாகமாக இருக்க வைக்கும், நல்ல மனநிலையில் இருக்கவும், முக்கிய விஷயங்களில் போதிய கவனத்தைச் செலுத்த உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் பரிசோதனை முக்கியமானது. சில நேரங்களில் துல்லியமற்ற முடிவுகள் வரக்கூடும். தொழில்நுட்பம் வளர்ச்சியிலான உபகரணங்களைப் பயன்படுத்தும் போது, துல்லியமற்ற சோதனை முடிவுகள் கிடைப்பது அரிதான நிகழ்வாக மாறுகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் சோதனையில், துல்லியமற்ற முடிவுகள் வருவதற்கான காரணிகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
காலாவதியான சோதனைப் பட்டைகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் சோதனையில் பயன்படுத்தப்படும் சோதனைப் பட்டைகளின் காலாவதி காலம், அதன் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். காலாவதியான சோதனைப் பட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம், துல்லியமற்ற சோதனை முடிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சோதனைப் பட்டைகளை, அதன் பெட்டியில் இருந்து எடுத்ததில் இருந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகப் பயன்படுத்திவிட வேண்டும். சோதனைப் பட்டைகளை அறைவெப்பநிலையில் குளிர்ந்த மற்றும் உலர்ந்த சூழலிலேயே வைக்கப்பட வேண்டும். நேரடியாகச் சூரிய ஒளி படும்படி வைக்கக் கூடாது. அதற்கென உரிய கொள்கலன்களில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான வெப்பநிலையும், துல்லியமற்ற சோதனைமுடிவுக்குக் காரணமாக அமையும்
அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பநிலை, சோதனைமுடிவுகள் தவறாக அமைவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளன. நீங்கள் இருக்கும் இடம் அதிகக் குளிராக இருக்கும்பட்சத்தில், அறையின் உள்சென்று இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடம் அதிகச் சூடாக இருக்கும்நிலையில், ஏதேனும் ஒரு மர நிழலில் அமர்ந்து, சோதனையை மேற்கொள்ள வேண்டும். குளிர்ச் சூழ்நிலையானது, குறைந்த அளவீடுகளில் துல்லியமற்ற தன்மையையும், சூடான வெப்பநிலை, உயர் அளவீடுகளில் துல்லியமற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றன.
கைவிரல்களில் சர்க்கரை, அழுக்கு, ஆல்கஹால் உள்ளிட்டவை இருத்தல்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் சோதனை மேற்கொள்வதற்கு முன், கைகளை நன்கு கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் கைவிரல்களில் இருக்கும் சர்க்கரை, ஆல்கஹால், அழுக்கு போன்ற விரும்பத்தகாத பொருட்கள், சோதனை முடிவின் அளவீட்டில் துல்லியமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஈரமான விரல்கள்
சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன் கைகளைக் கழுவுதல் என்பது மட்டும் போதாது, கைவிரல்களில் ஈரம் இல்லாத அளவிற்கு உலர வைக்க வேண்டும். இல்லையெனில், கைவிரல்களில் இருக்கும் ஈரம், ரத்த மாதிரியுடன் கலந்து சோதனை முடிவில் துல்லியமற்ற நிலையை உருவாக்கும்.
மேலும் வாசிக்க : இரத்த சர்க்கரை அளவு அறிக்கைச் சொல்வது என்ன?
மீட்டர்களில் அழுக்கு படிந்திருத்தல்
சோதனை மீட்டரில் அழுக்கு, தூசி உள்ளிட்ட அசுத்தமான பொருட்கள் படிந்திருக்கும் நிலையில், சோதனையின் முடிவுகள் துல்லியமற்ற நிலையில் இருக்கும். ஆனால், தற்போது ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக, இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இல்லை என்றபோதிலும், சோதனை மேற்கொள்ளும் இடம் அசுத்தமாகவோ தூசி படர்ந்தோ இருந்தால், அங்கு சோதனைச் செய்யக்கூடாது. சுத்தமான, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமை
உங்கள் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லையென்றால், அது ரத்தத்தில் சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திவிடும். இதன்காரணமாக, சோதனை முடிவுகள் துல்லியத்தன்மையுடன் இருப்பது சாத்தியமற்ற சூழல் ஏற்படும். எனவே சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, உடலின் நீர்ச்சத்தைப் போதிய அளவிற்கு அதிகரித்துக் கொள்வது அவசியம் ஆகும்.
போதிய அளவிலான ரத்தம் எடுத்துக்கொள்ளாத நிலை
சோதனைக்குப் பயன்படுத்தப்படும் சோதனைப் பட்டையில் போதுமான அளவுக்கு ரத்தம் எடுத்துக்கொள்ளாத போதும், சோதனை முடிவில் துல்லியமற்ற தன்மை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சோதனைப்பட்டையில் ஒரு துளி ரத்தத்திற்குப் பதிலாக, அதைவிட சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது.
தவறான நேரத்தில் சோதனை மேற்கொள்ளுதல்
சிலர், உணவு சாப்பிட்ட உடனே, ரத்த சர்க்கரையைக் கண்டறியும் சோதனையை மேற்கொள்கின்றனர். இது அதிக மதிப்பினை வழங்குகிறது. எப்போது சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை, உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. துல்லியமான சோதனை முடிவைப் பெற, சாப்பிட்டு 2 மணிநேரத்திற்குப் பிறகு, சோதனை மேற்கொள்வது நல்லது.
மேற்குறிப்பிட்ட காரணிகளைக் கவனமாகத் தவிர்த்து, சரியான வழிமுறைகளைக் கடைபிடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் சோதனையில், துல்லியமான சோதனை முடிவினைப் பெற இயலும்.