மனநல ஆரோக்கியத்திற்கான பயனுள்ளக் குறிப்புகள்
மனநல ஆரோக்கியம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முக்கியமானது.இது நம் எண்ணங்கள், உணர்வுகள், உறவுகள், பணிச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சிறந்த மனநலம் என்பது மன அழுத்தம் இல்லாத நிலையைக் குறிக்கிறது. இது சவால்களை எளிதாக எதிர்கொண்டு, வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க உதவுகிறது.மனநல ஆரோக்கியமின்மை அன்றாட செயல்பாடுகளில் தடங்கல்கள், வாழ்க்கைத் தரக்குறைவு மற்றும் மனநலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கான குறிப்புகள்
போதுமான அளவிலான உறக்கம்
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், போதுமான அளவிலான உறக்கம் உறங்குவது அவசியமானதாகின்றது. உறக்க நிகழ்வானது, மூளையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதோடு, மனநிலை மற்றும் உணர்வுகளை நிர்வகிக்கிறது. சரியான உறக்கம் இல்லையெனில், அதிக மன அழுத்தத்தையும், அதிக அளவிலான எரிச்சல் உணர்வுடனும் இருப்பீர்கள். அதிக மன அழுத்தம் மற்றும் மன இறுக்க உணர்வை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாக, சரியான உறக்கமின்மை நிகழ்வு விளங்குகிறது. இந்தப் பாதிப்பில் இருந்து விடுபட தியான முறைகளை மேற்கொள்ளலாம்.
சத்தான உணவுமுறை
மனநல ஆரோக்கியத்திற்கு உணவுமுறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. குறிப்பிட்ட வகை வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் பற்றாக்குறையே, மன அழுத்தத்திற்குக் காரணமாக அமைகின்றன. எனவே, மனநல ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டுமெனில், சத்தான உணவுமுறை அவசியமாகின்றது. உங்களது மனநிலை மற்றும் வாழ்க்கைமுறையானது, நீங்கள் சாப்பிடும் நேரம் அதன் முறைகளைப் பொறுத்தே அமைகின்றன. நீங்கள் அதிக மன அழுத்தத்துடனோ அல்லது அதிகக் கவலை உணர்வுடனோ இருப்பின், காஃபின் பயன்பாட்டைத் தவிர்க்கவும். காஃபின் பயன்பாடானது, உங்களின் கவலை உணர்வை மேலும் அதிகரித்துவிடும் தன்மைக் கொண்டது ஆகும்.
உடற்பயிற்சிகள் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் சிறந்த நிவாரணியாக, உடற்பயிற்சிகள் விளங்கி வருகின்றன. உடற்பயிற்சிகள், உங்களைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதோடு மட்டுமல்லாது, உங்களது மூளையைப் புத்துணர்வுடன் இயங்க உதவும் வேதிப்பொருளைச் சுரந்து, சிறந்த மனநிலையை உருவாக்குகின்றது. தோட்டத்தில் சிறிது தொலைவு காலார நடந்துச் சென்றாலே, உங்களது மனம் அமைதி அடைவதை உணரலாம். மன அழுத்தம், தெளிவற்ற மனநிலை, மன இறுக்கம், சோர்வு உள்ளிட்ட எதிர்மறை உணர்வுகளை, மனதிலிருந்து அகற்ற உடற்பயிற்சிகள் உதவுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உடற்பயிற்சிகள் பேருதவி புரிகின்றன.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மற்றும் தியானம்
மனதை அமைதிப்படுத்த தியானம், ஆழ்சுவாசப் பயிற்சி, பிரார்த்தனை போன்றவை உதவுகின்றன.தியான முறையானது, உங்கள் மனதைச் சாந்தப்படுத்தி, மனநிலையை மேம்படுத்துகிறது. ஆழ்ந்த சுவாசப் பயிற்சியானது, உங்களின் கவனம் மற்றும் சுய உணர்வை மேம்படுத்துவதாக உள்ளது. மனதை, விரைவில் அமைதி நிலைக்குக் கொண்டு வர உதவுகிறது. மன அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான தேவையற்ற சிந்தனைகளை, மனதில் இருந்து அகற்ற, தியான முறைகள் பேருதவி புரிகின்றன. இவை மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்க உதவுகின்றன.
மகிழ்ச்சியாகவும், நேர்மறைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்
நண்பர்களுடன் அளவளாவி மகிழுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள், எது நடந்தாலும் மகிழ்ச்சியாகவும், நேர்மறைத் தன்மையுடனும் இருங்கள். உங்களது வாழ்க்கையே, உற்சாகம் மிக்கதாக மாறும்.
மன அழுத்தத்தை நிர்வகியுங்கள்
மன அழுத்த நிகழ்வைத் தவிர்க்க முடியாது என்றபோதிலும், அதனைத் தடுக்கும் வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது நமது கையில் தான் உள்ளது. மன அழுத்தத்தின் காரணங்களை அறிந்து, அதற்கேற்ற தடுப்பு முறைகளை மேற்கொள்ளுங்கள்.உங்கள் மனநிலையைப் பாதிக்கும் வகையிலான செயல்களைச் செய்யும் நபரையோ அல்லது காரணிகளையோ, ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
சுய விமர்சனங்களைத் தவிர்க்கவும்
நீங்கள் செய்ய விரும்புவதை, எப்போதும் போலச் செய்யுங்கள். உங்களை, நீங்களே மரியாதையுடன் நடத்துங்கள். சுய விமர்சனம் மற்றும் சுயச் சந்தேகங்களைத் தவிருங்கள். உங்களை நீங்களே செல்லமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள்
உடலை நன்றாகக் கவனித்துக் கொள்வதன் மூலம், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். சத்தான உணவுவகைகளைச் சாப்பிடுங்கள், போதிய உறக்கம், வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை, உங்களை உடல் மற்றும் மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.
மேலும் வாசிக்க : இந்தியாவில் காணப்படும் மனநலம் சார்ந்தப் பிரச்சினைகள்
உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்
காலத்திற்கு எல்லாவிதமான துயரங்களையும் ஆற்றும் சக்தி உள்ளது. உங்களிடம் நீங்களே மென்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களைத் தற்போதைய நிலையில் காயப்படுத்தி இருக்கும் வலி மற்றும் காயங்கள், காலப்போக்கில் தானாகவே குறையும்.
மற்றவர்களுக்கு உதவுங்கள்
பிறருக்கு உதவி செய்வதனால், உங்களுக்குள் சிறந்த உணர்வு உருவாகும். நீங்கள் பிறருக்கு உதவும்போது, அது உங்களது சுயமரியாதையை மேம்படுத்தவும், உங்களை நீங்களே நன்றாக உணரவும் உதவும். தொண்டு நிறுவனங்களில் இணைந்து தன்னார்வலராகவும் பணியாற்றலாம்.
உதவி கேட்கவும் தயங்காதீர்கள்
நீங்கள் சோர்வுடன் இருப்பதாக உணர்ந்தால், உடனே, அதிலிருந்து விடுபடும் பொருட்டு, மற்றவரின் உதவியை நாடுங்கள். இது உங்களை மனரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் பேசாதவரை, உங்களது கஷ்டங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்பதை உணருங்கள். அன்புக்குரியவரிடம் பேசுவது மன பாரத்தைக் குறைக்கும்.
இத்தகைய வழிமுறைகளைக் கையாண்டு, மனநல ஆரோக்கியத்தைப் பேணிக் காத்து நல்வாழ்க்கை வாழ்வீராக….