மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்கள்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவரா? உங்கள் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி போன்ற விவரங்கள் டி.என்.ஏ.வில் உள்ளது தெரியுமா?
மரபணுச் சோதனை வேகமாக வளர்ந்து வரும் துறை. இது உடல்நலம், சாத்தியமான நோய்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. உங்கள் மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம், எதிர்கால பாதிப்புகளை முன்கூட்டியே அறியலாம்.
மரபணுச் சோதனை
மரபணுச் சோதனை என்பது, உங்களின் தனித்துவத்தைக் காட்ட உதவும் சோதனை எனலாம். இந்தச் சோதனையில், டி.என்.ஏ. பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இரத்தம், உமிழ்நீர் உள்ளிட்டவற்றில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைப் பயன்படுத்தி, இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாதிரிகள், குறிப்பிட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு பகுப்பாய்வு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தச் சோதனையானது சாத்தியமான நன்மைகளை வெளிப்படுத்துகிறது. இது முடிவுகள் நேர்மறை அல்லது எதிர்மறை என்பதைப் பொருட்படுத்தாமல் செய்யப்படுகிறது.சோதனையின் முடிவுகள் எதிர்மறையாக இருப்பின், தேவையற்ற சோதனைகளையும், அதன்மூலமான காலவிரயத்தையும் தடுக்கலாம்.
உங்களது மரபணுக்களில் ஒளிந்து உள்ள தகவல்களை, இதன்மூலம் அறிய முடியும்.
இரத்தம், உமிழ்நீர், துணி உள்ளிட்ட மாதிரிகளில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.க்களைப் பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் வரக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய இயலும்.
உடற்பருமன், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை வருவதற்கு முன்னரே கண்டறிய இந்தச் சோதனைப் பயன்படுகிறது.
மருத்துவ நிலைகள் மற்றும் அதன் பண்புகளுக்கான மரபணுக் குறிப்பான்களைக் கண்டறியவும் உதவுகிறது.
மரபணுச் சோதனைகளின் வகைகள்
மக்களின் பயன்பாட்டைப் பொறுத்து பல்வேறு வகையான மரபணுச் சோதனைகள் உள்ளன. அவையாவன..
குறைபாட்டைக் கண்டறியும் சோதனை
நீங்கள் குறிப்பிட்ட வகையான அறிகுறிகளை உணரும்போது, அந்த மரபணுக் குறைபாடு தானா என்பதை உறுதிப்படுத்த இந்தச் சோதனை உதவுகிறது.
அறிகுறிக்கு முந்தையச் சோதனை
பாதிப்பின் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பாகவே, அபாயத்தை அதிகரிக்கவல்ல மரபணு மாற்றங்களை அடையாளம் காண, இந்தச் சோதனைகள் பயன்படுகின்றன.
கடத்திச் சோதனை
கர்ப்பிணிகளிடையே மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையானது, தாயிடம் காணப்பட்ட மரபணு மாற்றம், குழந்தைக்கும் கடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய இந்தச் சோதனை உதவுகிறது.
மருந்தியல் சோதனை
நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், உங்களது மரபணுக்களை எந்தவிதத்தில் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிய உதவுகிறது. இதன்மூலம், சிகிச்சைத் திட்டங்கள் மேம்படுத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க : மனநல மதிப்பீடுகளின் முக்கியத்துவம் அறிவோமா?
மரபணுச் சோதனையின் மூலம், மிகத் துல்லியமாகக் கண்டறியப்படும் நோய்ப் பாதிப்புகளின் வகைகள்
உடற்பருமன்
எலும்பு மற்றும் மூட்டு இணைப்புகளில் ஏற்படும் குறைபாடுகள்
மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோய்
இதய நோய்களின் பாதிப்புகள்
சோரியாசிஸ்
ஆர்த்ரைட்டிஸ்
வளர்சிதை மாற்ற குறைபாடுகள்
கண்களில் ஏற்படும் குறைபாடுகள்
தைராய்டு
டிஸ்லெக்ஸியா எனப்படும் மூளைக் கோளாறு
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்
பார்க்கின்சன் நோய்ப்பாதிப்பு
இரைப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
மகப்பேறு தொடர்பான குறைபாடுகள்
நரம்புகள் சார்ந்தக் குறைபாடுகள்
சுவாசப் பாதிப்புகள்
தோல் பாதிப்புகள்
ஹார்மோன் பற்றாக்குறை மற்றும் அளவு மாறுபாடுகளால் ஏற்படும் நோய்ப் பாதிப்புகள்
உணர்திறன் மற்றும் சகிப்புத்தன்மை அற்ற நிலை
மரபணுச் சோதனையானது, எதிர்காலத்தில் வர வாய்ப்பு உள்ள நோய்ப் பாதிப்புகளை, முன்கூட்டியே கண்டறிய உதவுவதால், அதற்குரிய சிகிச்சைகளை விரைந்து பெற உதவுகிறது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இது உதவுகிறது.