மன அழுத்தப்பாதிப்பால் அவதியா? – இதைப் படிங்க முதல்ல!
இன்றைய அவசரகதியிலான போட்டி உலகில், மன அழுத்த பாதிப்பு எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. இது உடல்நலனை மட்டுமல்லாது மனநலத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றது. மன அழுத்த பாதிப்பின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்வதற்கு, மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகிறது. இந்தக் கட்டுரையில், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான உத்திகள் குறித்துக் காண்போம்.
மன அழுத்த மேலாண்மை
நம் வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களால், மனதினில் ஏற்படும் மன அழுத்த பாதிப்பைக் குறைப்பது மட்டுமல்லாது அதனைக் கட்டுப்படுத்த உதவும் உத்திகளை உள்ளடக்கியப் பிரிவையே, மன அழுத்த மேலாண்மை என்கிறோம். மன அழுத்த பாதிப்பிற்கான தூண்டுதல்களை அடையாளம் காணுதல், அது நம்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிதல் மற்றும் இதுதொடர்பான அறிகுறிகளைப் போக்கும் வகையிலான நடவடிக்கைகள், மன அழுத்த மேலாண்மையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
அதன் முக்கியத்துவம்
மன அழுத்த மேலாண்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிப்பதால், செயல்களில் கவனம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்படும். உயர்ந்த வாழ்க்கைத்தரம் மற்றும் உறவுகளில் மேம்பட்ட நிலை ஏற்பட, மன அழுத்தத்தின் அளவைக் குறைத்துக் கொள்வது முக்கியமாகும்.
மன அழுத்த பாதிப்பிலிருந்து ஒருவர் மிக விரைவில் விடுபட ஆயுர்வேத மருத்துவ முறைகள் யோகாப் பயிற்சிகள் உள்ளிட்டவை, முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இதுமட்டுமல்லாது, பின்வரும் உத்திகளையும் கவனமாகக் கையாண்டு, மன அழுத்த பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
மன அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடும் உத்திகள்
சுவாசப் பயிற்சி
சுவாச நிகழ்வு மெதுவாகவும், அதேசமயம் நன்றாக மூச்சை இழுத்துவிடும் போது, உடலின் இதயத்துடிப்பின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் விகிதம் குறைந்து காணப்படும். பிராணாயாமா முறையிலான சுவாசப் பயிற்சியின் மூலம், மனப்பதட்டத்தைக் குறைக்க இயலும். யோகா கலையில், மூக்கின் ஒரு பகுதி வழியாகச் சுவாசிக்கக் கற்றுத் தரப்படுகிறது. உடல் மற்றும் மனதைச் சமநிலைப்படுத்த அக்குபஞ்சர் முறை உதவுகிறது.
பிடித்த இசையைக் கேட்டல்
நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் ஒரு இடத்தில் இருக்கும்போது, அந்த இடத்தில் உங்களுக்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கும் பட்சத்தில், அந்த இறுக்கமான மனநிலையில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள். நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன், கிளாசிக்கல் வகைப் பாடல்களைக் கேட்டால், அன்றைய இரவில் ஆழ்ந்த, சுகமான உறக்கத்தை அனுபவிப்பீர்கள்.
வழக்கமான உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சிகள் மேற்கொள்வது என்பது மன அழுத்தத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது, உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஏரோபிக் உடற்பயிற்சி, பளு தூக்குதல், யோகா உள்ளிட்ட பயிற்சிகளில் உங்களால் முடிந்த அளவிலான இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சியானது, நமது உடலில் எண்டோர்பி ஹார்மோனைச் சுரக்க உதவுகிறது. இந்த எண்டோர்பின் ஹார்மோனானது, நம் மனதை அமைதியாகவும், நேர்மறை மனநிலையுடனும் இருக்க வைக்கும்.
ஆரோக்கியமான உணவுமுறை
உடலுக்கு ஆரோக்கியம் தரவல்ல உணவு வகைகள், மன ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மேம்பட்ட மனநிலையை உருவாக்கவும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், ஆரோக்கியமான உணவு வகைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலுக்கு ஊறு விளைவிக்கும் துரித உணவு வகைகளை நீங்கள் விரும்பலாம். ஆனால், அந்த நேரத்தில் மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதன் மூலம், உடல்நல ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.
நடைப்பயிற்சி அவசியம்
மிகுந்த மன அழுத்தத்தை உணரும்போதோ அல்லது எதிலும் போதிய கவனம் செலுத்தமுடியாவிட்டாலோ, சிறிது தொலைவு காலார நடந்துச் செல்லுங்கள். இது உங்களுக்கு மிகுந்தப் பலனளிக்கும்…
ஆதவனை ஆராதியுங்கள்
வானிலைச் சாதகமாக இருக்கும்பட்சத்தில், வெளியிடத்திற்கு வர வேண்டும். சூரியனை நேராகப் பார்க்க வேண்டும். பிரகாசமான ஒளியானது, மன இறுக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.
கைகளுக்கு ஒத்தடம் அளியுங்கள்
நீங்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் போது, உடனடியாக மனதிற்கு அமைதியளிக்கும் பொருட்டு, கைகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமல்லாது, தோள் பகுதிகள், கழுத்து, உச்சந்தலை உள்ளிட்ட பகுதிகளில் லோஷனைப் பயன்படுத்த வேண்டும். கட்டை விரலிம் கீழ்ப்பகுதியில் உள்ள தசைப்பகுதியை முதலில் மெதுவாகவும், பின்பு அழுத்தம் கொடுத்துப் பிசைந்தால், தீர்வு கிடைக்கும்.
இறங்குவரிசையில் எண்ண வேண்டும்
உங்கள் மனதில் அதிகப்படியான கவலைகள் இருக்கும்பட்சத்தில், நீங்களே ஒரு எண்ணை இலக்காக வைத்துக்கொண்டு, இறங்குவரிசையில் எண்களைச் சொல்லிவர வேண்டும். அடுத்து சொல்ல வேண்டிய எண் குறித்த ஆர்வத்தினாலேயே, மன அழுத்தத்தின் பாரம் குறைந்து விடும்.
மேலும் வாசிக்க : உறக்கத்தைக் கண்காணிக்கும் வகையிலான சாதனங்கள்
கை, கால்களை நீட்டி அசைக்கவும்
நீங்கள் ஒரே இடத்தில் அதிகமான நேரம் அமர்ந்து கொண்டு இருக்கும்பட்சத்தில், மன அழுத்தம் அதிகரித்துத்தான் காணப்படும். இந்த நிலையில், இருக்கும் இடத்தை விட்டு எழுந்து, தோள்பட்டையைச் சுழற்ற வேண்டும், கை, கால்களை நீட்டி அசைப்பதன் மூலம், உடல் புத்துணர்ச்சி அடைவதை உணர முடியும்.
யோகாப் பயிற்சி
உங்களது மனம் அங்கும் இங்கும் அலைபாய்கின்றதா? தரையில் படுத்தநிலையில், கால்களை உயர்த்தி அருகில் உள்ள சுவற்றின் மீது வைக்கவும். யோகாப் பயிற்சியில், இந்த நிலைக்கு, விபரிதி கிரானி நிலை என்று பெயர். இந்த நிலையில் சில நிமிடங்கள் நீடித்தால், உங்கள் மனம் அமைதி பெறும்.
தியான பயிற்சி
காலை மற்றும் மாலை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை 5 நிமிடம் மட்டுமே தியான பயிற்சியை மேற்கொண்டு வந்தால், மன அழுத்தம், மனச்சோர்வு இருந்த இடம் காணாமல் போய் விடும். அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு, தியான பயிற்சி மேற்கொள்ளும் போது, சுவாசம் எளிதாவதோடு, கவலைகள் மறக்கடிக்கப்படுவதை உணரலாம்.
வாய்விட்டுச் சிரியுங்கள்
மன அழுத்தத்தை எளிமையான முறையில் போக்கவல்லப் பயிற்சியாக, சிரிப்பு முறை விளங்குகிறது. இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
மன அழுத்த பாதிப்பைத் தவிர்க்க முடியாதது தான் என்றபோதிலும், இது உடல் மற்றும் மனநலனை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. உடற்பயிற்சி, செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது உள்ளிட்ட பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து நன்மை அளிப்பவையாக உள்ளன.