தொலைமருத்துவம் – நன்மைகள் மற்றும் அதன் எதிர்காலம்
நீங்கள் வீடியோ அழைப்புகளின் வாயிலாக நண்பர்கள், உறவினர்களிடம் அளவளாவுகிறீர்கள். இந்த நவீன யுகத்தில் இத்தகைய இனிமையான பொழுதுபோக்கு அதிகரித்துள்ளது.
இந்தத் தொலைநுட்ப வசதியையே, சுகாதாரச் சேவைகளுக்குப் பயன்படுத்தினால், அதுவே தொலைமருத்துவம் எனப்படும் டெலிஹெல்த் சேவை ஆகும்.
கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தத் தொலைமருத்துவ சேவையே பெருமளவிற்குக் கைகொடுத்தது எனலாம். இந்தத் தொலைமருத்துவ சேவையின் நன்மைகள், எதிர்காலத்தின் அதன் பங்களிப்பு உள்ளிட்டவைகளை விரிவாகக் காண்போம்.
நோயாளிகளுக்குத் தொலைதூரப் பராமரிப்பை வழங்கும் பொருட்டு, தொலைதொடர்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அளிக்கப்படும் மருத்துவச் சேவைகளை விரிவாக விளக்கப் பயன்படும் பதமே டெலிஹெல்த் எனப்படும் தொலைமருத்துவம் ஆகும்.டெலிமெடிசின் பிரிவில், நோயாளிகளுக்கு ஆலோசனைகள் மட்டும் வழங்கப்படும் நிலையில், டெலிஹெல்த் பிரிவில், தொலைதூரச் சுகாதாரக் கல்வி மற்றும் அதற்கான திட்டமிடல் உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளும் இதில் அடங்கி உள்ளன. அறுவைச் சிகிச்சைத் தேவைப்படும் நிகழ்வுகளுக்கு, இந்த டெலிஹெல்த் முறையானது பலனளிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம் ஆகும்.
இந்த டெலிஹெல்த் சேவைகள் மேற்கொள்ளும் முறையானது, மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடலாம். நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை, பாதுகாப்பாக வழங்கும் வகையில், மருத்துவ நிபுணர்கள், வீடியோ கான்பரன்சிங், மீடியா ஸ்டிரீமிங், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவைகளின் உதவியை நாடுகின்றனர்.
நன்மைகள்
சுகாதாரச் சேவைகள் அணுகுமுறையை அதிகரிக்கிறது
கிராமப்புற மக்கள் மற்றும் வறிய சமூகங்களில் உள்ள மக்களுக்கு, இந்த நவீனக் காலத்திலும் தேவையான மருத்துவ வசதிகளைப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இவர்கள் போதிய மருத்துவச் சேவைகளைப் பெற வேண்டும் என்றால், அதிகத் தொலைவிற்குப் பயணிக்க வேண்டும் இல்லையெனில், அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே கிடைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற உந்தப்படுகின்றனர். கிராமப்புற மற்றும் வறிய சமூக மக்களிடம், அதிகத் தொலைவிற்குப் பயணம் செய்து மருத்துவச் சேவைகளைப் பெறும் அளவிற்கு அவர்களிடம் பொருளாதார வசதி இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
மருத்துவர்களுடனான சந்திப்பை எளிமையாக்குகிறது
தொலைமருத்துவச் சேவையில்,தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகள் நேரடியாக மருத்துவரைச் சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தேவையில்லாத அலைச்சல்கள் தவிர்க்கப்படுகின்றன. நீண்ட நேரமாகக் காத்திருத்தல், போக்குவரத்துக் களைப்பு உள்ளிட்டவைகள் களையப்படுகின்றன.
திருப்தி உணர்வை அதிகரிக்கிறது
தொலைமருத்துவச் சேவையில் மருத்துவ ஆலோசனைகளை, நோயாளிகள் பெறும்போது, அதன் முடிவில், அவர்களிடம் அதுகுறித்த கருத்துகள் கேட்கப்படுகின்றன. இந்தக் கருத்துகளை, நோயாளிகள் தொலைநிலைச் சேவைகளின் மூலமாகவே அளித்திட முடியும். வழக்கமான நோயறிதல் நிகழ்வைக் காட்டிலும், கண்காணித்தல், குறைபாடுகளைக் களைதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, தொலைமருத்துவம் பேருதவி புரிவதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
தொலைமருத்துவம் முறையில், மருத்துவர்க் குறைந்த நேரத்திலேயே அதிக நோயாளிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்க முடியும். இது மருத்துவரின் கவனிப்பின் தரம் குறைவாக இருக்கும் என்று சிலர்க் கருதினாலும், பெரும்பாலான நோயாளிகள், மருத்துவர்களை நேரில் சந்திப்பது போன்றே, இந்த முறையிலும் உணர்வதாகக் குறிப்பிட்டு உள்ளனர். தொலைமருத்துவம் முறையில் மருத்துவச் சேவைகளைப் பெற்ற 25 சதவீத நோயாளிகள், தாங்கள் உயர்தரச் சிகிச்சையைப் பெற்றதாகத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பணத்தைச் சேமிக்கின்றது
தொலைமருத்துவம் முறையானது,அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பணத்தைச் சேமிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாது, மருத்துவச் சேவைகளைப் பெறும் பொருட்டு, விடுமுறை எடுப்பது, நோயாளியின் பராமரிப்பிற்காக, பணம் செலுத்துவது உள்ளிட்ட நிர்ப்பந்தங்களை, மக்களுக்கு ஏற்படுத்துவதில்லை.நோயாளிகள், தங்களுக்கு வசதியான நேரத்தில், இருந்த இடத்திலேயே, அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளைப் பெற உதவுகிறது.
மருத்துவச் சேவையில் தொலைமருத்துவத்தின் பயன்பாடுகள்
தொலைமருத்துவ முறையானது, பல்வேறு மருத்துவச் சேவைகளில் பயன்படுகின்றன.
முதல்நிலைப் பராமரிப்பு
சளி, ஒவ்வாமை, சிறிய தொற்றுப் பாதிப்புகள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளை நிர்வகிக்கும் பொருட்டு, மருத்துவரிடம் மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் இப்பிரிவில் அடங்குகின்றன.
மனநல ஆரோக்கியம் சார்ந்த சேவைகள்
நாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, மனநலம் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கான விரும்புபவர்களுக்கு, டெலிசைக்கியாட்ரி மற்றும் டெலிசைக்காலஜி உள்ளிட்ட தொலைமருத்துவ முறைகள், தக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.
தோல் சிகிச்சையியல்
தோல் பாதிப்புகள் சார்ந்தப் படங்கள் மற்றும் வீடியோக்களை, மருத்துவர் ஆய்வு செய்து, அதன் பாதிப்பு நிலைகளைக் கண்டறிந்து, அதற்கேற்பச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. முகப்பருக்கள் மற்றும் தடிப்புகள் உள்ளிட்ட சிக்கல்களைத் திறம்படக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள உதவுகிறது.
மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியத்திற்கான செயலியின் தனியுரிமை
தொலைநிலைக் கண்காணித்தல்
நாள்பட்ட பாதிப்பு நிலைகளின் நிகழ்நேரக் கண்காணிப்பை, தொலைநிலைக் கண்காணிப்பு முறையில் மேற்கொண்டு, சரியான நேரத்தில் உரியச் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவுகிறது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீட்பைக் கண்காணிக்கவும், சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான சோதனைகள் மேற்கொள்வதையும் எளிதாக்குகின்றது.
தொலைமருத்துவத்தின் எதிர்காலம்
மருத்துவச் சேவைகள் வழங்கும் பிரிவில், தொலைமருத்துவம் நீண்டகாலமாக இருந்தபோதிலும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்று கூற வேண்டும். மருத்துவமனையின் உதவி இல்லாமல், நோயாளிகளை, மருத்துவர்த் தொழில்நுட்ப உதவியுடன் சந்தித்து அவர்களுக்கு உண்டான பாதிப்பிற்கான தீர்வைப் பெறுவதே, இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு இடையே, மாறி வரும் மருத்துவச் சேவைகளில் தொலைமருத்துவ முறையானது,முக்கியமான மைல்கல்லாக விளங்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.