புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்
சர்வதேச அளவில், அதிக மரணங்களை விளைவிக்கும் நோய்ப் பாதிப்பாக, புற்றுநோய் விளங்கி வருகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளித்தால், மரண விகிதத்தைக் குறைக்கலாம்.ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால், சிகிச்சை எளிதாகி, நோய் பரவுவதையும் தடுக்கலாம். புற்றுநோய்ப் பாதிப்பு, துவக்க நிலையிலேயே இருப்பவர்களுக்கு, மிதமான அளவிலான சிகிச்சையே போதுமானது ஆகும். நோயின் பாதிப்பு 3 அல்லது நான்காம் நிலைகளை அடையும் போதுதான், அறுவைச் சிகிச்சை அல்லது கதிரியக்கச் சிகிச்சை முறையானது அவசியமாகிறது. புற்றுநோய்ப் பாதிப்பிற்கு இரண்டு அல்லது மூன்று விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. இந்தியாவில் நிகழும் புற்றுநோய் மரணங்களில் 50 சதவீதம், தாமதமான சிகிச்சை நடவடிக்கைகளினாலேயே நிகழ்வதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கிரீனிங் சோதனைகளின் மூலம், புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதுமட்டுமல்லாது, வழக்கமான உடல் பரிசோதனைகள், வழக்கத்திற்குமாறான அறிகுறிகள் காணப்படுதல், சுயப் பரிசோதனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலமும், புற்றுநோய்ப் பாதிப்பை, நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி,தொற்றுப் பாதிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளுதல், மது மற்றும் புகையிலையைத் தவிர்த்தல் ஆகியவைப் புற்றுநோயின் தீவிரத்தைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
புற்றுநோயின் அறிகுறிகள்
புற்றுநோய்ப் பாதிப்புகள் பலவகையாக உள்ளன. அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. புற்றுநோயின் வகைகள் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடுகின்றன.
கட்டிகள்
விவரிக்க முடியாத எடை இழப்பு
சோர்வு உணர்வு
குடல் புண்கள்
வலி உணர்வு
குடல் பகுதியில் ஏற்படும் குறைபாடுகள்
இரத்தப்போக்கு (Bleeding)
காய்ச்சல்
இவைகள், புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்படும்பட்சத்தில், புற்றுநோய் நிபுணர் அல்லது மருத்துவரைப் பார்ப்பது நலம்.
முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவம்
புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், சிகிச்சை வெற்றிகரமாக நடக்க ஏதுவாக அமைவது மட்டுமல்லாது, தகுந்த பலனும் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.
முன்கூட்டியே கண்டறிதல் என்றால் என்ன?
புற்றுநோயின் ஆரம்ப நிலைகளை அடையாளம் காண்பதே முன்கூட்டியே கண்டறிதல் ஆகும்.எந்தவொரு நோய்ப்பாதிப்பையும், அதன் அறிகுறிகள் தோன்றும் போதே, அதற்குரிய சிகிச்சைகளை அளித்தோமே என்றால், அந்தப் பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெற முடியும். இந்தக் கோட்பாடானது, புற்றுநோய்ப் பாதிப்பிற்கும் பொருந்தும்.
நன்மைகள்
இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது
புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், உரிய சிகிச்சைத் தக்கநேரத்தில் வழங்கப்படுவதால், நோயாளிகளின் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. தாமதமான சிகிச்சைகளின் காரணமாகவே, அதிகளவிலான மரணங்கள் ஏற்படுகின்றன.
எளியமுறையிலான சிகிச்சை
புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதால், கதிரியக்கம் போன்ற கடினமான சிகிச்சைகள் தேவைப்படாமல், எளிய முறையிலான சிகிச்சைகளின் மூலமாகவே, தீர்வு பெற முடிகிறது. இந்த எளிய சிகிச்சைகளின் மூலம், உடலுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
குறைவான செலவினம்
நோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், எளிமையான சிகிச்சை முறைகளே போதும் என்பதால், குறைவான செலவினம் மட்டுமே ஏற்படுகின்றது.
புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் முறைகள்
ஸ்கிரீனிங் சோதனைகள்
எவ்வித அறிகுறிகள் தென்படாத நிலையிலும், ஒரு ஆரோக்கியமான நபரை, புற்றுநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்துவதே, இச்சோதனை ஆகும்.
மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய மேமோகிராம் சோதனை
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைக் கண்டறிய பேப் ஸ்மியர்ஸ் சோதனை
பெருங்குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய கொலோனோஸ்கோபி
நுரையீரல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய குறைந்த டோசேஜ் சிடி ஸ்கேன் சோதனைகள் உள்ளிட்டவைகள், இந்த ஸ்கிரீனிங் சோதனை முறையில் அடங்கும்.
முன்கூட்டியே நோயறிதல்
அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அதற்குரிய குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், இதன்மூலம் நோய்ப்பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
சவால்கள்
அனைவராலும் எளிதாக அணுகமுடியாத நிலை
சிலவகையான ஸ்கிரீனிங் சோதனைகளுக்கு, அதிகளவிலான செலவு ஆவதால், அனைத்துத் தரப்பு மக்களாலும், இத்தகையச் சோதனைகளைப் பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.
உளவியல் ரீதியான தாக்கங்கள்
ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் சோதனைகளின் முடிவுகள் எதிர்மறையாக வரும்பட்சத்தில், பெரும்பாலானோருக்கும், மனப்பதட்டம் மற்றும் மன இறுக்க உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. இத்தகைய நபர்களுக்கு, நல்ல அனுபவமிக்க உளவியல் நிபுணர்களைக் கொண்டு கலந்தாலோசனை நடத்தி, அவர்களுக்கு உரிய நம்பிக்கையினை விதைப்பது அவசியம் ஆகும்.
புற்றுநோயைக் கண்டறிதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
திரவ பயாப்ஸிகள்
திரவ பயாப்ஸி சோதனைகளின் மூலம், புற்றுநோய்க் கட்டியின் DNA அல்லது செல்களைக் கண்டறிய முடியும். இது முன்கூட்டியே கண்டறிதல் நிகழ்வை எளிதாக்குகிறது.
துல்லியமான மருத்துவம்
மரபணு திடீர்மாற்றம் அடிப்படையிலான ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் சிகிச்சை உத்திகள் கையாளப்படுவதனால், துல்லியமான மருத்துவம் தற்போது சாத்தியமாகி உள்ளது.
மேலும் வாசிக்க : இதயச் செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் முறைகள்
செயற்கை நுண்ணறிவு
சோதனையின் முடிவுகளைச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளின் மூலம், பகுப்பாய்வு மேற்கொண்டு, புற்றுநோய்ப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவும், நோயறிதல் நிகழ்வை வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் உதவுகிறது.
நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் முறையானது எதிர்காலத்தில் நிகழப்போகும் பாதிப்புகளைத் தடுக்கவல்ல மருத்துவ நடவடிக்கையாக அமைகிறது. வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவர்களுடனான கலந்தாலோசனை உள்ளிட்டவை, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர், அதற்கான சிகிச்சைகளைக் கண்டறிய உதவுகின்றன. மருத்துவத் துறையில் ஏற்பட்டு உள்ள அறிவியல் முன்னேற்றங்களின் மூலம், நோயாளிகள், அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற அளவிலான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்வதற்கான வழிவகை ஏற்பட்டு உள்ளது.
புற்றுநோய்ப் பாதிப்பைத் தகுந்த சோதனைகளின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, அதன் பேரிடர்ப் பாதிப்புகளில் சிக்காமல், நல்வாழ்க்கை வாழ்வோமாக…