நேர மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தும் வழிமுறைகள்
“நேரம் என்பது பணத்தைப் போன்றது ஆகும்”, இதை நிர்வகிப்பது கடினமாக இருந்தாலும், நேர மேலாண்மை வடிவமைப்பது இலகுவானது.நீங்கள் நேரத்தைத் தேவையில்லாமல் வீணடிக்கும்பொழுது, நஷ்டமடையப் போகிறீர்கள் என்று உள்மனது எச்சரிக்கைச் செய்ய வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்..
சரியான திட்டமிடல் இல்லாததால், திட்ட அறிக்கைச் சமர்ப்பிப்பு நிகழ்வில் ஏற்படும் காலதாமதத்தால், பல முக்கிய ஒப்பந்தங்களை, வணிக நிறுவனங்கள் இழந்த வரலாறு உண்டு. நேரத்தின் மதிப்பையும், நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் அறிந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு, நேரத்தை நிர்வகிக்கத் தேவையான பயிற்சிகளை வழங்குகின்றன.
“நேர மேலாண்மை” என்பது ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது .இதுமட்டுமல்லாது, மன அழுத்தம் இல்லாத சூழலையும் உருவாக்க உதவுகிறது.
2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின்படி, நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 நிமிடங்கள் கால அளவில் நேர மேலாண்மைத் திட்டமிடலை மேற்கொள்வதன் மூலம், தினசரி 2 மணிநேரத்தைச் சேமிக்க முடியும். திறமையான நேர நிர்வாகத்திற்கு, அதற்கான நுட்பங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வது அவசியமானது ஆகும்.
நேர மேலாண்மைக்கு நிகரான சொற்கள்
செயல்திறன்
திட்டமிடுதல்
உற்பத்தித்திறன்
திட்டமிடல்
உகப்பாக்கம் உள்ளிட்டவைகள் ஆகும்
நேர மேலாண்மையின் முக்கியத்துவம்
நேர மேலாண்மைத் திறன்கள், நேரத்தைக் கவனமாகவும் அதேசமயத்தில் எவ்வித விரயமும் இல்லாமல் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த உதவுகின்றன. நம் நேரத்தின் அருமையை நாம் உணரும்போது, பொறுப்புத்தன்மை வந்துவிடுகிறது. இதன்காரணமாக, உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்துகிறோம். இதன்விளைவாக, உற்பத்தித்திறன் அதிகரிக்கின்றது. நேர மேலாண்மை, உங்களது அடித்தளத்தை வலுவாக்குகிறது.
நேர மேலாண்மையைத் திறம்பட பின்பற்றுவதால் பின்வரும் நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை மேம்பாடு
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் மிக முக்கியமான விசயங்களுக்கு, நேரத்தைச் செலவழித்து, அதன்மூலம் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திக் கொள்வது ஆகும்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பு
உங்கள் முன் இருக்கும் வேலைகளை, அதன் முன்னுரிமை அடிப்படையில் பிரித்து மேற்கொள்வதன் மூலம், குறைந்த நேரத்திலேயே, அந்த வேலைகளை முடிக்க இயலும். இது உங்கள் இலக்குகளை விரைவாக அடைய உதவுவதோடு, உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச் செய்கின்றது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
சரியான நேர திட்டமிடல் மூலம், கடைசிநேரப் பரபரப்பு தவிர்க்கப்பட்டு, முன்கூட்டியே செய்யப்படும் வேலைகள் மன அழுத்தத்தைத் தடுக்கின்றன.
திறமையான அதிகாரப் பகிர்வு
நேர நிர்வாகத்தை அறிந்தவர்கள், இந்தப் பணிகளை, இன்னாரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்து உள்ளனர். இதனால், அவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டுவது மட்டுமல்லாது, முக்கியப் பணிகளை மேற்கொள்ள நேரமும், திறனும் கிடைக்கின்றன.
வள மேலாண்மை மேம்பாடு
நேர மேலாண்மைத் திறன்களின் மேம்பாடு குறித்து நீங்கள் அறிந்திருக்கும் பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்டகால அளவிலான இலக்குகளை அடையும் பொருட்டு, மனித வளத்தை அதிகமாக ஈடுபடுத்த முயற்சிப்பீர்கள்.
முக்கியமான நேர மேலாண்மைத் திறன்கள்
நேர மேலாண்மைத் திறன்களை மேம்படுத்த நினைப்பவர்கள், இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.
முன்னுரிமை அளித்தல்
மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியலைத் தயாரிப்பதன் மூலம், நேர மேலாண்மைத் திறன்கள் மேம்படத் துவங்குகிறது. முதலில் எந்தப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்வதன் மூலம், நேரத்தையும் சரியாக நிர்வகிக்க இயலும்.
முன்னுரிமை அளித்து முதலில் மேற்கொள்ள வேண்டிய பணிகளின் பட்டியலைத் தயாரிக்கப் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் மதிப்பிட வேண்டும்.
பணிகள் பகிர்வு
நேர மேலாண்மைத் திறன்களின் முக்கியமான நடவடிக்கையாக, பணிகள் பகிர்வு விளங்கி வருகிறது. ஊழியர்களின் திறமைகள், அவர்களின் நிபுணத்துவம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பணிகளை ஒதுக்குவது, சிக்கலான மற்றும் அதிக நேரம் ஆகும் பணிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவது உள்ளிட்டவைகள் இதில் அடங்குகின்றன.
நீங்கள் ஒரு ஊழியரிடம் குறிப்பிட்ட பணியை வழங்க முடிவு செய்துவிட்டால், பணி தொடர்பான நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடவும், தக்க ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவிக்கவும். பணி நிறைவுற்ற நிலையில், அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கவும்.
SMART இலக்குகளை நிர்ணயிக்கவும்
குறிப்பிட்ட காலவரையறைக்குள், குறிப்பிட்ட, அளவிடக்கூடிய, அடையக்கூடிய, யதார்த்தமான மற்றும் பாதுகாப்பான இலக்குகளை அமைக்க வேண்டும். அடைய விரும்பும் இலக்குகளுக்கு ஏற்ற வகையிலான நேரத்தை ஒதுக்குங்கள்.
யதார்த்தமான காலக்கெடு
ஒவ்வொரு நடவடிக்கைக்கும், யதார்த்தமான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், எந்தவொரு சவாலையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.
பலபணிகளைத் தவிர்த்தல்
ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்வதன் மூலம், உற்பத்தித்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். பல்வேறு பணிகளைச் செய்யும் போது, சிறிய அளவிலான தவறுகள் அடிக்கடி நேரும். இதன்காரணமாக, பணிகளில் போதிய கவனத்தைச் செலுத்த முடியாத சூழல் ஏற்படும்.
கவனச்சிதறல்களைத் தவிர்ப்பீர்
பணியில் இருக்கும்போது, மின்னஞ்சல்கள், செய்திகள், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளின் பக்கம் உங்கள் கவனம் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இவை, நேர மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதில் சுணக்கத்தை ஏற்படுத்தி விடும். பணியின் போது, மொபைல் போன பயன்படுத்தலும், கவனச்சிதறல்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகின்றன.
உற்பத்தி நேரத்தைக் கண்டறிதல்
எந்தவொரு பணி நடவடிக்கைகளிலும், உற்பத்தி நேரம் என்பது மிக முக்கியமானது ஆகும். அதைச் சம்பந்தப்பட்ட நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த நேரத்தில், எவ்விதக் கவனச்சிதறலுக்கு உள்ளாகாமல், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
சிறு இடைவேளை அவசியம்
பணிகளுக்கு இடையே, சிறு இடைவேளை எடுத்துக் கொள்வது, உங்களைப் புத்துணர்ச்சியுடன் இருக்கவைப்பதோடு, உடல் அமைப்பை இலகுவாக்குகிறது. பணித் தொடர்பான குறுக்கீடுகளைக் குறைக்கிறது.
நேர மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தலின் நன்மைகள்
நற்பெயரை வழங்குகிறது
காலக்கெடு நிர்ணயித்து, தரமான வேலையைத் திறம்பட முடிப்பதன் மூலம், நேர்மறையான நற்பெயர்க் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.
மேலும் வாசிக்க : உறக்கத்திற்குக் கூட இருக்கா Hygiene? – வாங்க அறிவோம்!
தெளிவான இலக்குகள்
தெளிவான இலக்குகளைக் குறிக்கோளாக அமைத்து, எவ்விதக் கவனச்சிதறலும் ஏற்படாத வகையில், செயல்படுவதற்கு ஏற்ற உந்துதலை வழங்குகிறது.
மேம்பட்ட கவனம்
கவனச்சிதறல்களைக் குறைத்து, பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், செறிவை மேம்படுத்துகிறது.
நீங்கள் எந்த நேர மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்தினாலும், அதன் செயல்படும் விதத்தை மதிப்பீடு செய்யுங்கள். இந்த நேர மேலாண்மை உத்திகளானது, பணிச்சூழல் – வாழ்க்கைக்கு இடையிலான சமநிலையைப் பேணிக்காக்கிறதா, இதன்மூலம், உங்களது முக்கியமான பணிகள் நிறைவேறுகின்றனவா என்பதைக் கண்டறியுங்கள். நேர மேலாண்மைத் திறன்களுக்கான வெற்றி என்பது, திருப்திகரமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.