CBT நுட்பம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துமா?
உங்கள் உணர்வுகள் மற்றும் முடிவுகளில் எண்ணங்கள் எவ்வளவு முக்கியமானவை? இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, சிந்தனைச் செயல்முறையைத் திருப்பிவிடும் அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நுட்பம் என்றால் என்ன?
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நுட்பம் (CBT) என்பது மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பாதிப்புகளுக்குத் தீர்வுகாணும் வகையிலான உளவியல் சிகிச்சை முறை ஆகும். இது சிந்தனைச் செயல்முறை மற்றும் அதுகுறித்த தூண்டுதல் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. மன அழுத்தம் தொடர்பான சூழ்நிலைகளை நிர்வகிக்கவும், நிலைமைகளைச் சமாளிக்கும் வகையிலான ஆரோக்கியமான திறன்களைப் பெறவும், மனநல நிபுணர்கள், இந்தச் சிகிச்சை நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் கோட்பாடுகள்
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் முக்கிய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இங்கே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
குழந்தைப்பருவ அனுபவங்கள்
ஒரு நபரின் முக்கிய ஆளுமைப் பண்புகளை வடிவமைப்பதில், அவரின் ஆரம்பகால நினைவுகளான குழந்தைப்பருவ அனுபவங்கள், முக்கியப்பங்கு வகிக்கின்றன. நீங்கள் உங்கள் குழந்தைப் பருவ சூழலைப் புரிந்துகொண்டால், அது உங்களின் சிந்தனைச் செயல்முறையைக் கூடுதலாகப் புரிந்து கொள்ள உதவும்.
எதிர்மறை உணர்வுகள்
நாம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளைவிட, எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளுக்கே, அதிகளவிலான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். இது அறிவாற்றல் சார்ந்த பிழைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
தன்னிச்சையான எதிர்மறை எண்ணங்கள்
தன்னிச்சையான எதிர்மறை எண்ணங்கள் அறிவாற்றல் சிதைவுகள் எனவும் வரையறுக்கப்படுகின்றன. இவைக் குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிய எதிர்மறை எண்ணங்களாக, சுயமரியாதையைக் குறைத்துப் பயனற்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய எண்ணங்கள் குறுகிய காலத்தில் நிகழ்வதால், இவற்றைச் சுட்டிக்காட்டுவது கடினம்.
தன்னிச்சையான எதிர்மறை எண்ணங்களுக்குச் சில உதாரணங்கள்
தவறைத் தோல்வியாகக் கருதுதல்
மிகையான பொதுமைப்படுத்துதல் செய்தல்
CBT சிகிச்சை முறையின் பயன்பாடுகள்
தினசரி வாழ்க்கையில், பயனுள்ள மாற்றங்களை மேற்கொள்ள, CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறைப் பயன்படுகிறது.
கோபம், பயம், துக்கம், சோகம் போன்ற உணர்ச்சிகளை நிர்வகிக்க உதவுகிறது.
மனநோய் பாதிப்பு மீண்டும் வராமல் காக்கிறது
தொடர்பு சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது
மோதல் நிகழ்வுகளுக்கு உரிய தீர்வினை வழங்குகிறது.
இதுமட்டுமல்லாது,
பொருளின் தவறான பயன்பாடு
உணவுமுறையில் ஏற்படும் பாதிப்புகள்
உறக்க நிகழ்வில் குறைபாடுகள்
பய உணர்வுகள்
மனச்சிதைவு பாதிப்பு
மன உளைச்சலுக்குப் பிந்தைய சீர்குலைவு
உள்ளிட்ட மனநல சிக்கல்களையும் நிர்வகிக்க, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை உதவுகிறது.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் CBT நுட்பங்கள்
வெளிப்பாடு சிகிச்சை
பதட்டத்தைத் தூண்டும் நிகழ்வுகளில், வேண்டுமென்றே அந்த உணர்வினை வெளிப்படுத்துவது, சில பயங்களைச் சமாளிக்க உதவுகின்றன. இந்த வகைச் சிகிச்சையானது, தொழில்முறைச் சிகிச்சையாளரின் வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட கால அளவிற்குள், கண்காணிப்பு சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ABC நுட்பம்
இந்த நுட்பமானது, எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் எதிர்மறைச் சுழற்சியை, நேர்மறையான முன்னோக்குகளாக மாற்ற உதவுகின்றன. இதன்மூலம், எதிர்மறைச் சிந்தனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவது மட்டுமல்லாது, நடத்தை மாற்றத்தையும் மேம்படுத்தலாம்.
மேலும் வாசிக்க : ஃபிட்னெஸ் டிராக்கர்ப் பயன்பாட்டில் இவ்வளவு ஆபத்தா?
Activating agent (செயல்படுத்தும் நிகழ்வு)
உங்களை எதிர்மறைs சிந்தனைக்கு இட்டுச் சென்ற நிகழ்வு ஆகும்.
Belief (நம்பிக்கை)
நிகழ்வின் போது மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணங்கள்
Consequences (விளைவுகள்)
நிகழ்வின் முடிவில் ஏற்பட்ட நடத்தை மாற்றம்
சில நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள எதிர்வினைகளைப் புரிந்து கொண்டு, வாழ்க்கைத்தரத்தை மாற்றி அமைக்க, அந்த எதிர்வினைகளை எவ்வாறு மாற்றலாம் என்பதே, இந்த ABC நுட்பத்தின் முதன்மையான இலக்கு ஆகும்.
தனிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தல்
உங்கள் எண்ண ஓட்டம் மற்றும் உணர்வு பிரதிபலிப்புகளைக் கண்காணித்து, நீங்கள் சிந்திக்கும் விதத்தை நிர்வகிக்கக் கற்றுத்தரும். இதன்மூலம் ,செயலற்ற சிந்தனைமுறைகளை அகற்று சீர்திருத்தப்பட்ட மனநிலையை உரியதாக்கிக் கொள்ள இயலும்.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நுட்பத்தை முறையாகக் கையாண்டு, வாழ்க்கைமுறையை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வீராக…