உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமானது – அறிவோமா?
உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி நிகழ்வானது சிறந்த வழிமுறையாகச் செயல்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், மக்களின் சோம்பேறித்தனத்தின் காரணமாக, அவர்கள் உடற்பயிற்சி நிகழ்வைத் தவிர்ப்பதால், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இளம் வயதினர் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.உடற்பயிற்சி பழக்கமானது உடலுக்கு மட்டுமல்லாது மன ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொள்வதன் மூலம் உடல் எடை மேலாண்மை, உற்பத்தித்திறன் அதிகரிப்பு, உறக்க மேம்பாடு, மன அழுத்த நிர்வாகம், ஹார்மோன் சமநிலை, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல, உடல்நல மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியையும் ஒரு அளவுடனேயே மேற்கொள்ள வேண்டும். மிதமிஞ்சிய உடற்பயிற்சியானது, மூளைக்கு அதீதச் சோர்வை ஏற்படுத்துவதோடு, உடலில் காயங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர அளவிலான உடற்பயிற்சி நேரத்தைக் கண்காணிப்பதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான உடற்பயிற்சி பழக்கத்தைத் தான் கடைப்பிடிக்கிறீர்களா என்பதைக் கண்டறிய இயலும். வாரத்திற்கு, 300 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, பல்வேறு உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
போதிய அறிவு இல்லாமை
இன்றைய இளம் தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், உடற்பயிற்சி குறித்த அவர்களின் அறிவு குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.
உடற்தகுதி இலக்குகளை விரைவில் அடைய, நீண்ட நேர கடின உடற்பயிற்சிகள் உடலின் ஹார்மோன் செயல்பாட்டை மாற்றுகின்றன.இது கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கின்றது.
உடற்பயிற்சிகளைச் சரியாக மேற்கொள்ளும்போது,
சரியான அளவிலான உடல் எடைப் பராமரிப்பு
எண்டோர்பின் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டுகிறது
நீரிழிவு, இதய நோய், அதிக ரத்த கொழுப்புகளின் பாதிப்பைக் குறைக்கின்றது.
ஆஸ்டியோபோரோசிஸ் ( எலும்புகள் பலவீனம்) பாதிப்பைக் குறைக்கின்றது.
உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் ஏற்படும் அபாயங்கள்
பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோன்கள் ஹைப்போதலாமஸ்(H), பிட்யூட்டரி (P) மற்றும் கருப்பை (O) மையப்படுத்தி நிகழ்கின்றன. ஹைப்போதலாமஸ் பகுதியிலிருந்து வெளியாகும் GnRH ஹார்மோனானது, பிட்யூட்டரி பகுதியிலிருந்து சுரக்கப்படும் LH எனும் லூட்டினைசிங் ஹார்மோன் சுரப்பைச் சீராக்குகிறது. இந்த ஹார்மோனானது, கருப்பையில், அண்டவிடுப்பு நிகழ்வைத் தூண்டுகிறது.
மாதவிடாய் காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் கடினமான உடற்பயிற்சிகளால், HPOவின் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, அண்டவிடுப்பு நிகழ்வானது தடைப்படுவதால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுகின்றன. சிலருக்கு 3 சுழற்சிகள் வரைத் தடைபடவும் செய்கின்றன.
கலோரி பற்றாக்குறை உள்ள பெண்களுக்கு, இந்த அதீத உடற்பயிற்சி நிகழ்வானது, மேலும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் வைட்டமின் குறைபாடு, எலும்பின் நிறைக் குறைதல், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
அதீத உடற்பயிற்சி நிகழ்வானது, பெண்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோன்களின் சுரப்பின் அளவைக் கணிசமான அளவிற்குக் குறைத்துவிடுகின்றன.
அதீத உடற்பயிற்சியானது, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஹார்மோன் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதன்காரணமாக, மனநிலை மாற்றங்கள், உறக்க நிகழ்வில் இடையூறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தீவிரமான உடற்பயிற்சிகள், உடலில் ஹார்மோன் நிகழ்வில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதுடன், முடி உதிர்தலுக்கும் காரணமாக அமைகின்றது.
சரியான உடற்பயிற்சி சமநிலையைக் கண்டறிய உதவும் குறிப்புகள்
எந்தவொரு உடற்பயிற்சியானாலும், சிறிய அளவிலேயே துவங்க வேண்டும்.
150 நிமிட அளவிலான மிதமான தீவிரம் கொண்ட பயிற்சிகளே, உங்களது இலக்காக இருக்க வேண்டும்.
தீவிரப் பயிற்சி எனில், வாரத்திற்கு 75 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
உடற்பயிற்சியின் அளவு என்பது உங்கள் உடலின் சோர்வுத்தன்மையுடன் தொடர்புடையதே தவிர, BMI குறியீட்டுடன் தொடர்புடையது அல்ல.
நீங்கள் சோர்வாக உணரும்பட்சத்தில், ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமானது ஆகும்.
உடற்பயிற்சிகளை முடித்தபின், உங்களுக்குச் சிறுநீரானது அடர்பழுப்பு நிறத்தில் வந்தால், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வோர், அவர்களின் சிறுநீரகங்கள் மற்றும் தசைகளைப் பாதுகாக்க. உடலின் நீரேற்ற அளவைக் கண்காணிப்பது அவசியமாகும்.
நீங்கள் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பது மட்டுமே உடற்பயிற்சியின் நோக்கமன்று, நீங்கள் உடல் மட்டுமல்லாது மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
மேலும் வாசிக்க : IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் அறிவோமா?
அதீத உடற்பயிற்சி மேற்கொண்டதற்கான அறிகுறிகள்
திடீரென்று இதயத்துடிப்பின் வீதம் அதிகரித்தல்
உறக்க நிலையில் இடையூறுகள்
மன அழுத்தம் மற்றும் மனப்பதட்டம் அதிகரிப்பு
அதிக வலி, ஆறாத புண்கள்
அடிக்கடி நோய்ப்பாதிப்புகளுக்கு உள்ளாதல்
பெண்கள் எனில், 3 மாதகாலமாக, மாதவிடாய் சுழற்சி வராமல் இருத்தல்
நீங்கள் இந்த அறிகுறிகளை உணரும்பட்சத்தில், மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் அளவைக் கண்காணிப்பது அவசியமாகும்.
உடற்பயிற்சி என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளப்படுவது ஆகும். எதையும் ஒரு அளவுக்கு மேல் மேற்கொள்ளும்பட்சத்தில், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். உடற்பயிற்சிகளைச் சரியான அளவில் மேற்கொண்டு ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக.