ஆன்லைன் சுகாதார மதிப்பீடு முறையை அறிவோமா?
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் கைகோர்த்துள்ளது. இது உடல் ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களை எளிதாக்கியுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மூலம் இதயத்துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, உறக்க நேரம் போன்றவற்றை அளவிட முடிகிறது. யோகாவிற்கு ஸ்மார்ட் விரிப்புகளும், மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்கப் பயோ-ஸ்கார்ப்களும் பயன்படுகின்றன. இவற்றின் மூலம் வீட்டிலிருந்தே சுகாதார மதிப்பீடுகளைச் செய்ய முடிகிறது.
ஆன்லைன் சுகாதார மதிப்பீடு மருத்துவச் சேவைகளில் புதிய அணுகுமுறையாக உள்ளது. இது துல்லியமானதால், நமக்கு இப்போது தேவையானதாக உள்ளது. இதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உடல் ஆரோக்கியம் குறித்த விரிவான தகவல்களைப் பெறலாம். மருத்துவமனைக்குச் செல்லவோ, நீண்ட வரிசையில் காத்திருக்கவோ வேண்டியதில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதில்களை மட்டும் அளித்தால் போதும். உடல் ஆரோக்கியத் தகவல்கள் உங்கள் கணினி அல்லது ஃபோனில் பதிவேற்றப்படும். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. சோதனை முடிவுகள் உடனடியாகக் கிடைப்பதால், பொருத்தமான பரிந்துரைகளும் விரைவில் வழங்கப்படுகின்றன.
செயல்பாடுகள்
ஆன்லைன் சுகாதார மதிப்பீடு என்பது உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறைக் குறித்த விரிவான கேள்விகளைக் கொண்டது. உங்கள் பதில்கள் கணினியில் சேகரிக்கப்பட்டுச் செயலாக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) இந்தத் தரவுகளை மதிப்பீடு செய்து அறிக்கைத் தயாரிக்கிறது. துல்லியமான மதிப்பீட்டிற்கு, கேள்விகளுக்குச் சரியான பதில்கள் அளிப்பது முக்கியம்.
பல இணையதளங்களும் செயலிகளும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்கத் தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களை வழங்குகின்றன.
நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்
ஆன்லைன் சுகாதார மதிப்பீடு முறையின் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
- உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்ல வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கண்டறிய உதவுகிறது.
- உணவுமுறையில் உள்ள ஊட்டச்சத்து இடைவெளிகளை அடையாளம் காண உதவுகிறது.
- ஊட்டச்சத்து இடைவெளிகளுக்கான சப்ளிமெண்ட்களை அடையாளம் காணவும், சரியான உணவுத் தேர்வுகளைப் பரிந்துரைக்கவும் உதவுகிறது.
- உடல் ஆரோக்கிய இலக்குகளை அடைய உதவும் வகையிலான வாழ்க்கைமுறை மாற்றங்களை அடையாளம் காண உதவுகிறது.
- தற்போதைய உடல்நிலையை ஆராய்ந்து, எதிர்காலத்தில் வர வாய்ப்பு உள்ள நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள உதவுகிறது.
- ஆன்லைன் மதிப்பீடுகள், குறைந்த செலவினம் கொண்டதாக உள்ளது.
- தன்விருப்பத்திற்கு ஏற்றாற்போல, மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
- கால அளவு மற்றும் தொழிலாளர்ப் பங்களிப்பைக் குறைக்க உதவுகிறது.
- உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவேடுகளின் பராமரிப்பில் இருந்து விடுதலை அளிக்கிறது.
இன்றைய இயந்திரமயமான, போட்டி நிறைந்த வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.இதன்காரணமாக, உடல்நலம், தனிப்பட்ட ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு, கூடுதல் கவனம் யாரும் செலுத்துவதில்லை. நோய்ப்பாதிப்பின் தீவிரம் அல்லது அறிகுறிகள் கடுமையாகும் போது மட்டுமே மக்கள் மருத்துவமனையை நாடுகின்றனர்.அதற்குமுன்னர், அவர்களுக்கு உடல்நலத்தைப் பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதே இல்லை.
மேலும் வாசிக்க : தொலைநிலை நோயாளிக்கண்காணிப்பின் எதிர்காலம்
இந்த நிலையில், ஆன்லைன் சுகாதார மதிப்பீடுகள் பேருதவி புரிகின்றன. நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு, மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, உடல்நல ஆரோக்கியம் குறித்த மதிப்பீட்டினைப் பெற இயலும். இந்த மதிப்பீட்டின் மூலம், துல்லியமான சோதனைமுடிவுகள் கிடைக்கின்றன. இது உடல்நலம் சார்ந்த தரவுகளை, பாதுகாப்பாகச் சேகரித்து வைப்பதால், பிற்காலத்திலும் ஏதாவதொரு பரிசோதனையின் போது ஒப்பீடு மேற்கொள்ள உதவுகிறது.
ஆன்லைன் சுகாதார மதிப்பீட்டு முடிவுகளை, மருத்துவர் அல்லது சுகாதார வழங்குநரின் உதவியுடன் சரிபார்ப்பது நன்மைபயப்பதாக அமையும்.