அரிப்பு தோல் அழற்சியைத் தடுக்கும் உணவு வகைகள்
தோல் எரிச்சல்,கொப்புளங்களில் கசிவு ஏற்படுதல், அரிப்புகள் மற்றும் வறண்ட திட்டுக்களால் ஏற்படும் குறைபாடே எக்ஸிமா அல்லது அரிப்பு தோல் அழற்சி எனப்படுகிறது.இந்தப் பாதிப்பானது, மருத்துவ அறிவியலில் அடோபிக் டெர்மடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி காரணமாக உருவாகிறது. இது முதலில் தோல் திட்டுகளாகத் தோன்றுகிறது. இரண்டு வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளிடையே, இது அதிகம் காணப்படுகிறது. இளைய வயதினர் மற்றும் பெரியவர்களிடம் , இந்தப் பாதிப்பு குறைவாகவே உள்ளது. சுற்றுச்ச்சூழல் மற்றும் பரம்பரைக் காரணிகள், இந்த அரிப்பு தோல் அழற்சிப் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், ஷாம்பூ வகைகள், துணிகள், செல்லப்பிராணிகளிடம் பழகுதல், மகரந்தத் துகள்கள், உணவு ஒவ்வாமை, காலநிலை மாற்றம், ஹார்மோன்கள், மன அழுத்தம் உள்ளிட்டவைகளாலும், இந்தப் பாதிப்பானது ஏற்படுகிறது.
இந்தப் பாதிப்பின் அறிகுறிகள், நபருக்கு நபர் வேறுபடுகின்றன. இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். வீக்கத்தை ஏற்படுத்தாத வகையிலான உணவு வகைகள், இதன் அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அரிப்பு தோல் அழற்சிப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், உணவு ஒவ்வாமையாலேயே பாதிக்கப்படுகின்றனர். சில வகை உணவுகள் இதன் பாதிப்பைக் குறைக்கும் அதேவேளை, பெரும்பாலான பால் உணவுகள் பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.
கடைபிடிக்க வேண்டிய உணவுமுறை
அழற்சி பாதிப்பைக் குறைக்கும் வகையிலான உணவு வகைகள், அரிப்பு தோல் அழற்சியின் பாதிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பேருதவி புரிகின்றன.
குயிர்செடின் அதிகம் கொண்ட உணவுகள்
குயிர்செடின் எனும் பிளேவனாய்டுகள், பூக்கள், பழங்கள், காய்கறிகளுக்கு உகந்த நிறத்தை அளிக்கின்றன. இந்தப் பிளேவனாய்டில், அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்களும், ஆன்டிஹிஸ்டமின்களும் உள்ளன. இவ்விரு காரணிகளும், அழற்சிப் பாதிப்பைக் குறைக்கவல்லதாக உள்ளன.
குயிர்செடின் அதிகம் கொண்ட உணவு வகைகள்
ஆப்பிள்கள்
புளூபெர்ரிகள்
செர்ரிகள்
புரோக்கோலி
கீரை வகைகள்
கொழுப்பு அதிகம் கொண்ட மீன் வகைகள்
மீன்கள் மற்றும் மீன் என்ணெய்களில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை, அரிப்பு எதிர்ப்பு பொருளாகச் செயல்படுகிறது. சால்மோன் உள்ளிட்ட மீன் வகைகள், அழற்சி தோல் நோய்ப் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நமது அன்றாட உணவுமுறையில், தினசரி 250 மில்லிகிராம் அளவிலான ஒமேகா-3 சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.
புரோபயாடிக்குகள்
புரோபயாடிக்குகள் என்பவை, குடல் பகுதியில் நன்மைப் பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பவைகள் ஆகும். இவை, நோய் எதிர்ப்பு மண்டலத்தை, சிறப்பாகச் செயல்பட தூண்டுகின்றன. இந்தப் புரோபயாடிக்குகள், அழற்சி எதிர்ப்புப் பொருளாகவும் திறம்பட செயல்படுகின்றன.
யோகர்ட், இயற்கையாகவே நொதிக்கப்பட்ட ஊறுகாய் வகைகள், மெல்லிய சீஸ் உள்ளிட்டவற்றில் புரோபயாடிக்குகள் அதிகளவில் உள்ளன.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
அரிப்பு தோல் அழற்சி பாதிப்பின் தீவிரமானது, பெரும்பாலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளைப் பொறுத்து அமைகிறது. சில உணவு வகைகள் சாப்பிட்ட 6 முதல் 24 மணிநேரத்திற்குள், அதன் பாதிப்பைக் காட்டிவிடுகின்றன. சில உணவு வகைகளில், இதன் கால அளவு மாறுபடுகிறது.
எந்த உணவு வகைகள், அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை மருத்துவர்க் கண்டறிந்து, அந்த உணவுவகைகளைத் தவிர்க்க அறிவுறுத்துவார்.
அழற்சி தோல் எரிச்சல் பாதிப்பைத் தவிர்க்கும் உணவுமுறையைத் துவக்குமுன், அந்த உணவு வகைகளை மெதுவாக உணவுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த உணவுவகையின் பாதிப்பைக் கண்காணிக்க 4-6 வாரங்கள் காத்திருக்க வேண்டும். இந்த உணவு வகைகளினால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினையையும் கண்காணிக்க வேண்டும். உணவை நீக்கிய பின்னும் பாதிப்பு குறையவில்லை எனில், அதை உணவுமுறையில் இருந்து அகற்ற வேண்டியதில்லை.
அழற்சி தோல் எரிச்சல் பாதிப்பை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழ வகைகள்
பால் மற்றும் பால் பொருட்கள்
முட்டைகள்
கோதுமை
பச்சையம் அதிகம் உள்ள உணவு வகைகள்
சோயா மற்றும் சோயா பொருட்கள்
கிராம்பு, இலவங்கம் உள்ளிட்ட மசாலா பொருட்கள்
தக்காளி
சில வகைக் கொட்டைகள்
பச்சை ஆப்பிள்கள்
கேரட்
செலரி
பேரிக்காய்
செயற்கை நிறமூட்டிகள் அதிகம் கொண்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்டவை, இந்த நோய்ப்பாதிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.
கார்பனேட்டட் குளிர்பானங்கள்
சர்க்கரை அதிகம் கொண்ட பானங்கள்
சாக்லேட், மிட்டாய்கள் உள்ளிட்டவை, அழற்சி தோல் எரிச்சல் பாதிப்பை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மேலும் வாசிக்க : மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் நோய்கள்
அழற்சி தோல் எரிச்சல் பாதிப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின், தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்துத் தகுந்த ஆலோசனையைப் பெற்று மாற்றங்களை மேற்கொள்வது சாலச் சிறந்தது.
எக்ஸிமா எனப்படும் அழற்சி தோல் எரிச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவும் உணவு வகைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து. அதைப் பின்பற்றி, அதன் பாதிப்பைக் குறைக்கலாம்.