குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, குழந்தைகளின் பெற்றோருக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் சவால்விடும் நிகழ்வாக அமைந்து உள்ளது. இப்பாதிப்புகள் குழந்தைகளின் அன்றாட வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன. பெற்றோர் இதனைப் புரிந்துகொண்டு அதைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.
குழந்தைகள், சில உணவு வகைகளை உட்கொள்ளும்போது, அது அவர்களின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்த கூடும். அத்தகைய உணவு வகைகளை அடையாளம் கண்டு அதனை ஒதுக்க வேண்டும். செரிமான பிரச்சினைகள், சுவாசப்பாதைகளில் வீக்கம் உள்ளிட்டவை இதன் முதன்மையான அறிகுறிகள் ஆகும்.
இந்த உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, குழந்தைகளையே, அதிகளவில் பாதிக்கிறது. அவர்களுக்குச் சரியாக வளர்ச்சியடையாத செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள் என்றால் என்ன?
சில வகை உணவுகளுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாகக் காட்டும் எதிர்வினைகளே, உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றன.
நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உடலில் தற்காப்பு எதிர்வினைகளைத் தூண்டி, லேசான முதல் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தீவிர உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளில், இது அனாபிலாக்ஸிஸை ஏற்படுத்துகின்றன. இதற்கு உடனடியான மருத்துவ கவனிப்பு அவசியமாகின்றது. உணவு ஒவ்வாமை அனைவருக்கும் ஏற்படலாம், ஆனால் குழந்தைகளிடம் இதன்பாதிப்பு அதிகம் காணப்படுவதால், முன்கூட்டிய கண்டறிதலும் சரியான திட்டமிடலும் அவசியம்.
குழந்தைகளிடையே ஏற்படும் உணவு ஒவ்வாமை
இளவயதுக் குழந்தைகள் பெரும்பாலும், உணவு ஒவ்வாமைப் பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படுத்த கடும்பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இது சாத்தியமான அறிகுறிகளை, பெற்றோர்க் கண்டறிவதற்கு மிகுந்த சவாலான நிகழ்வாக விளங்குகிறது.
குழந்தைகளிடம் இதுபோன்ற நடவடிக்கைகள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
- சில வகை உணவுகளைத் தொடர்ந்து மறுத்தல்
- தோல்களில் வெடிப்பு அல்லது படை நோய்
- வயிற்றுவலி அல்லது செரிமானத்தில் பிரச்சினை
- சுவாசிப்பதில் அல்லது உணவை மென்று விழுங்குவதில் சிரமங்கள்
- தலைச்சுற்றல் உணர்வு
- தொண்டையில் ஏதோ சிக்கி இருப்பதைப் போன்ற உணர்வு
- வாய்ப் பகுதியில் அரிப்பு உணர்வு
- நாக்குப் பகுதியில் வீக்கம் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் எதிர்வினைகள் அதிகரிக்கும்போது, அனாபிலாக்ஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பொதுவான அறிகுறிகள்
குழந்தைகளிடையே அதிகளவில் காணப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தையும் விளைவித்து விடுவதால், நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமாக உள்ளது. உணவு ஒவ்வாமைப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு உகந்த சிகிச்சை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பொதுவான அறிகுறிகள் குறித்த புரிதல் இருப்பது அவசியமாகும்.
- மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல்
- இருமல்
- வயிற்றுப்போக்கு
- தலைச்சுற்றல் உணர்வு
- வாய் மற்றும் காதுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் அரிப்பு
- குமட்டல் அல்லது வாந்தி உணர்வு
- தோலில் சிவப்பு நிறத்திலான புடைப்புகள் தோன்றுதல்
- சிவப்பு நிறத்திலான அரிப்பை ஏற்படுத்தும் சொறிகள்
- சுவாசிப்பதில் சிரமம்
- விசித்திரமான சுவை
- முகம், உதடுகள், நாக்குப் பகுதிகளில் வீக்கம்
மூச்சுத்திணறல் உள்ளிட்டவை, அலர்ஜி எனப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் முக்கிய மற்றும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
அலர்ஜி எனப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்பு என்பது குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கவல்லச் சிக்கலான நிகழ்வு ஆகும். இது அவர்கள் சாப்பிடும் உணவுக்கு, அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆற்றும் எதிர்வினையாகும். இந்த எதிர்வினையே அலர்ஜி பாதிப்பாக வரையறுக்கப்படுகிறது.இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சில வகை உணவுகளை, நோய் எதிர்ப்பு மண்டலமானது, எதிரியாகப் பாவிக்கிறது. இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. பரம்பரைக் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கலாம் என்று கருதப்படுகிறது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்கென்று, தனியானதொரு சிகிச்சைமுறை இதுவரைக் கண்டறியப்படவில்லை. இதைத் தவிர்ப்பது ஒன்றே, சரியான தடுப்புமுறை ஆகும். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன்னர், அந்த உணவு தயாரிப்பு நடவடிக்கையில் முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்டவைகளை அறிந்து செயல்படுதல், நன்மைபயப்பனவாக அமையும்.
- பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்
- பசும்பால்
- முட்டை
- லோப்ஸ்டர் உள்ளிட்ட மீன் வகைகள்
- கோதுமை
- எள்
- பால் பொருட்கள்
- சோயாபீன்ஸ்
இதுபோன்ற உணவுகளை, குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்னர், அதன் தன்மைக் குறித்து ஆராய்வது நல்லது.
மேலும் வாசிக்க : அரிப்பு தோல் அழற்சியைத் தடுக்கும் உணவு வகைகள்
நிர்வகிக்கும் முறைகள்
உங்கள் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமைப் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தால், அதற்கான தடுப்பு முறைகளைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். இதன் மூலமே குழந்தைகளை அப்பாதிப்பில் இருந்து திறம்பட காப்பாற்ற இயலும்.
குழந்தைகளின் உணவுமுறையில், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான உணவுகள் இடம்பெற்றிருந்தால், அதை உடனடியாக நீக்க வேண்டும்.
இத்தகைய உணவு வகையினால் தான், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை, வீட்டில் உள்ள அனைவரும் அறியும்படி விளக்க வேண்டும்.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாக முடியும் ஆபத்து இருப்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் நீண்டகால பின்விளைவுகள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது உடனடி வினைகள், அறிகுறிகள், எதிர்வினைகள் மட்டுமல்லாது, நீண்டகால பின்விளைவுகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளன. அவை உடலின் புறத்தோற்றம் மட்டுமில்லாமல், செயலியல் அளவிலும் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
ஊட்டச்சத்து இடைவெளி
உணவுமுறையில் குறிப்பிட்ட உணவு வகைகளை நீக்குவதன் மூலம், நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காத நிலை நிலவும் ஆபத்து உள்ளது. இதனைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி நடந்துகொள்வது நல்லது. நிபுணரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, ஆரோக்கியமான அதேசமயம், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தாத உணவுமுறையினைத் திட்டமிடவும்.
உணர்ச்சிப்பூர்வ தாக்கங்கள்
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை, நாம் தர மறுக்கும்போது, அவர்கள், உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களை நாம் புறக்கணிப்பதாகவும் தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
குழந்தைகள் வெளியிடங்களுக்குச் சென்று சாப்பிடும் நிலையில், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவைச் சாப்பிட நேரிடும். எனவே, குழந்தையின் ஒவ்வாமைப் பாதிப்பு உணர்வு குறித்து அனைவரிடமும் வெளிப்படையாகத் தெரிவித்துவிடுவது நல்லது.
அலர்ஜி எனும் உணவு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளில் இருந்து குழந்தைகளைக் காத்து, அவர்களின் உடல்நலம் பேணிக் காப்போமாக…