மிகவும் பிரபலமான உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
அலர்ஜி எனப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள், சர்வதேச அளவில் பல்லாயிரக் கணக்கானோரைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மாறி உள்ளது. உடலைத் தொற்றுநோய்ப் பாதிப்பில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், உணவில் உள்ள சில புரதங்களைத் தீங்கு விளைவிப்பவையாகத் தவறாக அடையாளம் கண்டு, எதிர்வினைகளை உண்டாக்குகிறது.இதன்மூலம், அசாதாரண நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது பலவிதமான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
இதன் எதிர்வினைகள், லேசான அசவுகரியத்தை ஏற்படுத்தும். இது சில சந்தர்ப்பங்களில், உயிருக்கு ஆபத்தாக முடியலாம். இந்தியாவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்களுக்கும், 20 சதவீதக் குழந்தைகளுக்கும், உணவு ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, வயதுவரம்பின்றி அனைவருக்கும் வரும் வாய்ப்பு உள்ளது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளை அடையாளம் காண்பதன்மூலம், அவற்றைத் திறம்பட நிர்வகிக்கவும் முடியும்.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் அடிப்படை
உணவு ஒவ்வாமைப் பாதிப்பு என்பது உணவில் உள்ள புரதங்களுக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் இடையேயான சிக்கலான தொடர்பாகும்.நோய் எதிர்ப்பு மண்டலமானது, உணவில் உள்ள புரதங்களை, அச்சுறுத்தல்கள் எனத் தவறாக அடையாளம் செய்துகொள்கிறது. இதன்காரணமாக, உடலில் ஹிஸ்டமைன் சுரப்பதால், ஒவ்வாமைப் பாதிப்பிற்கான எதிர்வினைகள் தூண்டப்படுகின்றன. உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, வாழ்க்கைத்தரத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பின் வகைகள்
உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்படும்போதிலும், அதற்கென்று தனித்துவமான (IgE) மற்றும் IgE சார்பு அல்லாத என்ற இரண்டு வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளது.
IgE சார்பு – விரைவான அணுகுமுறை
IgE சார்பு ஒவ்வாமை என்பது மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமைப் பாதிப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட உணவில் உள்ள புரதத்தை, நோய் எதிர்ப்பு அமைப்பானது, அச்சுறுத்தலாக அடையாளம் காண்கிறது. இது உடனடியாக, அதற்கு எதிரான IgE ஆன்ட்டிபாடிகளை உருவாக்குகிறது. குறிப்பிட்ட நபர், மீண்டும் அதே உணவை உட்கொள்ளும்போது, அந்த IgE ஆன்ட்டிபாடிகள், அந்தப் புரதத்தை உடனடியாக அடையாளம் கண்டு, ஹிஸ்டமைன் உள்ளிட்ட வேதிப்பொருட்களை, ரத்த ஓட்டத்தில் கலந்து, அதற்கு எதிரான அசாதாரணமான நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. இது ஒவ்வாமை எதிர்வினையாக வரையறுக்கப்படுகிறது.
IgE சார்பு அல்லாத நுட்பமான தாக்குதல்
IgE சார்பிலான உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை உள்ளடக்கியது ஆகும். ஆனால், IgE சார்பு அல்லாத வகையானது, T செல்கள், ஒவ்வாமை எதிர்வினைகளில் ஈடுபடுகின்றன. இந்தமுறையில், ஹிஸ்டமைன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பங்கேற்பது இல்லை.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகள்
பால்
சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு அதிக அளவிலான உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாகப் பால் உள்ளது. பால் ஒவ்வாமைப் பாதிப்பு என்பது, பாலில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதத்திற்கு, நோய் எதிர்ப்புச் சக்தியானது காட்டும் பதில்வினை ஆகும். பால் ஒவ்வாமைப் பாதிப்பை, லாக்டோஸ் சகிப்பின்மை என்றும் குறிப்பிடலாம். பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைச் செரிமானம் செய்ய இயலாத நிலை இது ஆகும்.
இந்தப் பாதிப்பு கொண்டவர்களுக்கு, பால் புரதங்களை உட்கொண்ட சில மணி நேரங்களுக்குள்ளாக, இரைப்பைக் குழாய், தோல், சுவாசப் பாதைகளில் அசவுகரியத்தை உணர்கின்றனர்.
முட்டை
வாழ்க்கையின் துவக்கக் காலத்தில் இருந்தே, முட்டையை, குழந்தைகளின் உணவில் தவறாது சேர்த்து வருகின்றோம். துரதிருஷ்டவசமாக, குழந்தைகளுக்கு, முட்டையின் காரணமாக வரக்கூடிய ஒவ்வாமைப் பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. குழந்தைகளின் முதல் ஆறு ஆண்டுகளில், பசும்பால் ஒவ்வாமை, முட்டை ஒவ்வாமை உள்ளிட்டவைகளின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
முட்டை ஒவ்வாமைப் பாதிப்பின் அறிகுறிகள், பெரும்பாலும் செரிமான நிகழ்வின் எதிர்வினைகளாகவே உள்ளன. சிலருக்கு முட்டை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே, தோலில் எதிர்வினைகள் தென்பட துவங்கிவிடுகின்றன. இரைப்பை மற்றும் குடல் பகுதிகளின் அறிகுறிகள் அவ்வப்போது மாறுபடுகின்றன. இந்த முட்டை ஒவ்வாமைப் பாதிப்பானது, சுவாச நிகழ்விலும், சில அசவுகரியங்களை ஏற்படுத்துவதாக, ஆய்வுமுடிவுகளில் தெரியவந்துள்ளது.
மீன்கள்
மீன் ஒவ்வாமைப் பாதிப்பானது சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்துள்ளது. குறிப்பாக, மீன்களை அதிகம் சாப்பிடுபவர்களிடையே இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.தோல், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் நிகழும் எதிர்வினைகள், மீன் ஒவ்வாமைப் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
மீன்கள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்டவை அதிகம் சாப்பிடுபவர்களிடம், மீன் ஒவ்வாமைப் பாதிப்பானது அதிகம் காணப்படுகிறது.
கொட்டைகள் (Nuts)
கொட்டைகள் சாப்பிடுவதால் ஏற்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்பானது, பொதுவானதாக உள்ளது. இந்தக் கொட்டை உணவுகள், ஒவ்வாமைப் பாதிப்பிற்குக் காரணமான எதிர்வினைகளை, மிகத்தீவிரமாகத் தூண்டுகின்றன.
பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை உள்ளிட்டவைகள் அதிகம் சாப்பிடுவதால், அமெரிக்க மக்களிடையே 1.1 சதவீதம் பேருக்கு, இந்த ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
சுவாசிப்பதில் பிரச்சினை மற்றும் மல்டிசிஸ்டமிக் பாதிப்புகளை அறிகுறிகளாகக் கொண்டுள்ள இந்தப் பாதிப்பானது, சில தருணங்களில், உயிரையும் பறிப்பதாக அமைந்துவிடுகிறது.
மேலும் வாசிக்க : குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
வேர்க்கடலை
சர்வதேச அளவில், பயிர் விவசாயத்தில், பருப்பு வகைகளின் பங்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்தப் பருப்பு வகைகளில், உயர் மதிப்பிலான புரதங்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. ஆனால், துரதிருஷ்டவசமாக, இவைகள் ஒவ்வாமைப் பாதிப்புகளிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இதில் வேர்க்கடலை, முக்கியமான இடத்தைப் பிடித்து உள்ளது. வேர்க்கடலையில் அல்புமின்கள், குளோபுலின்கள் மற்றும் புரோலமின்கள் உள்ளன. இவைகள் வெப்பமடையும் நிலையில், ஒவ்வாமை எதிர்வினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
கோதுமை
குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்புகளில், கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கு முக்கிய இடம் உள்ளது. இவ்வகைத் தானியங்கள் தோல் மற்றும் குடல் பகுதிகளில் அசவுகரியத்தை ஏற்படுத்துகின்றன. சில தருணங்களில் உயிரைப் பறிக்கும் அளவிற்கும் சென்று விடுகிறது.
ஆஸ்துமா பாதிப்பிற்கும், கோதுமைத் தொடர்பான ஒவ்வாமைப் பாதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனலாம். கோதுமை மற்றும் அதனைச் சார்ந்த பயிர்களான பார்லி, ஓட்ஸ், கம்பு உள்ளிட்டவைகளின் அதிகச் சென்சிடிவிட்டி கொண்டவர்களுக்கு, அரிசி சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. அரிசி சார்ந்த ஒவ்வாமைப் பாதிப்பானது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது, ஆசியாவிலேயே மிக அதிகமாகக் காணப்படுகிறது.
சோயா பீன்ஸ்
சமீபகாலமாக, மக்களின் உணவு நிகழ்வுகளில், சோயா பீன்ஸ் தவறாது இடம்பெற்றுவிடுகிறது. வேர்க்கடலை ஒவ்வாமைப் பாதிப்புடன் ஒப்பிடும்போது, சோயா பீன்ஸினால் ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்பு சற்று குறைவுதான் என்பதே இங்கு ஆறுதலான விசயம்..
சிறுகுழந்தைகள் முதல் அனைத்து வயதினரையும், இந்தச் சோயா பீன்ஸ் ஒவ்வாமைப் பாதிப்பானது தாக்குகிறது.
அலர்ஜி எனப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்து உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோமாக…