முடி உதிர்தலுக்கு காரணமான வைட்டமின்கள், மினரல்கள்
சத்தான மற்றும் சரிவிகித உணவுமுறையை மேற்கொள்வது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குப் பலன் அளிப்பது மட்டுமல்லாது, பல்வேறு நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
முடி உதிர்வதில், மரபியல் காரணிகள் முக்கியப்பங்கினைக் கொண்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டில் சுமார் 6.5 மில்லியன் ஆண்கள், வழுக்கைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடு
நமது உணவுமுறையில், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை வைட்டமின்கள், மினரல்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட், கொழுப்புகள், நீர் ஆகியவை. இவைப் போதிய அளவு கிடைக்காத போது, ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன.
ஊட்டச்சத்துக் குறைபாடானது சோர்வு, தசை வலி, தலைவலி, முடி உதிர்தல், உடல் மெலிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இது நாம் தேர்வு செய்யும் உணவு வகைகள், உடல், ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் திறன், வாழ்க்கைமுறைக் காரணிகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக் குறைபாடு நிகழ்வு ஏற்படுகின்றது.
முடி உதிர்தலுக்குக் காரணமான ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
ஆரோக்கியமான நல்வாழ்க்கைக்கு, நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முடி உதிர்தலுக்குக் காரணமான ஊட்டச்சத்துக் குறைபாடுகள், இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
புரதக் குறைபாடு
புரதங்கள், தசையின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாது, முடி பராமரிப்பிலும், முக்கியப்பங்கு வகிக்கிறது. மயிர்க்கால்கள், புரதத்தால் ஆகி உள்ளதால், புரதக் குறைபாடு நிகழ்வானது, தலைமுடியைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்லாது முடி உதிர்தல் மற்றும் அது மெலிந்து போக வழிவகுக்கின்றது.
சர்வதேச அளவில், 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் உணவில் போதிய புரதம் இல்லை என்பது உண்மை. கோழி, மீன், இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றில் புரதங்கள் அதிகளவில் உள்ளன.
பாலினம், வயது, உடல் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து, தேவையான புரதத்தின் அளவு மாறுபடுகிறது. பெரியவர்களுக்கு, அவர்களின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.75 கிராம் புரதம், பரிந்துரைக்கப்படுகிறது.
இரும்புச்சத்துக் குறைபாடு
முடி உதிர்தல் நிகழ்விற்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டிற்கும் இடையே, முரண்பட்ட கருத்துகள் இருந்தபோதிலும், சில ஆய்வுகள், முடி உதிர்தலுக்கும், இரும்புச்சத்துக் குறைவிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தி உள்ளன.
ஹீமோகுளோபின் உருவாக்கத்தில், இரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன. இரும்புச்சத்துக் குறைவால் ஹீமோகுளோபின் அளவு குறைந்து, உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் சரியாகக் கிடைப்பதில்லை.
மயிர்க்கால்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை எனில், முடி வளர்ச்சி தடைபடும். இரும்புச்சத்துப் பற்றாக்குறை நிலை, அனீமியா என்றும் இரத்தசோகை என்றும் வரையறுக்கப்படுகிறது. இந்த நிலையானது, பெண்களுக்குக் கர்ப்பக் காலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். கீரை, பயறு வகைகள், பீன்ஸ், இறைச்சிகள், செறிவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்தலைத் தவிர்த்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
வைட்டமின் D குறைபாடு
மனநிலையில் திடீர் மாற்றங்கள், சோர்வு, தசை வலி, முடி உதிர்தல் அல்லது மெலிதல் உள்ளிட்டவை, வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, மக்கள் சூரிய ஒளியில் இருந்து போதுமான வைட்டமின் D பெறுகின்றனர்.ஆனால், அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளியானது குறைந்து காணப்படும். இந்தக் காலகட்டத்தில், மீன் எண்ணெய், இறைச்சி, கல்லீரல், செறிவூட்டப்பட்ட உணவுகள் உள்ளிட்ட வைட்டமின் D அதிகம் கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது நலம்பயக்கும்.
பயோட்டின் குறைபாடு
வைட்டமின் B7 ஊட்டச்சத்தே, பயோட்டின் என்று வரையறுக்கப்படுகிறது. இது முடி ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பயோட்டின் குறைபாடானது, கெராட்டின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கிறது. கெராட்டின், தலைமுடி உருவாக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்து உள்ளது. முடி உதிர்தல் பாதிப்பிற்கு உள்ளான பெண்களில் 40 சதவீதத்தினருக்கு, பயோட்டின் குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
முட்டை, கொட்டைகள்,சூரியகாந்தி விதைகள், சால்மன் மீன், இனிப்பு உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுவகைகளில், பயோட்டின் அதிகமாக உள்ளது.
மேலும் வாசிக்க : பெண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியமா?
துத்தநாக (Zinc) குறைபாடு
மயிர்க்கால்கள் உள்ளிட்ட உடலின் செல்கள் உருவாக்கம் மற்றும் மீட்டெடுப்பு நிகழ்வுகளுக்கு, துத்தநாகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்களுக்குத் துத்தநாகக் குறைபாடு இருக்கும்பட்சத்தில், மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளில் தாமதம் ஏற்படும். இது முடியின் பலத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கின்றது.
துத்தநாகக் குறைபாடு டெலோஜன் எஃப்ளூவியத்தை (Telogen Effluvium) தூண்டுகிறது. இது முடி வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி, முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
ஆண்களுக்குத் தினசரி 9.5 மில்லிகிராம் மற்றும் பெண்களுக்கு 7 மில்லிகிராம் துத்தநாகம் பரிந்துரைக்கப்படுகிறது. இறைச்சி உணவுகள், பீன்ஸ், பூசணி விதைகள், முட்டை, ஓட்ஸ் உள்ளிட்டவைகளில், துத்தநாகம் அதிகம் உள்ளன. சிப்பி மீன், மனிதர்களின் துத்தநாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில், முக்கியப்பங்கு வகிக்கின்றன.
முடி உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள், மேற்குறிப்பிட்ட வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களைச் சரியான அளவில் இருக்குமாறு கண்காணித்து, இந்தப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீர்களாக…