உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தின் தொடக்கம்
சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளுக்கான பயணம் என்பது, நேர்மறையான தேர்வுகளைத் தேர்வு செய்வது மட்டுமல்லாது, ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் புதிய, அற்புதமான அத்தியாயத்தைத் துவங்கும் வகையினதாக உள்ளது.
நீங்கள் என்னவகையான இலக்குகளை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது, வெற்றிக்கனியை நோக்கிய முதல்படி ஆக உள்ளது. நீங்கள் உடல் எடை இழப்பு அல்லது தசை வலிமை அதிகரிப்பு போன்ற இலக்குகளைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற திட்டங்களை வகுக்க வேண்டும். இதன்மூலம், உங்களின் உடல் ஆரோக்கிய பயணம் துவங்க ஆரம்பிக்கும்.
இலக்குகளை வரையறுக்க வேண்டும்
குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயிப்பதே, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிப் பயணத்தின் முதல் மற்றும் முக்கியமான படி ஆகும். உடல் எடை இழப்பு, தசைகளின் வலிமை அதிகரிப்பு, ஆற்றல் அதிகரிப்பு உள்ளிட்டவை நீங்கள் உங்கள் இலக்குகளாக நிர்ணயித்து இருப்பின், அதுகுறித்த தெளிவான, யதார்த்தமான வகையிலான நோக்கங்களை அமைப்பதன் மூலம், அது உங்கள், இலக்கை எட்ட பேருதவி புரியும். நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகள், குறைப்பிடத்தக்க வகையினதாகவும் (specific), அடையக்கூடியவையாகவும் (attainable), பொருத்தமானதாகவும் (relevant), நேரத்திற்கு உட்பட்டவை (time-bound) என SMART முறையினதாக இருக்க வேண்டும்.
தற்போதைய உடல் ஆரோக்கிய நிலையை மதிப்பிடவும்.
எந்தவொரு புதிய உடற்பயிற்சி பழக்கத்தைத் துவங்குவதாக இருந்தாலும், தற்போதைய உடல் ஆரோக்கிய நிலையை மதிப்பிடுவது அவசியமாக உள்ளது. அடிப்படைச் சுகாதாரப் பிரச்சினைகள் அல்லது கவலைகளை அடையாளம் காண, சிறந்த சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது. உங்கள் அடிப்படை ஆரோக்கியத்தை அறிவதால், பொருத்தமான இலக்குகளை நிர்ணயிக்கவும், உடலுக்கு ஏற்ற பயிற்சிகளில் ஈடுபடவும் முடியும்.
சாத்தியமான உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கவும்
இலக்குகளை நிர்ணயித்து, தற்போதைய ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்த பிறகுதான், சாத்தியமான உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்க முடியும். விருப்பத்தேர்வுகள், அட்டவணை மற்றும் உடற்பயிற்சி அளவைக் கணக்கில் கொண்டு, உடற்பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும்.
இதய நலன், வலிமைப் பயிற்சிகள், யோகா உள்ளிட்டவைகளின் கலவையாக இருப்பினும், சிறிது சிறிதாக, படிப்படியாக உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க வேண்டும்.
சரிவிகித ஊட்டச்சத்துத் திட்டத்தை உருவாக்கவும்
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பயணத்திட்டம் என்பது, சீரான மற்றும் சரிவிகித ஊட்டச்சத்துத் திட்டம் இன்றிச் சாத்தியமாகாது. முழுமையான ஊட்டச்சத்துக் கொண்ட உணவுமுறையில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நுண்ணூட்ட சத்துகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
உடற்பயிற்சி இலக்குகளை ஆதரிக்கும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்க, ஊட்டச்சத்து நிபுணருடன் ஆலோசனைச் செய்யவும். ஆரோக்கியமான உணவுமுறை என்பது, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்குவது மட்டுமல்லாது, உங்கள் உடலை வளர்க்கும் வகையிலான நிலையான தேர்வுகளைச் செய்வது மிக முக்கியமானது ஆகும்.
அதிக நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்
உடலின் நீரேற்ற அளவு பற்றிப் பெரும்பாலானோர்க் கவனிப்பது இல்லை. உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னும், பின்னும், போதுமான அளவு தண்ணீர்க் குடித்து, உடலின் நீரேற்ற அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலில் போதிய அளவு நீரேற்றத்துடன் வைத்திருப்பதன் மூலம், உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறுகின்றன. இது உடல் எடை இழப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
போதிய உறக்கம் மிக அவசியம்
போதிய அளவிலான மற்றும் தரமான உறக்கமானது, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தின் மூலமாக அமைகின்றது. அறிவாற்றல் மேம்பாடு, தசைகளின் வலிமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நல்வாழ்க்கைக்கு, தினசரி 7 முதல் 9 மணிநேர உறக்கம் அவசியம் ஆகும். நிலையான உறக்கப் பழக்கத்தை ஏற்படுத்த வசதியான உறக்கச் சூழல் அவசியமாகும்.
இணக்கமான நபர்களின் ஆதரவு முக்கியம்
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தில் ஆதரவு அமைப்பு மிக முக்கியமானது. உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி பழக்கத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, நிபுணத்துவம் பெற்ற உடற்பயிற்சி வல்லுநரின் வழிகாட்டுதல்களைப் பெறுவது நல்லது.
முன்னேற்றத்தைக் கண்காணித்து அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்
முன்னேற்றத்தைத் தவறாது கண்காணித்து அதற்கேற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும். உடற்பயிற்சிகளையும், ஊட்டச்சத்தையும் கண்காணிக்க, உடற்பயிற்சி செயலிகளைப் பயன்படுத்தவும். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறவில்லை எனில், இலக்குகளை மறுமதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்களைச் செய்யுங்கள். இது உங்கள் உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது, ஊட்டச்சத்து முறைகளையும் செம்மைப்படுத்துகிறது.
ஓய்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
ஓய்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிப் பயணத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாக உள்ளன. நீங்கள் எவ்வித வரம்பும் இல்லாமல் அதிகப்படியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம், உடல் பாகங்களில் காயங்கள் மற்றும் எரிதல் உணர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இது உடற்பயிற்சி வழக்கத்தினையே சிதைத்துவிடும். தொடர்ந்து உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமல், சில நாட்கள் ஓய்வில் இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்த நாட்களில் நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவும். இது உடற்பயிற்சி நிகழ்வின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்க உதவுகிறது. அவ்வப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது அவசியமாகும். போதுமான அளவிலான ஓய்வு, உங்கள் இலக்குகளை எட்ட உதவிக்கரமாக உள்ளது.
மேலும் வாசிக்க : உடல் எடையைக் குறைப்பது இவ்வளவு எளிமையானதா?
சிறு சிறு வெற்றிகளையும் கொண்டாடுங்கள்
உடற்பயிற்சிப் பயணத்தில், நீங்கள் எட்டும் சிறு சிறு முயற்சிகளையும் கொண்டாடுவதன் மூலம், அதுதொடர்பான நேர்மறையான எண்ணங்கள் மனதில் ஏற்படும். அதேபோல, விரும்பத்தகாத நிகழ்வுகளும், பயிற்சியின் ஒருபகுதிதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ளப் பேருதவியாக இருக்கும்.
பகுதி அளவிலான கட்டுப்பாடு மிக முக்கியம்
ஆரோக்கியமான உணவுமுறையில் உள்ள உணவு வகைகளின் அதிகப்படியான நுகர்வும், உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நின்றுவிடாமல், கவனச்சிதறல்களையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
விதவிதமான சமையல்முறைகளைப் பரீட்சித்துப் பார்க்கவும்
உணவுமுறையைச் சுவாரஸ்யமானதாக மாற்ற, விதவிதமான சமையல்முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம். குறைந்த எண்ணெய் கொண்டு சமைத்தல், பேக்கிங் செய்தல், ஸ்டீமிங் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள், உங்கள் உணவின் சுவைகளை மேம்படுத்தும். சமையல் நுட்பங்களை ஆராய்வதன் மூலம், உணவில் பன்முகத்தன்மையைச் சாத்தியமாக்குவது மட்டுமல்லாமல், உங்களை உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
வண்ணமயமான உணவுகள்
பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழ வகைகள் உள்ளிட்டவைகளை, உங்கள் உணவுமுறையில் இணைக்க வேண்டும். சரிவிகித உணவுமுறையானது, நீங்கள் சீரான மற்றும் சத்துகளைப்பெறுவதை உறுதிப்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவுமுறையில், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்டவை நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பணியிடத்திலும் ஆரோக்கிய திட்டத்தைப் பின்பற்றவும்
நீங்கள் உங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை, பணியிடங்களில் கழிப்பதினால், அங்கேயும் நடைபெறும் ஆரோக்கியம் சார்ந்த திட்டங்களில் தவறாது பங்கேற்கவும். இது உங்களை நாள்முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
தகுந்த உடற்பயிற்சி நிபுணரின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகிறோம்…