சுயச் சிகிச்சை முறை – அறிந்ததும், அறியாததும்!
நோயாளிக்கும், மருத்துவ நிபுணருக்குமான தொடர்பு சிகிச்சையை மேற்கொள்வதற்கு முக்கியமானதாக அமைகின்றது. இது ஒரு நேர்மையான உறவுமுறை என்றும், வெற்றிகரமான சிகிச்சையின் அடித்தளமாக இது விளங்குவதாக, ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. இந்தப் பிணைப்பு உறவானது, நம்பிக்கை, புரிதல், மரியாதை உள்ளிட்டவற்றுடன் கட்டமைக்கப்படும்போது, அது நோயாளிகளைப் பாதுகாப்பாகவும், குணப்படுத்தலுக்குத் தயாராக உணரக்கூடியதாகவும் மாற்றுகிறது.
சுயச் சிகிச்சை
மருத்துவ நிபுணரின் பங்களிப்பு இன்றி, பல்வேறு சிகிச்சை நுட்பங்களைப் பயன்படுத்தி, உளவியல் அல்லது உணர்ச்சி தொடர்பான பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நடைமுறையே, சுயச் சிகிச்சை என்று வரையறுக்கப்படுகிறது. இந்த வகையிலான சிகிச்சைமுறையானது, புத்தகங்கள், ஆன்லைன் படிப்புகள்,வழிகாட்டிகள் உள்ளிட்டவைகளிடமிருந்து அறிந்துகொள்ளப்படுகின்றன. இந்தச் சுயச் சிகிச்சை முறைகள், உணர்ச்சித் திறன்களைக் கற்றுக் கொள்ளவும், வாழ்க்கைச் சூழ்நிலைகள் மற்றும் உறவுகளைத் திறம்பட நிர்வகிக்கவும் உதவுகின்றன. இதுபோன்ற தருணங்களில், சுயச் சிகிச்சை முறையானது பயனுள்ளதாக அமைவதோடு, சாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது.
சுயச் சிகிச்சைமுறையானது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உற்ற துணைவனாக உள்ளது. ஆனால், இது நிபுணர் வழங்கும் சிகிச்சைக்கு மாற்றாக இருக்காது. சுயச் சிகிச்சைமுறையில், புதிய அம்சங்களை, நீங்களாகவே சொந்தமாக மேற்கொள்ள இயலாது. இருந்தபோதிலும், சிகிச்சை மற்றும் சுயச் சிகிச்சை முறைகள் இரண்டும் சுயச் சிந்தனைப் பிரதிபலிப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றன.
எப்போது நீங்கள் சுயச் சிகிச்சை முறையை நாடலாம்?
- நீங்கள் உடல் பலவீனமாகவோ அல்லது அதிகச் சோர்வாகவோ உணர்தல்
- பார்த்துப் பழகிய விசயங்களில் ஆர்வம் குறைதல்
- உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து தவிர்த்தல்
மேற்குறிப்பிட்ட நிலைத் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், நீங்கள் உங்களையே, நீங்கள் சுயப் பரிசோதனைச் செய்யும் காலம் வந்துவிட்டது என்று அர்த்தம். நீங்கள் அதீதச் சிந்தனையில் இருந்தாலோ, மனக்குழப்பத்தில் இருந்தாலோ, சுயச் சிகிச்சை முறை அவசியமாகிறது. முறையான வழிகாட்டுதல் இல்லாமல் சுயச் சிகிச்சை மேற்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். நீங்கள் சுயச் சிகிச்சைமுறையை மேற்கொள்ளத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நன்கு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைக் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நன்மைபயக்கும்.
உங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் பிரச்சினை எத்தகைய தன்மையினதானது என்பதை முதலில் கண்டறியுங்கள். அதை எந்தளவிற்கு விரைவாகக் கையாள முடியும் என்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். பிரச்சினையின் தீவிரத்தை நீங்கள் புரிந்துகொள்ளும்பட்சத்தில், அதை நீங்களே தனியாகக் கையாள இயலுமா அல்லது பிறரின் உதவி தேவையா என்பதை நீங்கள் அறிய முடியும்.
பிரச்சினைகளை உடையுங்கள்
நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை, உணர்வுகள் மற்றும் செயல்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கவும். அதன்பின்னர் அதைப் பகுப்பாய்வு செய்து, அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துவங்கலாம்.
உணர்வுகளைக் கண்டறியவும்
உங்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினை, நடத்தைத் தொடர்பானதாக இருப்பின், அந்த நடத்தைக்கு எத்தகைய உணர்வுகள் காரணமாக இருக்கின்றன என்பதைக் கண்டறியவும். இதன்மூலம், அதற்கான தீர்வைக் கண்டறிவது எளிய நிகழ்வாக மாறும்.
சுயச் சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்
தெளிவாக இலக்குகளாக நிர்ணயிக்கவும்
எதிர்மறை எண்ணங்களை, நேர்மறையானதாக மாற்றுவது, பதட்டத்தைத் தவிர்ப்பது என உங்களுக்கு இந்தத் தருணத்தில் எது தேவை என்பதைத் தீர்மானியுங்கள். உதாரணமாக, நீங்கள் தேர்வு எழுத போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.தொடர்ந்து தோல்வி பற்றிய எண்ணங்கள் கொண்டிருந்தால், அது உங்கள் செயல்திறனைப் பாதிக்கலாம். அதற்கு மாற்றாக, நான் கஷ்டப்பட்டுப் படித்துள்ளேன். என்னால் முடிந்தவரை, தேர்வை, சிறப்பாக எதிர்கொள்வேன் என்று உங்கள் எண்ணத்தை மாற்றவும்.
உங்கள் தனிப்பட்ட உறவுகளில் பதட்ட நிலை நீடிக்கும்பட்சத்தில், அவர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும், உங்கள் உணர்ச்சிகளைத் திறம்பட நிர்வகிக்க முயற்சிக்கவும். இது மன அழுத்த பாதிப்புகளைக் குறைக்கவும், மோதல்களை மென்மையாக்கவும் உதவுகிறது.
உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன, அதற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். சில சூழ்நிலைகளைத் தவிர்த்தல், மன அழுத்தம் உள்ளிட்ட எதிர்மறை உணர்வுகளைத் திறம்பட நிர்வகித்தல். நீங்கள் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, சிறிய வகையிலான, நிர்வகிக்கக் கூடிய படிகளுடன் சமூகச் சூழ்நிலைகளில் உங்களை வெளிப்படுத்த முயற்சி செய்யவும். தளர்வு நுட்ப பயிற்சிகளின் மூலம், இதனைச் சாத்தியமாக்கிக் கொள்ள இயலும்.
மேலும் வாசிக்க : உடல், மனம், ஆன்மா பராமரிப்பிற்கான வழிகாட்டி
நீங்கள் சிகிச்சை நிபுணரைப் பார்க்க வேண்டியதற்கான அறிகுறிகள்
நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் இலக்குகள் சரியாகச் செயல்படுகிறதா என்பதில் குழப்பம் நிலவுதல்
உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு இருத்தல்
உங்கள் தினசரி வாழ்க்கைக் குறித்த சிந்தனையானது, கல்வி அல்லது பணி நடவடிக்கைகளின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துதல்
போதிய அளவிலான உறக்கம் இன்றியும், பசி உணர்வுடனும் போராடுதல்
மரணம், விவாகரத்து போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு உட்படுதல்
தனிமை உணர்வால் கலங்கி நிற்றல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருப்பின், சுயச் சிகிச்சை முறையை மேற்கொண்டிருந்தாலும் கூட, சிகிச்சை நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
சுயச்சிகிச்சை முறையை, தகுந்த வழிகாட்டல்களுடன் பின்பற்றி, உடல் மற்றும் மன அமைதி பெற்று வளமான நல்வாழ்க்கை வாழ்வீர்களாக..