பணி நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியம் அவசியமா?
பணி நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியம் என்பது சமீபகாலமாக, சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. நிறுவனம் சிறந்து விளங்க, ஆரோக்கியமான மற்றும் பணி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்துவது இன்றியமையாதது ஆகும். ஊழியர்களின் மனநலம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, உற்பத்தித்திறனையும் மேம்படுத்த இயலும்.
பணியிடங்களில், சுமார் 14 சதவீத ஊழியர்கள், மனநலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் நலன் மட்டுமல்லாது, நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. கவலை மற்றும் மனச்சோர்வால் ஆண்டுக்கு 50 மில்லியன் பணி நாட்கள் வீணாகின்றன.
பணியிடங்களில், மனநலம் சார்ந்த உரையாடல்கள் ஏன் முக்கியமாக உள்ளன?
பணியிடங்களில் திறந்த மனதுடன் உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம், மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊழியர்கள் பலன் பெற வாய்ப்பு இருப்பதாக, மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
பணியிடங்களில் மனநலம் தொடர்பான உரையாடல்கள், ஊழியர்கள் தங்களது சகாக்களிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற வழிவகுக்கிறது. சக ஊழியர்களின் கனிவான அணுகுமுறையால் தங்கள் மன ஆரோக்கியம் மேம்பட்டதாக 63 சதவீத ஊழியர்கள் கூறுகின்றனர்.
மனநலம் சார்ந்த பாதிப்புகள் தொடர்பான தலைப்புகளை, நிறுவனங்கள், அதன் ஊழியர்களிடம் பேசுவதன் மூலம், நிறுவனத்தின் பணிச்சூழலை ஆரோக்கியமானதாக மாற்ற செய்வது மட்டுமல்லாது, ஊழியர்களிடையே, பணியிடம் குறித்த நம்பிக்கையை மேம்படுத்த இயலும்.
பணியிடங்களில் மனநல உரையாடல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?
நேர்மறையான சூழலை உருவாக்குதல்
மனநல ஆரோக்கியம் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், தங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஆதரவு உள்ள இடங்களில், மனநல ஆரோக்கியம் குறித்துப் பேசுவதை, அவர்கள் தங்களுக்குச் சாதகமாக உள்ளதாக நினைக்கின்றனர். 38 சதவீத ஊழியர்கள், நேர்மறையான பணிச்சூழல் நிலவும் பணியிடங்களில் பணிபுரிய, இதை முக்கியமான அளவீடாகக் கொண்டு உள்ளதாக, முன்னணி ஆய்வு தெரிவிக்கிறது.
நேர்மறையான பணிச்சூழலை, ஊழியர்களிடையே உருவாக்குவது நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்லாது, குழு இணைப்புகளையும் பலப்படுத்துகிறது.
பின்பற்ற வேண்டிய குறிப்புகள்
நீங்கள் பேசும் பேச்சில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமாகவே, பெரும்பாலான மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுத்துவிட முடியும். மற்றவர்களைப் புண்படுத்தும் விதமாகவோ அல்லது அந்நியப்படுத்தும் வகையிலான சொற்களைத் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் பேசும் மொழியில், இரக்க உணர்வு இருப்பதை உறுதிசெய்யும் பட்சத்தில், மனநலப் பிரச்சினைகள் தூண்டப்படுவது தவிர்க்கப்படும்.
எந்தவொரு விவகாரத்திலும், தீர்ப்பு அளிக்கும் வகையிலான சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது. இதன்மூலம், தனிநபர்கள், அவர்களுக்குள் நிலவும் மனநலம் சார்ந்த நிகழ்வுகளைப் பகிர்வது மட்டுமல்லாது, அதுகுறித்து விவாதிக்கவும் முன்வருவர்.
பிறர்ச் சொல்வதையும், காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும். உரையாடல்கள், இயல்பான முறையினதாக இருக்க வேண்டும். அப்போதுதான், அவரவர்கள், அவர்களுக்கு உரிய சரியான தேர்வினை மேற்கொள்ள முடியும்.
சிக்கலைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம்
நாம் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் ஆதரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் நோக்கம், அவர்களின் மனநலம் சார்ந்த சிக்கல்களைச் சரிசெய்வதோ அல்லது அதைக் குணப்படுத்துவதோ அல்ல. ஏனெனில், அவர்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் சூழ்நிலையைச் சார்ந்தது ஆகும். அந்தச் சூழ்நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களே முழுவதுமாக உணர்ந்திருப்பர். அவர்கள் அதிலிருந்து விடுபடவும், நிரந்தரமான தீர்வினைக் கண்டுபிடிக்கவும் சிறிது காலம் ஆகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மேலும் வாசிக்க : சுயச் சிகிச்சை முறை – அறிந்ததும், அறியாததும்!
அவர்களுக்கு நாம் எவ்வாறு ஆதரவு அளிக்க முடியும்?
சில தருணங்களில், நாம் செய்யும் செயல்கள், அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும் பாதிப்பு உடையது. நாம் ஒரு நபர் மீது அக்கறைக் காட்டும் போது, நாம் அவர்களின் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையாளராக மாறிவிடுவதாக அர்த்தம் இல்லை.
அவர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்கவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவினை வழங்குவதே போதுமானதாகும். அவர்களுக்கு மேற்கொண்டு ஏதேனும் உதவி தேவைப்படின், சிறந்த நிபுணரிடம் அழைத்துச் செல்வது சிறந்த நிகழ்வாக அமையும்.
மனநல ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் எப்போதும் ஒருமுறை மட்டுமே நிகழ்த்தக்கூடியதாக இருக்கக் கூடாது. இது தொடர்ச்சியாக, பலமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.
உரையாடல்கள் தொடர்பான விவாதங்களைத் திறம்பட நிர்வகிக்கும் திறனை அறிந்திருப்பது அவசியமாகும். மனநல ஆரோக்கியம் தொடர்பான உரையாடல்கள், சம்பந்தப்பட்டவரை வெகுவாகப் பாதித்து இருப்பின், ஊழியர் உதவித்திட்டம் அல்லது மனிதவளக் குழுவினர், அவரை வழிநடத்துவது உகந்ததாக இருக்கும்.
உங்கள் பணியிடத்தில், நீங்கள் மனநல ஆரோக்கியத்திற்கான சிறந்த வழக்குரைஞராக இருக்க வேண்டும். இந்த மாற்றமானது, உங்களிடமிருந்து தொடங்கி, அனைவரிடத்திலும் சிறிதுசிறிதாகப் பரவும். இதில் முக்கியமான விசயம் என்னவெனில், மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து, நீங்கள், உங்கள் மன ஆரோக்கியத்தில் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதே ஆகும்.
மனநலம் சார்ந்த ஆரோக்கியம் விவகாரத்தில் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், ஆக்கப்பூர்வமாக அமையும்பட்சத்தில், பணியிடங்களில் ஊழியர்களின் மனநலம் காக்கப்படுவதோடு, நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. நீங்களும் இதில் சிறந்த வழக்குரைஞராக விளங்கத் தயாரா!…