ஊட்டச்சத்து இடைவெளி- அடையாளம் காண்பது எப்படி?
நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்கள் செயல்படுவதற்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட மற்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காத நிலையையே, ஊட்டச்சத்துக் குறைபாடு என்கிறோம்.
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை, மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக இளம்குழந்தைகளிடையே அதிகம் காணப்படுகிறது. இக்குறைபாடே இளம் குழந்தைகள் மரணத்திற்கு முக்கிய காரணமாகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண, அரசும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான செயல்பாடு இன்மையால், அரசின் இம்முயற்சி வெற்றி பெறவில்லை எனலாம்.
ஊட்டச்சத்துக் குறைபாடுப் பிரச்சினையைத் தீர்க்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
ஊட்டச்சத்துக் குறைபாடுப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அரசு பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான சில திட்டங்களை, இங்குக் காண்போம்.
தேசிய ஊட்டச்சத்துத் திட்டம் :
2022ஆம் ஆண்டிற்குள், நாட்டில் இருந்து, ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றும் முயற்சியாக, தேசிய ஊட்டச்சத்துத் திட்டம் என்ற திட்டத்தை, இந்திய அரசு துவக்கியது. இந்தத் திட்டம், POSHAN Abhiyaan திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மதிய உணவுத் திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் மூலம், உணவை வழங்குவதனால், அவர்களின் உடலில் ஊட்டச்சத்துகளின் அளவு மேம்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம், பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (2013)
இந்தச் சட்டம், உணவுக்கான அணுகலை, சட்டப்பூர்வ உரிமையாக்குகிறது. மிகவும் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதே, இந்தச் சட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.
இரத்தசோகை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்
இந்தியாவில், இரத்தசோகைப் பாதிப்பு விகிதத்தை, ஆண்டு ஒன்றிற்கு 1 முதல் 3 சதவீதம் என்ற அளவிற்குக் குறைத்து, ரத்தசோகை இல்லாத இந்தியாவை உருவாக்குவதை, இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், 2018ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் திட்டம்
1975ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்குத் தேவையான உணவு, ஆரமப சுகாதாரம், தடுப்பூசி, சுகாதாரப் பரிசோதனைகள், பரிந்துரைச் சேவைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.
ஊட்டச்சத்து இடைவெளி
ஒருவர் உட்கொள்ளும் உணவுமுறைகளில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகளின் அளவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவிற்கும் இடையிலான முரண்பாடே, ஊட்டச்சத்து இடைவெளி என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தையை, தற்போதைய நிலையில், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
ஊட்டச்சத்துக் குறைபாடு நிகழ்வு, எடுத்துக்கொள்ளும் உணவுமுறை உள்ளிட்ட காரணிகளால் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை, தங்களது உணவின் மூலம் பெறுவதில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. இந்த நிகழ்வின் எதிர்மறை விளைவுகள், குறுகிய கால அல்லது நீண்டகால அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே திண்ணம்.
உடலின் ஊட்டச்சத்து நிலையைத் தீர்மானிக்கும் காரணிகள்
நமது உணவு விருப்பங்கள்
உணவு பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு முறைகள்
நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளின் எண்ணிக்கை
இந்த ஊட்டச்சத்துகளை உறிஞ்சும்வகையிலான உடலின் திறன்
புகைப் பிடித்தல், மதுப்பழக்கம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோருக்கு, கூடுதல் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன.
ஆற்றல் தொடர்பான செயல்பாட்டு நிலை
நவீன வாழ்க்கைமுறையில் சிறப்பாகச் செயல்பட முடிவதில்லை.நாம் எவ்வளவுதான் நன்றாகச் சாப்பிட்டாலும், அது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவது இல்லை. நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காதபோது, அதைப் பெறுவதற்காக, சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் துணைப் பொருட்களின் உதவியை நாடுகின்றோம். இந்த வழிமுறையில், நாம் சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் ஆகும். இந்த வழிமுறையில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் பயன் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வது முக்கியம் ஆகும். அதிகச் சத்துகொண்ட உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்டவைகள்,ஊட்டச்சத்து இடைவெளியை எட்டி நின்று பார்க்க வைத்து விடுகின்றன.
ஊட்டச்சத்து இடைவெளியைச் சப்ளிமெண்ட்ஸ் பூர்த்தி செய்யுமா?
நீங்கள் திட்டமிட்டு உணவுமுறையை அமைத்துக் கொண்டாலும், உடல்நலத்திற்குத் தேவையான அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைப்பது அரிது.போதிய நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், விரும்பத்தகாத உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.
சப்ளிமெண்ட்ஸ் நிகழ்வு, நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிலான உணவைச் சாப்பிட வைக்குமென்று அர்த்தம் இல்லை. போதிய உணவை எடுத்துக் கொள்ள முடியாதவர்கள், வயது மூப்பு, குறிப்பிட்ட உடல் பாதிப்பு உள்ளவர்கள் போன்றோருக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை, பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை, சப்ளிமெண்ட்ஸ்கள் மேற்கொள்கின்றன.
ஊட்டச்சத்து இடைவெளிகளை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் பூர்த்திச் செய்ய ஹெல்த் சப்ளிமெண்ட்கள் உதவுகின்றன. உங்கள் உணவுமுறையை, எவ்விதச் சிரமமும் இன்றி மாற்றி அமைப்பதற்கு மட்டுமல்லாது, நுண் ஊட்டச்சத்து உட்கொள்வதைக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது.
எல்லா உணவு வகைகளும், ஒரே அளவிலான ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே கொண்டு இருப்பது இல்லை. உதாரணமாக, எல்லா ஆரஞ்சு பழங்களும் ஒரே அளவிலான வைட்டமின் சி யைக் கொண்டிருப்பது இல்லை. எனவே, நீங்கள் சரியான அளவு குறிப்பிட்ட ஒரு ஊட்டச்சத்தைப் பெற விரும்பினால், மற்ற ஊட்டச்சத்துகளை இழக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு ஊட்டச்சத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் சரியான முறையில் கிடைக்க, ஹெல்த் சப்ளிமெண்ட்கள் உதவுகின்றன. அதிகத் தரமான ஹெல்த் சப்ளிமெண்ட், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஆண்டிஆக்ஸிடெண்ட் பாதுகாப்பை வழங்குகின்றது மற்றும் ஈடுபாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்குகிறது.
வாரத்திற்கு இருமுறை மீன் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.இதயம் சிறப்பாகச் செயல்பட உதவும் மீன் எண்ணெயை, நாம் நமது உணவுமுறையிலேயே இணைத்துக் கொள்வது மிகுந்தப் பயனைத் தரும். அதிகக் கொழுப்புகள் கொண்ட மீன்களில் இருந்து, இந்த மீன் எண்ணெய் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த மீன் எண்ணெயில், ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை, இதயம் சீராகச் செயல்பட உதவுகின்றன. இதுமட்டுமல்லாது, தசைகளின் செயல்பாட்டிற்கும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் உறுதுணைப் புரிகின்றன.
மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியம்: இந்திய உணவுமுறைச் சிறந்ததா?
ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைப்பதில் அரசு திட்டங்களின் பங்கு
ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைப்பதில் அரசின் திட்டங்கள் முக்கியப் பங்காற்றின. மதிய உணவுத் திட்டம் மற்றும் தினசரி உணவுத் திட்டம் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
மதிய உணவுத் திட்டம்
இது PM Poshan திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே நிலவி வந்த பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கல்வி தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வந்த திட்டமாக, இது கருதப்பட்டது. இந்தத் திட்டம், 1995ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நர்சிம்மராவால், நாடு முழுவதும் துவங்கப்பட்டது.
இந்தத் திட்டம், தமிழ்நாட்டில், 1955ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் அவர்களைப் பள்ளிக்கு மாணவர்களின் வருகையை அதிகரித்தல் உள்ளிட்டவைகளை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் துவங்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் இந்தத் திட்டம், தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்டதால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டம்,உலகிலேயே மிகப்பெரிய பள்ளி மாணவர்களுக்கான உணவுத்திட்டம் என்ற பெயரைப் பெற்றது.
இந்தத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டு இருந்தது. இது அரசுப் பள்ளிகளில் படிக்கும் 14 கோடி மாணவர்களுக்குப் பயனளித்த நிலையில், தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் 12 கோடி பேருக்கு, இந்தத் திட்டத்தின் பலன் கிட்டவில்லை.இவர்களில் பெரும்பாலானோர், குறைந்த வருமானம் கொண்டவர்களாக இருந்தனர்.
தினசரி உணவுத் திட்டம்
இது ஆண்டு முழுமைக்கும், பள்ளி மாணவர்களுக்குத் தினசரி அடிப்படையில் சத்தான உணவு வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டம், பள்ளிக் குழந்தைகள், சத்தான உணவுக்கான அணுகலைப் பெறுவதற்கான உறுதியளிக்கிறது. பசி உணர்வின் காரணமாக, படிப்பில் போதிய கவனம் செலுத்த இயலாத குழந்தைகளை மீட்டெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான உணவுகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம், மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இது, மாணவர்கள், கல்வியில் பல்வேறு சாதனைகள் புரிய பேருதவி புரிகிறது. இத்தகைய முயற்சிகளின் மூலம், எந்தவொரு குழந்தையும், ஆரோக்கியமான சத்தான உணவு, புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.
குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரையும் பாதிக்கும் இந்த ஊட்டச்சத்து இடைவெளியை அடையாளம் கண்டு, அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றி, இந்த இக்கட்டிலிருந்து நிவாரணம் பெறுவோம்.