உடலின் கொழுப்பு அளவு – அறிந்ததும் அறியாததும்!
கொழுப்பு, உடலின் ரத்தத்தில் காணப்படும் வழுவழுப்பான பொருள் ஆகும். இது மனிதனின் உடலில் கல்லீரல் பகுதியில் இயற்கையாக உருவாகிறது. செல் படலங்கள், குறிப்பிட்ட வகை ஹார்மோன்கள், வைட்டமின் D உருவாக்கத்தில், கொழுப்பின் பங்கு அளப்பரியது ஆகும். கொழுப்பு, கல்லீரல் பகுதியில் உற்பத்தியான போதிலும், நாம் உண்ணும் உணவு வகைகளில் இருந்தே, அதிகளவிலான கொழுப்பு, நமது உடலிற்குக் கிடைக்கிறது.
கொழுப்பின் முக்கியத்துவம்
உடல் ஆரோக்கியமாக இருக்க, நமது உடலில் கொழுப்பு, சர்க்கரை உள்ளிட்ட சத்துக்களின் அளவு சீராக இருக்க வேண்டியது இன்றியமையாதது.உடலின் ரத்தத்தில், சர்க்கரையின் அளவு அதிகரித்தால், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோன்று, இதயம் சீராக இயங்க, உடலின் கொழுப்பு அளவு பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்கும் பட்சத்தில், இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளன.
கொழுப்பு மற்றும் ஹார்மோன்கள்
நம் உடலின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்திச் செய்வதில், கொழுப்பு முக்கியப்பங்கு வகிக்கின்றது. கொழுப்பு அதிகம் உள்ள முட்டையின் மஞ்சள் கரு மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளை, நாம் உட்கொள்ளும்போது, நமது உடலுக்குத் தேவையான கொழுப்புகள் பெறப்படுகின்றன. கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளும்போது, உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு இதயத் தமனிகளில் சேகரமாகி, அடைப்புகளை உருவாக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.இதன்காரணமாகவே, இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
லிப்பிட்- புரோபைல் சோதனை
ஒரு எளிய ரத்த பரிசோதனையின் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடுவதுப் போன்று, கொழுப்பின் அளவையும் மதிப்பிட இயலும். உடலின் கொழுப்பு அளவைக் கண்டறிய, லிப்பிட்- புரோபைல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
உடலில் கொழுப்பு அதிகரிக்கும் பட்சத்தில், நம் உடலில், அதை வெளிப்படுத்தும் விதமாக, எவ்வித அறிகுறிகளும் தோன்றுவது இல்லை. இதன்காரணமாக, நாம் கொழுப்பு அளவைக் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே, கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைட்ஸ்களின் அதிகரிப்பால் ஏற்படும் அபாயங்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
லிபிட் புரோபைல் சோதனை மேற்கொள்வதன் மூலம்,
மொத்த கொழுப்பு – இரத்த ஓட்டத்தில் கலந்து உள்ள் கொழுப்புகளின் மொத்த அளவு
LDL எனப்படும் குறைந்த அடர்த்தியிலான கொழுப்புப் புரதங்கள்
இந்தவகைக் கொழுப்புகள், கெட்ட கொழுப்புகள் என்றழைக்கப்படுகின்றன. இதன் அளவு அதிகரிக்கும் போது, இதயத் தமனிகளின் சுவற்றில் கொழுப்பு படலங்களாகப் படிகின்றன . இதன்காரணமாக, ரத்தம் சீராகச் செல்வதுத் தடைப்படுகிறது. இது மாரடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
HDL எனப்படும் அதிக அடர்த்தியிலான கொழுப்புப் புரதங்கள்
இந்தவகைக் கொழுப்புகள், நல்ல கொழுப்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இது நம் உடலில் அதிகளவு இருக்க வேண்டும். அப்போதுதான், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்ளலாம். மிதமிஞ்சிய நல்ல கொழுப்புகள், மீண்டும் கல்லீரலுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.
டிரைகிளிசரைட்ஸ்
இதன் விகிதம் அதிகரிக்கும் போது, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
லிபிட் புரோபைல் சோதனையின் மூலம், உடலில் உள்ள நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைட்ஸ்களின் அளவை மதிப்பிடலாம்.
கொழுப்பு அளவுகளின் இலக்கு மதிப்புகள்
மொத்த கொழுப்பு – 200 mg/dlக்குக் குறைவாக இருப்பது நல்லது
HDL (நல்ல கொழுப்பு) – 40-60 mg/dl. அதிகமாக இருப்பது நல்லது.
LDL எனப்படும் கெட்ட கொழுப்பு – 70 முதல் 130 mg/dl. இதில் குறைந்த அளவு இருப்பது நலம்.
டிரைகிளிசரைடுகள் – 10-150 mg/dl. குறைந்த அளவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும் வாசிக்க : நீரிழிவுப்பாதிப்பு – இது நிச்சயமாக ஸ்வீட் நியூஸ் இல்ல!
உடலில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கான காரணங்கள்
புகைப் பழக்கம்
அதீத மதுப்பழக்கம்
போதிய உடற்பயிற்சி இல்லாதது
குடும்ப உறுப்பினர்களுக்கு இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் இருத்தல்
பரம்பரை வழி பாதிப்பு இருத்தல்
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுதல்
அதிகக் கொழுப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள்
இரண்டாம் வகை நீரிழிவு
நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு
கல்லீரல் பாதிப்பு
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் அசாதாரண நிலைமை
எய்ட்ஸ்
சோரியாசிஸ், முடக்குவாதம்
நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள், வைரல் நோய் தடுப்பு மருந்துகள்
உடலில் அதிகக் கொழுப்பு சேருவதைத் தடுக்கும் காரணிகள்
கீழ்க்கண்ட வழிமுறைகளின் மூலம், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதைத் தவிர்க்க முடியும்.
முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி, அதிகக் கொழுப்பு கொண்ட பால்ப் பொருட்களைத் தவிர்த்தல்
அதிகளவிலான பழங்கள், காய்கறிகள், முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் உள்ளிட்டவைகளை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் கால அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல்
மதுப்பழக்கத்தை அறவே கைவிடுதல்
மன அழுத்தத்தைக் குறைத்தல். நாள்பட்ட மன அழுத்த நிகழ்வானது, கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, நல்ல கொழுப்பின் அளவைப் பாதியாகக் குறைத்து விடுகிறது.
இதய நோய்களின் முக்கிய காரணமான அதிகக் கொழுப்பைத் தடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.