• Home/
  • PET CT/
  • மார்பகப் புற்றுநோய் கண்டறிதலில் PET-CT ஸ்கேனின் பங்கு
Image of a young woman lying on a CT table with outstretched hands receiving a medical scan for breast cancer detection

மார்பகப் புற்றுநோய் கண்டறிதலில் PET-CT ஸ்கேனின் பங்கு

சர்வதேச அளவில், பெண்களைப் அதிகளவில் பாதிக்கும் நோய்ப் பாதிப்பாக, மார்பகப் புற்றுநோய் விளங்கி வருகிறது. துவக்க நிலைக் கண்டறிதல் மற்றும் துல்லியமான நோயைக் கண்டறியும் சோதனை மூலமாக விரைவில் தீர்வு காணலாம். இன்றைய நவீன உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய பல்வேறு சோதனைகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒருவகை PET-CT ஸ்கேன் சோதனை ஆகும். இது மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் கண்டறியும் பொருட்டு, PET ஸ்கேன் மற்றும் CT ஸ்கேன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைக்கிறது.

நீங்கள் மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு, மெமோகிராபி அல்லது அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையை மேற்கொண்ட போதிலும், உங்களுக்கு அதில் திருப்தி இல்லாதபட்சத்தில், மருத்துவர், உங்களை PET ஸ்கேன் என்றழைக்கப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் சோதனைக்குப் பரிந்துரைச் செய்வார்.

PET ஸ்கேன் சோதனைக்கு அதிகச் செலவு ஆகும் என்பதால், சிறிய அளவிலான மாரபகப் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய, இத்தகையச் சோதனைப் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்று முன்னணி மருத்துவர்க் குறிப்பிட்டு உள்ளார்.

PET ஸ்கேன் சோதனையின் போது, சிறிய அளவிலான அணுக்கதிரியக்கப் பொருள், ரேடியோடிரேசராக, உடலினுள் செலுத்தப்படுகிறது. இந்த டிரேசர், புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளான செல்களை அடையாளம் காட்டுகிறது. இத்தகைய செல்களில், வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகமாகவே இருக்கும்.

மார்பகப் புற்றுநோய் – PET-CT ஸ்கேன் சோதனை

மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய, PET-CT ஸ்கேன் சோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சோதனையில், கதிரியக்கப் பொருள், ரேடியோடிரேசர் முக்கிய பங்காற்றுகிறது. MRI மற்றும் CT ஸ்கேன்களின் மூலம் கண்டறிய முடியாத புற்றுநோய்க் கட்டிகளையும், இந்த ரேடியோடிரேசர்ப் பயன்பாட்டின் மூலம் கண்டறிய முடியும். PET-CT ஸ்கேன் சோதனையின் மூலம், லிம்ப்நோட் எனப்படும் நிணநீர் முனை மெட்டாஸிடாசிஸைத் துல்லியமாக அடையாளம் காண இயலும். மேலும் மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு, கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் சரியானதா என்பதையும் கண்காணிக்க உதவுகிறது.

மேம்பட்ட நோயறிதல்

PET-CT ஸ்கேன், அசாதாரண வளர்சிதை மாற்ற செயல்பாட்டை, துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதுமட்டுமல்லாது, 18F-2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (FDG) புற்றுநோய் கட்டிகளின் அளவு, என்ணிக்கை மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்குகிறது.

இந்தச் சோதனையின் முக்கிய குறைபாடு யாதெனில், சிறிய மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் மற்றும் அதிக அளவிலான பரவல் இல்லாத புற்றுநோய் பாதிப்பை, இதன்மூலம் கண்டறிய முடிவதில்லை.

PET ஸ்கேனின் திறன், மார்பகப் புற்றுநோய் கட்டி மற்றும் அதன் திசுவியல் தன்மையைப் பொறுத்து அமைகிறது என்றாலும், கட்டிகளின் பரவல், பெரிய மார்பகங்கள் மற்றும் இம்பிளாண்ட்கள் உள்ளிட்ட விவகாரங்களில், PET-CT ஸ்கேனின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கொண்ட பெண்களுக்கு, மெமோகிராபி சோதனை, குறிப்பிடத்தக்கப் பலனைத் தராத நிலையில், அதேபோல், பயாப்ஸி சோதனைக்குச் சரியான மாற்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு PET-CT ஸ்கேன் ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது.

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பெண்களுக்கு PET-CT ஸ்கேன், அதன் பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது.

புற்றுநோய் கட்டிகள், நிணநீர் மண்டலங்களுக்குப் பரவி உள்ளதா என்பதைக் கண்டறிய

புற்றுநோய் பாதிப்பு, உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி உள்ளதா என்பதைக் கண்காணிக்க

அளிக்கப்பட்டுச் சிகிச்சைப் பலன் அளிக்கிறதா என்பதைக் கண்டறியவும், PET-CT ஸ்கேன் பயன்படுகிறது

மெமோகிராபி மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனைகளுடன் ஒப்பிடும் போது, PET-CT ஸ்கேன், புற்றுநோய் கட்டிகளின் துல்லியமான படங்களை வழங்குகிறது. புற்றுநோய் செல்கள், வேகமாகப் பல்கிப் பெருகும் தன்மை உடையது என்பதால், அதன் பரவலைக் கண்டறிய உதவுகிறது. PET-CT ஸ்கேன், மெட்டாஸ்டாடிக் புண்களையும் கண்டறிய உதவுகிறது.

A female doctor in white coat and stethoscope around her neck wearing a pink ribbon indicating breast cancer awareness.

சிறந்த சிகிச்சைக்கான திட்டமிடல்

புற்றுநோய்க் கட்டிகள் இருக்கும் இடம் மற்றும் அதன் அளவுகளை, மருத்துவர்களுக்கு PET-CT ஸ்கேன் சரியாகக் காட்டுகிறது. இது, நோயாளிக்கு என்ன மற்றும் எவ்விதச் சிகிச்சை வழங்க வேண்டும் என்ற தெளிவை, மருத்துவர்களுக்கு வழங்குகிறது. புற்றுநோய் பாதிப்பு பகுதிகளை அடையாளம் தெரிந்து கொண்டதன் மூலம், நோயாளியின் ஆரோக்கியத்திற்கு எவ்வித இடையூறும் வந்துவிடாமல், மருத்துவர் உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் வாசிக்க : PET-CT ஸ்கேன் – அறிந்ததும்…. அறியாததும்!!!

பயாப்ஸி சோதனையின் பயன்பாட்டைக் குறைத்தல்

புற்றுநோய் கட்டிகளில் இருந்து சிறிய பகுதி அல்லது அதனைச் சுற்றி உள்ள பகுதியை மட்டும் எடுத்து ஆய்வகப் பகுப்பாய்விற்கு உட்படுத்துவதன் மூலம், பயாப்ஸி போன்ற சோதனைகளின் பயன்பாட்டைக் குறைக்க PET-CT ஸ்கேன் பேருதவி புரிகிறது. புற்றுநோய் கட்டிகளை, மருத்துவர்கள் பார்த்து விடுவதால், என்ன பாதிப்பு என்பதையும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தன்மையையும் கண்காணிக்க இயலும்.

PET-CT ஸ்கேன், மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிவதோடு மட்டுமல்லாது, உரிய சிகிச்சைகளை மேற்கொண்ட பின், புற்றுநோய் பாதிப்பு, மீண்டும் ஏற்படுவதையும் முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

வாழ்க்கைத் தரம் மேம்பாடு

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு, நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் பாதித்து விடும் வாய்ப்பு இருப்பதால், பல்வேறு சோதனைகளை நாம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றோம். PET-CT ஸ்கேன், புற்றுநோய் பாதிப்பைத் துல்லியமாக முன்கூட்டியே கணித்து விடுவதால், மேம்பட்ட நோயறிதல் மற்றும் உரித்தான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், மிக விரைவாகவே குணம் அடைய வைக்க உதவுகிறது.

மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கு அளிக்கப்பட்டுச் சிகிச்சைப் பலன் அளித்ததா இல்லையா என்பதைக் கண்டறிய PET-CT ஸ்கேன் உதவுகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.