மேமோகிராம் சோதனை என்றால் என்ன?
உலகளவில் தோல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, பெண்களிடையே அதிக அளவில் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் ஆகும். இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மருத்துவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறிருக்க, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் சோதனையே, மேமோகிராம் சோதனை(மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை) ஆகும்.
இந்தச் சோதனையில், மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெண்களிடத்தில், அவர்களின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதியில் உள்ள திசுக்களில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய முடியும். இதன்மூலம், மார்பகப் புற்றுநோயின் துவக்க நிலை அறிகுறிகள் தீவிரம் அடைவதற்கு முன்னரே, பெண்களைஇந்த பேராபத்தில் இருந்து காக்கலாம்.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்
உங்களுக்கு மார்பகப் பகுதியில் கட்டி, கடும் வலி அல்லது முலைக்காம்பு பகுதியில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் தோன்றினால், இவற்றை மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகக் கொள்ளலாம்.
இந்த அறிகுறிகள் அபாயமற்றதா அல்லது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறியா என்பதை உறுதிப்படுத்த மேமோகிராம் சோதனைகள் உதவுகின்றன.
மேமோகிராம் சோதனை ஏன் செய்ய வேண்டும்?
மேமோகிராம் சோதனை மார்பகத்தில் உள்ள சிறிய கட்டிகளையும், கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு உள்ள புற்றுநோய் மாற்றங்களையும் கண்டறிய உதவும் ஒரு சிறந்த முறையாகும்.
அப்போது சிகிச்சை முழுமையாகவும், எளிமையாகவும் அமைய முடியும்.
- மேமோகிராம் சோதனை மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய உதவுகிறது, அப்போது சிகிச்சை எளிதானது மற்றும் முழுமையானது.
- ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படுவதால், மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தை அதிகப்படுத்த முடிகிறது.
- ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்குப் பெரும்பாலும் குறைந்த ஊடுருவும் தன்மையிலான சிகிச்சைகளே தேவைப்படுகின்றன
சில நேரங்களில், மேமோகிராம் சோதனையின் மூலம், மார்பகப் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு, கூடுதல் சோதனைகள் அவசியமாகின்றன.
மேலும் வாசிக்க : PET-CT ஸ்கேன் – அறிந்ததும்…. அறியாததும்!!!
கூடுதல் சோதனைகளும், அவசியமும்
மேமோகிராம் சோதனை, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய மட்டுமே துணைபுரிகிறதே தவிர, அதற்கான சிகிச்சை அல்ல என்பதை மறந்து விடக்கூடாது.
மேமோகிராபி சோதனையைத் தொடர்ந்து, கூடுதலாகச் சில மார்பகத் திசுப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளின் மூலமே, மார்பகப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்ய முடியும். மார்பகத் திசுப்பரிசோதனை எனப்படும் பயாப்ஸி சோதனையின் மூலம், அப்பகுதியில் உள்ள கட்டி, புற்றுநோய் கட்டி தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
யாரெல்லாம் மேமோகிராம் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?
40 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் அமெரிக்க நோய்த்தடுப்பு சேவைகள் துறை (CDC) மேமோகிராம் சோதனையைப் பரிந்துரைக்கிறது. ஏனெனில், வயது அதிகரிக்க அதிகரிக்க மார்பகப் புற்றுநோயின் அபாயமும் கூடுகிறது.
பிறக்கும் போதே, மார்பகப் புற்றுநோய் குறைபாடு உள்ள பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட, மார்பகப் புற்றுநோய் அபாயம் கூடுதலாக உள்ளது. இதன்காரணமாக, பெண்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க, அதீதக் கவனத்துடன் இருப்பது சாலச் சிறந்தது.
இப்படி மரபணு ரீதியில் மார்பகப் புற்றுநோயின் அபாயம் மிகுதியாக உள்ள பெண்களுக்கு, சிறு வயதிலேயே இந்த வகைப் புற்றுநோய்தீவிரம் அடையக்கூடும் என்பதால், அவர்கள் விரைந்து மேமோகிராம் சோதனைகளைச் செய்து கொள்வது நல்லது.
மருத்துவ வல்லுநர்கள், அவர்களுக்கு மேமோகிராம் மட்டுமல்லாது மார்பகப் புற்றுநோயின் தீவிரத்தை அளவிடும் வகையில், மார்பகப் பகுதியில் எம் ஆர் ஐ (MRI) ஸ்கேன் சோதனையையும் மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
ஆண்களிடையேயும் இப்பாதிப்பு
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு, பெண்களை மட்டுமே தாக்கும் எனப் பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், இது ஆண்களிடையேயும் கண்டறியப்பட்டு உள்ளது. மரபியல் ரீதியாக, இந்தக் குறைபாடு, ஆண்களிடம் இருப்பதாக, மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்து உள்ளனர். மேமோகிராபி சோதனை மேற்கொள்ளப்பட்ட 100 ஆண்களில் ஒருவருக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
மேமோகிராபி சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
மேமோகிராபி சோதனையை, நன்கு தேர்ந்த கதிரியக்க நிபுணர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனையானது, அதற்குரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்கள் செலுத்தப்பட்டு, மேமோகிராம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- மேமோகிராம் சோதனையின் போது, சந்தேகிக்கப்படும் நபர் எக்ஸ்ரே போன்ற பிரத்தியேக இயந்திரத்தில் அவரது மார்பகப் பகுதி படும்படியாகப் படுக்க வைக்கப்படுகிறார்.
- பின் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய தட்டு போன்றஅமைப்பின் உதவியுடன், முலைப்பகுதி அமுக்கப்படுகிறது.
- எக்ஸ்ரே இயந்திரத்தில் வெளிவரும் கதிர்கள், எதிர்ப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள டிடெக்டரின் மூலம் ஊடுருவுகிறது.
- இந்த டிடெக்டர் மின்னணு சமிக்ஞைகளை, கணினியில், டிஜிட்டல் படமாக மாற்றி அமைக்கிறது.
- இத்தகைய படங்களை, மேமோகிராம் என்று குறிப்பிடுகின்றனர்.
மேமோகிராம் சோதனையின் போது எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி எடுக்கப்பட்ட படங்களை, கதிரியக்க நிபுணர் ஆய்வு செய்வது மட்டுமல்லாது, அவரது உயர் அதிகாரியுடன் இதுகுறித்துக் கலந்தாலோசித்த பின்னரே, அவர், சம்பந்தப்பட்ட நோயாளியின் மருத்துவருக்கு, அந்தப் படங்களைப் பகிரச் செய்வார்.
மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டாலோ, உடனடியாக, அதற்குரிய மருத்துவர்களை அணுகி அதற்குரிய தீர்வினைப் பெற்று வளமான வாழ்க்கை வாழ்வோமாக.