மேமோகிராம் சோதனை முடிவுகள் உணர்த்துவது என்ன?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, தற்போது பெண்களிடையே அதிகரித்து உள்ள நிலையில், மேமோகிராம் சோதனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராம் என்றழைக்கப்படும் மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை, பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 20 நிமிடங்கள் கால அளவிலான இந்தச் சோதனையின் போது, குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்கள் மார்பகப் பகுதிக்குள் செலுத்தப்படுகின்றன. அப்போது எடுக்கப்படும் படங்களைக் கொண்டு முப்பரிமாண படங்களை உள்ளடக்கிய சோதனை முடிவுகள் நமக்கு வழங்கப்படுகின்றன.
மேமோகிராம் சோதனையின் முடிவுகள் நமக்குக் கிடைக்க 10 முதல் 15 நாட்களாவது ஆகும். அதுவரை, சோதனையின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு நம்முள் இருந்து கொண்டே இருக்கும்.
அமெரிக்காவின் கதிரியக்கக் கல்லூரி, 1980ஆம் ஆண்டு முதல், மார்பகப் பட அறிக்கை மற்றும் தரவு அமைப்பு (BI-RADS) முறையிலேயே, மேமோகிராம் சோதனை முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
மேமோகிராபி சோதனையின் முடிவுகளை, கதிரியக்க நிபுணர்கள், (BI-RADS) மதிப்பை 0 முதல் 6 என்ற இலக்கங்களாலேயே குறிப்பிட்டு வருகின்றனர். இந்தக் குறிப்பிட்ட இலக்கங்களின் மூலம், மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதைத் துறைச் சார்ந்த மருத்துவர்களும், கதிரியக்க நிபுணர்களும் புரிந்து கொண்டு, நமக்குச் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து முடிவு செய்து வருகின்றனர்.
BI-RADS மதிப்புகள்
BI-RADS மதிப்பு 0 எனில், கதிரியக்க நிபுணரால் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை மேமோகிராம் அல்லது சோனோகிராம் சோதனை மேற்கொள்ளப் பரிந்துரைச் செய்வார்.
BI-RADS மதிப்பு 1 எனில், மார்பகப் பகுதியில் எவ்வித அசாதாரண மாற்றங்களும் இல்லை என்று அர்த்தம்.
BI-RADS மதிப்பு 2 எனில், மார்பகப் பகுதியில் கால்சியம் படிவுகள் அல்லது சிறு கட்டிகள் இருப்பதாகப் பொருள். இருந்தபோதிலும், இவைப் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பது நிம்மதி தரும் அம்சம் ஆகும்.
BI-RADS மதிப்பு 3 எனில், மார்பகப் பகுதியில் சிறு கட்டிகள் உள்ளன. இருந்தபோதிலும் அவை, புற்றுநோய் கட்டிகள் அல்ல. இருப்பினும், 6 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை மேமோகிராம் சோதனையை மேற்கொள்ளப் பரிந்துரைக்கின்றனர்,
BI-RADS மதிப்பு 4 எனில், மார்பகப் பகுதியில் அசாதாரண மாற்றங்கள் தென்படுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பு ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால், பயாப்ஸி எனப்படும் திசுப் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும்.
BI-RADS மதிப்பு 5 எனில், மார்பகப் பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது 95 சதவீதம் புற்றுநோய் கட்டி ஆக உருமாற வாய்ப்பு உள்ளதால், பயாப்ஸி சோதனைச் செய்து கொள்வது அவசியம் ஆகும்.
BI-RADS மதிப்பு 6 எனில், மார்பகப் பகுதியில், புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க : மேமோகிராம் சோதனைக்கு நீங்கள் தயாரா?
மேமோகிராம் சோதனை ஏன் சிறந்தது?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே எளிதாகக் கண்டறிய மேமோகிராம் சோதனைப் பேருதவி புரிகின்றது. இதன்காரணமாக, புற்றுநோயின் பாதிப்பு தீவிரம் அடைவதற்கு உள்ளாக, நாம் சிகிச்சைகளைத் துவங்கி விரைவிலேயே, மார்பகப் புற்றுநோய் என்ற அரக்கனிடம் இருந்து நிவாரணம் பெற்று விடலாம். இதன்மூலம், புற்றுநோயின் காரணமாக ஏற்படும் இறப்புகளின் விகிதத்தையும் பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
மேமோகிராம் சோதனையின் போது, சில வகைப் புற்றுநோய் கட்டிகளை அடையாளம் காண முடியாத நிலை உள்ளதால், சில தவறான முடிவுகளும் அவ்வப்போது வருகின்றன.
இருப்பினும், மேமோகிராம் சோதனையின் முடிவுகள் 87 சதவீதம் துல்லியம் உடையதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேமோகிராம் சோதனை முடிவுகள் தவறாக இருக்கும்பட்சத்தில், மேலதிகச் சோதனைகளை விரைந்து மேற்கொண்டு, இதன் பாதிப்பில் இருந்து விரைவில் விடுதலைப் பெறுவீர்….