எம் ஆர் ஐ ஸ்கேன் – மேமோகிராம் ; எந்த சோதனை டாப்?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே அறிய பயன்படுத்தப்படும் சோதனைகளில், மேமோகிராம் சோதனையை விட, எம் ஆர் ஐ ஸ்கேன், சிறந்த பயன் அளிப்பதாக, முன்னணி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேமோகிராம், மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதில் அந்தளவிற்கு முழுப்பலன் அளிக்கவில்லை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேமோகிராம் சோதனையில், குறைந்த அளவிலான கதிரியக்கம் மார்பகப் பகுதியில் செலுத்தப்பட்டு, அப்பகுதியைப் படம் பிடிப்பதினால், அதில் உள்ள சிறு சிறு கட்டிகள் சரியாக அடையாளம் காணப்படுவதில்லை.
மேமோகிராம் சோதனையை ஒப்பிடும்போது, எம் ஆர் ஐ ஸ்கேன், அதிகச் சென்சிட்டிவ் கொண்டதாக உள்ளது. மார்பகப் பகுதியில் காணப்படும் சிறு சிறு கட்டிகளையும் துல்லியமாக, எம் ஆர் ஐ ஸ்கேன் கண்டறிந்து விடுகிறது. புற்றுநோய் கட்டியாக விரைவில் உருமாறும் தன்மைக் கொண்ட கட்டிகளையும், இது அடையாளம் காண்கின்றது. எம் ஆர் ஐ ஸ்கேன் முறையில், மின்காந்த அலைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு, கதிரியக்க வீச்சு அபாயம் குறித்த பயம் அறவே இல்லை.
நியூ இங்கிலாந்து மருத்துவ ஜெர்னலில் வெளியாகி உள்ள தகவல்களின்படி, 969 பெண்களுக்கு ஒரு பக்க மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது எம் ஆர் ஐ ஸ்கேன் முறையில் கண்டறியப்பட்டது. மேமோகிராம் சோதனையின் போது, மார்பகப் பகுதியில் புற்றுநோய் கண்டறியப்படாத நிகழ்வில், 3.1 சதவீதத்தினருக்கு, எம் ஆர் ஐ ஸ்கேன் முறையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க : மேமோகிராம் – அல்ட்ரா சவுண்ட் ; எது சிறந்தது?
இந்த நிலையில், மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பெண்களுக்கு மேமோகிராம் சோதனையைத் தொடர்ந்து எம் ஆர் ஐ ஸ்கேன் முறையும் மேற்கொள்ள அமெரிக்கப் புற்றுநோய் சொசைட்டி பரிந்துரைச் செய்து உள்ளது.
மேமோகிராபி சோதனையைவிட, எம் ஆர் ஐ ஸ்கேன் முறை ஏன் அதிகச் சென்சிட்டிவ் என்று சொல்லுகிறோம் என்றால், இந்தத் தொழில்நுட்பத்தில், தவறான நேர்மறை முடிவுகள் குறைவாகவே வருகின்றன. பயாப்ஸி எனும் திசுப் பரிசோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், புற்றுநோய் கட்டிகள் தெளிவாக அடையாளம் காணப்படுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின் போது, இயற்கையிலேயே ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால், தவறான நேர்மறை முடிவுகள் வர வாய்ப்பு உள்ளது. எம் ஆர் ஐ ஸ்கேன் முறையில், இதுகுறித்தும் சரியாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய் கட்டிகளைத் திறம்பட அடையாளம் காணுதல், மேமோகிராபி சோதனையை விட விரைந்து செயல்படுதல் உள்ளிட்ட இவ்வளவு தனித்துவங்களை எம் ஆர் ஐ ஸ்கேன் முறை, தன்னகத்தே கொண்டு உள்ள போதிலும், பெண்கள், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் சரியான சோதனையாக, இதைக் கருதுவது இல்லை. எம் ஆர் ஐ ஸ்கேன் முறையை, மேமோகிராம் சோதனையின் இணைப்பாகவே, பெண்கள் கருதுகின்றனர்.
எம் ஆர் ஐ ஸ்கேன் முறை, பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டு இருக்கும் போதிலும், மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைச் செய்வது மேமோகிராம் சோதனையைத் தான் ஆகும்.