• Home/
  • PET CT/
  • எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனைக்கு இடையேயான வித்தியாசம் என்ன?
A male doctor and a female technician discussing the medical details of a patient lying on a CT scanner.

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனைக்கு இடையேயான வித்தியாசம் என்ன?

முன்னுரை:

மருத்துவர்கள் பொதுவாக நோய் கண்டறிதல் படிமத் தொழில்நுட்பத்தினைப் (diagnostic imaging techniques) பயன்படுத்தி வலி அல்லது நோய்க்கான சாத்தியமான காரணங்களைக் குறைத்து மிகவும் துல்லியமாக நோயினைக் கண்டறிகின்றனர். எக்ஸ்ரே, CT ஸ்கேன் மற்றும் MRI உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் கண்டறியும் படிமத் தொழில்நுட்பங்கள் உள்ளன. எந்த வகையான தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்பது, மருத்துவருக்கு உடலின் எந்தப் பகுதியின் படம் வேண்டும் என்பதைப் பொறுத்தும், நோயாளிக்கு உடனடியாகக் கிடைக்கும் படிமத் தொழில்நுட்பத்தைச் சார்ந்தும் அமைந்துள்ளது.

இந்தப் பதிவில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எக்ஸ்-கதிர்கள்:

எக்ஸ்-கதிர்கள் மிகவும் பொதுவாக மற்றும் பரவலாகக் கிடைக்கும் நோய் கண்டறியும் படிமத் தொழில்நுட்பமாகும். ஒருவருக்கு அதிநவீனப் பரிசோதனைத் தேவைப்பட்டாலும், முதலில் எக்ஸ்ரே பரிசோதனை எடுப்பார்கள்.

எக்ஸ்-கதிர்கள் உடலின் படங்களை எடுக்கக் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன. கதிர்கள் உடல் வழியாகச் செல்லும்போது, ​​அடர்த்தியான பொருள்கள், அதாவது எலும்புகள் போன்றவைப் படத்தில் வெண்மை நிறத்தில் தோன்றும். எக்ஸ்-கதிர்கள் பொதுவாக எலும்பு நோய், சிதைவு, எலும்பு முறிவுகள், இடம்பெயர்வுகள், தொற்றுகள் மற்றும் கட்டிகளைக் காணவும் கண்டறியவும் பயன்படுகின்றன.

எக்ஸ்-கதிர்ப் பரிசோதனை எலும்பு அமைப்புகளை ஆய்வு செய்ய அடிக்கடி பயன்பட்டாலும், உறுப்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளைப் பார்க்கவும் பயன்படுகிறது. இந்த நிலையில், எக்ஸ்-கதிர்கள் மூலம் எடுக்கப்படும் படத்தில் உறுப்புகள் மிகவும் தெளிவாக வெளிப்படுவதற்குப் பரிசோதனைச் செய்பவருக்குப் பேரியம் சல்பேட் கொடுக்கலாம்.

ஒரு எக்ஸ்ரே பரிசோதனையின் போது, ​​உடலின் ஒரு பகுதியானது எக்ஸ்ரே இயந்திரத்திற்கும் புகைப்படத் திரையிற்கும் இடையில் வைத்ததும், எக்ஸ் இயந்திரம் உடல் வழியாக மின்காந்த அலைகளை (கதிர்வீச்சு) அனுப்பும், அந்தக் கதிர் அலைகளால் உடலின் உள் கட்டமைப்புகள் பிரதிபலித்துப் படங்களாகத் தெரியும்.

எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவு ஆபத்தானதாகக் கருதப்படவில்லை என்றாலும், பரிசோதனைச் செய்பவர்க் கர்ப்பமாக இருந்தால் மருத்துவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

CT ஸ்கேன்:

ஒரு கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன் அல்லது CT ஸ்கேன், உடலின் விரிவான, உயர்தரப் படங்களை உருவாக்கும் MRI போன்றது. CT ஸ்கேன் என்பது மிகவும் நுட்பமான மற்றும் சக்திவாய்ந்த எக்ஸ்ரே ஆகும், இது உள் உறுப்புகள், முதுகுத்தண்டு மற்றும் முதுகெலும்புகளின் 360 டிகிரி படத்தை எடுக்கும். CT ஸ்கேனில் உடலில் உள்ள கட்டமைப்புகளை மேலும் தெரியப்படுத்த, பெரும்பாலும் இரத்தத்தில் காண்ட்ராஸ்ட் திரவங்கள் செலுத்தப்படுகின்றன..

ஒரு CT ஸ்கேன் உறுப்புகள், எலும்புகள், மென்மையான திசு மற்றும் இரத்த நாளங்களின் விரிவான படங்களை உருவாக்குகிறது. மேலும் புற்றுநோய், இதய நோய், குடல்வால் அழற்சி, முதுகுத்தண்டு சார்ந்த பிரச்சனைகள், காயங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஆகியவற்றை எளிதாகக் கண்டறியப் பயன்படுகிறது.

ஒரு CT ஸ்கேனர் மையத்தில் CT ஸ்கேனர் ஒரு சுரங்கப்பாதையுடன் கூடிய ஒரு பெரிய பெட்டி போல் தெரியும். சுரங்கப்பாதையின் உள்ளேயும் வெளியேயும் சறுக்கிச் செல்லும் ஒரு மேஜையில் பரிசோதனைச் செய்பவர்ப் படுத்திருக்க, ஸ்கேனர் அவரைச் சுற்றிச் சுழன்று, உடலின் குறுக்குவெட்டுப் படங்களை உருவாக்குகிறது. ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பவியலாளர், படங்கள் காட்டப்படும் கணினிகளுடன் ஒரு தனி அறையில் அமர்ந்திருப்பார். அவரால் ஒலிபெருக்கி மற்றும் ஒலிவாங்கியின் மூலம் பரிசோதனைச் செய்பவருடன் பேச முடியும்.

CT ஸ்கேன் எக்ஸ்ரே பரிசோதனையை விட விலை அதிகம், மேலும் சிறிய அல்லது கிராமப்புற மருத்துவமனைகளில் எப்போதும் கிடைக்காது.

MRI:

காந்த அதிர்வுப் படம், அல்லது MRI, சக்திவாய்ந்த காந்தம் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி, உடலின் உள்ளே எலும்புகள் மற்றும் மென்மையான கட்டமைப்புகளின் விரிவான மற்றும் உயர்த் தெளிவுத்திறன் கொண்ட குறுக்குவெட்டுப் படங்களை உருவாக்குகிறது. எக்ஸ்-கதிர்கள் மற்றும் CT ஸ்கேன்களைப் போல MRI கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. பொதுவாக எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சனைகள் அத்துடன் கிழிந்த தசைநார்கள், குருத்தெலும்பு மற்றும் முதுகுத் தண்டு வட்டு பிறழ்வுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

MRI பரிசோதனைச் செய்யும் போது, ​​குழாய் வடிவிலான MRI ஸ்கேனருக்குள் சறுக்கிச் செல்லும் மேசையில் பரிசோதனைச் செய்பவர்ப் படுத்திருக்க, ஸ்கேனர் அவரைச் சுற்றி ஒரு காந்தபுலத்தை உருவாக்குகிறது, மற்றும் ரேடியோ அலைகளைப் படம்பிடிக்க வேண்டிய உடலின் பகுதிக்குள் செலுத்த, ரேடியோ அலைகள் உடலில் உள்ள திசுக்களில் எதிரொலிக்கும். இந்த அதிர்வுகள் ஒரு சிறப்பு கணினி நிரல் மூலம் கைப்பற்றப்பட்டு, விரிவான 3D படங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றன.

எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் போன்று MRI வலியற்றது, ஆனால் MRI இயந்திரம் மிகுந்த சத்தத்தை உருவாக்கும். MRI காந்தங்களைப் பயன்படுத்துவதால், உடலில் உலோகக் கிளிப்புகள், உள்வைப்புகள் அல்லது பிற உலோகப் பொருட்கள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

MRI பரிசோதனை அனைத்து மருத்துவமனைகளிலும் கிடையாது. மருத்துவர் MRI பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தால், பரிசோதனைச் செய்ய நியமிக்கப்பட்ட MRI மையத்திற்குச் செல்ல வேண்டும்.

A person wearing gloves holds an X-ray film displaying the image of a broken knee.

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்:

  1. இவை மூன்றும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இமேஜிங் கருவிகள்.
  2. சில மருத்துவ சிக்கல்கள், காயங்கள் மற்றும் நிலைமைகளைக் கண்டறிய இவை மூன்றும் பயன்படுகின்றன.
  3. மூன்றையும் 30 முதல் 60 நிமிடங்களுக்குள் முடிக்க முடியும்.
  4. இவை மூன்றும் ஆக்கிரமிப்பு இல்லாதவை மற்றும் வலியற்றவை.
  5. மூன்றுமே தெளிவான படங்களைப் பெற பரிசோதனைச் செய்பவர் அமைதியாக இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க : MRI பரிசோதனையைப் பற்றி எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்

CT ஸ்கேன் மற்றும் MRI பரிசோதனையிலிருந்து X-கதிர்ப் பரிசோதனையின் வேறுபாடு:

எக்ஸ்ரே படங்கள் 2டி. MRI மற்றும் CT ஆகியவைப் பரிசோதனைச் செய்யப்பட்ட உடலின் ஒரு பகுதியின் 3D படங்களை உருவாக்கும் மேம்பட்ட வகைப் பரிசோதனை ஆகும்.

CT ஸ்கேன் மற்றும் MRI:

  1. CT ஸ்கேன்கள் உடலின் உள் கட்டமைப்புகளின் படங்களை உருவாக்க அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன, எனவே சிறிய அளவிலான கதிர்வீச்சு வெளிப்படுகிறது .
  2. MRI பரிசோதனை காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி படங்களை உருவாக்குகின்றன மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
  3. ஒரு CT ஸ்கேன் பொதுவாக MRI பரிசோதனையை விட விரைவானது.
  4. MRI இயந்திரங்களைப் போலல்லாமல், CT ஸ்கேனர்கள் முழு உடலையும் சுற்றி வருவதில்லை. எனவே கிளாஸ்ட்ரோஃபோபியாவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. கிளாஸ்ட்ரோபோபிக் உள்ளவர்களைத் திறந்த MRI பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.
  5. எலும்பு முறிவுகள், நோயுற்ற திசுக்களைக் கண்டறிவதிலும் மற்றும் தலை, முதுகுத்தண்டு, மார்பு, வயிறு ஆகியவற்றில் ஏற்படும் காயங்களைக் கண்டறிவதிலும் CT ஸ்கேன் சிறந்தவை. மேலும் கட்டிகளின் சரியான இடத்தையும் சுட்டிக்காட்டும்.
  6. மூளை, முள்ளந்தண்டு வடம், கழுத்து, மார்பகங்கள் மற்றும் வயிறு ஆகியவற்றில் உள்ள மென்மையான திசு பிரச்சனைகளைக் கண்டறிவதில் MRI சிறந்தவை.

முடிவுரை:

ஒருவருக்கு ஸ்கேனிங் தேவைப்படும் போது, அவருக்கேற்ற சிறந்த பரிசோதனை முறையைத் தேர்வு செய்யும் நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுவது சிறந்த முதல் படியாகும். எலும்பியல் காயங்களுக்கு, பெரும்பாலான மருத்துவர்கள் பொதுவாக எக்ஸ்ரே மூலம் பரிசோதனைச் செய்யத் தொடங்குவார்கள். சில சிக்கலான நேரங்களில் எக்ஸ்ரேயில் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், சிறந்த துல்லியமான முடிவுகளைப் பெற CT ஸ்கேன் அல்லது MRI பரிசோதனையைப் பரிந்துரைக்கலாம்.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.