MRI மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியுமா?
MRI பரிசோதனை என்பது பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறிந்து அதனை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நோயறிதல் முறையாகும். மேலும் தொடர்ச் சிகிச்சையின் போது புற்றுநோயின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறியவும் மற்றும் சிகிச்சைக்குப் பிறகு ஏதேனும் புற்றுநோய் திசுக்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் MRI பரிசோதனைப் பயன்படுகிறது.
இது உடலின் திசுக்களில் உள்ள கட்டி புற்றுநோயா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும், மேலும் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளதா (மெட்டாஸ்டாஸிஸ்) என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்கவும் உதவுகிறது.
MRI பரிசோதனை வலியற்றது மற்றும் எந்தக் கதிரியக்கத்தையும் பயன்படுத்தாது, எனவே தொடர்ச் சிகிச்சையின் போது பல பரிசோதனைகள் தேவைப்பட்டால் அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.
புற்றுநோய் என்றால் என்ன?
புற்றுநோய் என்பது உடலில் அசாதாரண திசுக்கள் வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் பிரியும் நிலை. இதன் பொருள் அசாதாரண திசுக்கள் அதைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கக்கூடும். உடலின் வெவ்வேறு உறுப்புகள் மற்றும் உடல் பாகங்களில் 200-க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் உள்ளன.
புற்றுநோயின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் பெருக்கமும் உயிரணுக்களின் மரபணு மாற்றங்களால் ஏற்படலாம். சில நேரங்களில், உடலின் ஒரு பகுதியில் தொடங்கும் புற்றுநோய் மற்றொரு பகுதிக்கும் பரவுகிறது, இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. முதல் புற்றுநோய் முதன்மைப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் நிலைப் புற்றுநோய்கள் மெட்டாஸ்டாஸிஸ் மூலம் ஏற்படுகின்றன.
புற்றுநோய் கட்டி எவ்வளவு பெரியது, அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியதா இல்லையா என்பதைப் பொறுத்து மருத்துவர்கள் புற்றுநோயை வெவ்வேறு நிலைகளாக வகைப்படுத்தலாம். இந்த நிலைகள் சிறப்பாகச் செயல்படக்கூடிய சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் எவ்வளவு விரைவாக வளரக்கூடும் என்பதைப் பற்றிய ஒரு சிந்தனையை அளிக்கிறது.
புற்றுநோய்க்கு MRI பரிசோதனை ஏன் தேவை?
உடலில் ஒரு கட்டியைக் கண்டுபிடித்திருந்தால் அல்லது விவரிக்க முடியாத இரத்தப்போக்கு, எதிர்பாராத எடை இழப்பு, உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற புற்றுநோயின் அறிகுறிகளால் ஒருவர்ப் பாதிக்கப்பட்டிருந்தால், MRI புற்றுநோயைக் கண்டறிய ஒரு சிறந்த பரிசோதனை முறையாகும்.
MRI பரிசோதனை மூலம்,
- வெளிப்புறமாகத் தெரியாத கட்டிகள்
- ஒரு கட்டி புற்றுநோயா இல்லையா என்பதைத் தீர்மானிக்க
- கட்டி எவ்வளவு பெரியது என்பதைக் கண்டறிய
- புற்றுநோய் பரவியிருக்கிறதா என்பதைக் கண்டறிய
- கட்டி இருக்கும் பகுதியில் இரத்த ஓட்டத்தை அளவிட
- கதிரியக்க அல்லது கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்க
- சிகிச்சையைத் தொடர்ந்து மாதங்கள் மற்றும் வருடங்களில் புற்றுநோய் மீண்டும் வரவில்லை என்பதை உறுதி செய்யப் போன்ற அனைத்தையும் கண்டறியலாம்.
ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகள் புற்றுநோயிற்கானதாக இருக்கலாம் என்பதே அவருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்தும். எனவே அவர்க் கூடிய விரைவில் ஒரு நோயறிதலைப் பெறுவது முக்கியம், ஆரம்பகால நோயறிதல் ஒரு சிறந்த முன்கணிப்புக்கான திறவுகோலாகும், மேலும் சிகிச்சைக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
புற்றுநோயைக் கண்டறிவதில் காந்த அதிர்வு படம் எவ்வளவு துல்லியமானது?
வீரியம் மிக்க (புற்றுநோய்) மற்றும் தீங்கற்ற (புற்றுநோய் அல்லாத) கட்டிகளை வேறுபடுத்தும் போது MRI பரிசோதனை 77% துல்லியமானது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மென்மையான திசுக் கட்டிகளைத் திரையிடல் செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் MRI பரிசோதனை ஒரு விருப்பமான முறையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
MRI பரிசோதனையில் புற்றுநோய் எப்படி இருக்கும்?
MRI பரிசோதனைப் படங்கள் பொதுவாகக் கருப்பு மற்றும் வெள்ளை, பல்வேறு சாம்பல் நிற நிழல்களுடன் இருக்கும். MRI கருவி உடலைச் சுற்றிலும் வெவ்வேறு கோணங்களில் (குறுக்கு வெட்டுப் படங்கள்) படங்களை உருவாக்குகின்றன, மேலும் மென்மையான திசுக்களைக் காட்டுவதில் சிறந்தவை.
புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள திசு MRI படங்களில் வெள்ளை அல்லது மிகவும் லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்டப்படலாம், அதேசமயம் அல்ட்ராசவுண்ட் படத்தில் இருண்ட நிறத்தில் இருக்கும். காண்ட்ராஸ்ட் திரவம், சில MRI பரிசோதனைகளுக்கு முன்பு உடலில் செலுத்தப்படும் ஒரு பொருளாகும், இது MRI பரிசோதனைப் படங்களில் புற்றுநோயை மிகவும் பிரகாசமாக வெளிப்படுத்த உதவுகிறது. பரிசோதனைச் செய்யும் போது அவை உலோகச் சுவை மற்றும் வெப்பமயமாதல் உணர்வை ஏற்படுத்தலாம், இதற்கு முன்பு காண்ட்ராஸ்ட் திரவம் ஒவ்வாமைப் பரிசோதனைச் செய்பவருக்கு ஏற்பட்டிருந்தால் அதனைக் கதிரியக்க வல்லுநர்க்குத் தெரியப்படுத்துவது முக்கியம்.
மேலும் வாசிக்க : முழு உடல் MRI பரிசோதனைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டியது என்ன?
MRI மூலம் உடலில் எங்கும் புற்றுநோயைக் கண்டறிய முடியுமா?
மூளை, நரம்புகள், உறுப்புகள், குருத்தெலும்பு, தசைநாண்கள், தசைகள் மற்றும் தசைநார்கள் உள்ளிட்ட மென்மையான திசுக்களைத் திரையிடல் செய்வதற்கு MRI பரிசோதனைச் சிறந்தது. புற்றுநோயைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிக விரிவான படங்களை MRI பரிசோதனையால் உருவாக்க முடியும்.
எனவே, MRI பரிசோதனைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்திற்கும் சிறந்த முறையாகும்.
- மூளைக் கட்டிகள்
- முதன்மை எலும்பு கட்டிகள்
- தசையில், தசைநாண்கள், கொழுப்பு, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் உள்ள மென்மையான திசு சர்கோமாக்கள்
- முதுகு தண்டு வடத்தைப் பாதிக்கும் கட்டிகள்
- எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயின் சில வடிவங்கள்
- பெல்விக் உறுப்புகள் மற்றும் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கட்டிகள் (புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் மற்றும் சில கல்லீரல் புற்றுநோய்கள்)
- DRE (டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை) அல்லது PSA இரத்த பரிசோதனைகளை விட MRI திரையிடல் புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிவதில் மிகவும் பயனுள்ள முறை என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.