A female athlete looking at her mobile and smart watch heart rate monitor.

மிகப் பிரபலமான ஹெல்த்டிராக்கிங் செயலிகள் என்னென்ன?

நாம் தற்போது அவசரகதியிலான இயந்திர வாழ்க்கையில் வாழ்கிறோம். இந்நிலையில், சமநிலையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிப்பது சவாலாக உள்ளது.நம் உடல்நிலையை சுயமாக பரிசோதிக்க பல செயலிகள் உள்ளன. இவற்றில் எளிமையானதும் பயனுள்ளதுமான செயலியை தேர்ந்தெடுக்க தனி திறமை தேவை. நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, மன ஆரோக்கியம், உணவுப் பழக்கமுறை உள்ளிட்டவைகளைக் கண்காணித்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள, ஹெல்த் டிராக்கர்கள் உதவுகின்றன.

ஹெல்த் டிராக்கர்

ஹெல்த் டிராக்கர் என்பது ஒரு மின்னணு உபகரணம் ஆகும். இது உங்களது வாழ்க்கைமுறையில் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணித்து, நீங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளீர்களா, இல்லையா என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உங்களது வாழ்க்கை முறையில் மேற்கொள்ளப்படும் உடல்நலன் சார்ந்த நடவடிக்கைகளின் தொகுப்பை, ஒரு சிறிய வரைபடத்தின் மூலம் இது விளக்கிவிடுகிறது.

ஹெல்த் டிராக்கர் எப்போது தேவைப்படுகிறது?

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், அவ்வப்போது தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்தகுதியைக் கண்காணித்த வண்ணம் இருப்பர். வழக்கமாக நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி வகைகள், உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட உங்களது உடலுக்கு ஏதுவான அம்சங்கள் குறித்து அறிவது அவசியமாகின்றது.

நடத்தைகளில் மாற்றங்கள்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்த நிலையிலேயே பணிபுரிந்து வரும் மக்களின் நடத்தை மாற்றங்களுக்கும், அவர்களின் உடற்பயிற்சி தொழில்நுட்பத்திற்கும் இடையிலான தொடர்பை, தேசிய சுகாதார நிறுவனம் ஆராய்ந்தது.

இலக்கு வகுத்தல் கருத்தைக் கேட்டல், வெற்றிப் பெற்றவர்களின் அனுபவக் கதைகள் உள்ளிட்டவைகளையே,இந்த ஹெல்த் டிராக்கர்களும், ஸ்மார்ட்போன் செயலிகளும் முக்கிய காரணிகளாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்த டிராக்கர்கள் மற்றும் செயலிகள், உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

உங்களை உத்வேகப்படுத்தும்

ஆரோக்கியமான பழக்கங்களை வளர்க்க விரும்புவோருக்கு இந்த டிராக்கர்கள் புதிய உந்துதலை அளிக்கின்றன.மேலும், இத்தகைய செயல்களில் நீங்கள் அதிகம் ஈடுபட உங்களை ஊக்கப்படுத்தும்.

ஆரோக்கியத்திற்கான உந்துதலை ஏற்படுத்தும்

அமெரிக்க மக்களில் 10 பேரில் 7 பேருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்த நிலையில், இதிலிருந்து அவர்கள் மீள, இந்த ஹெல்த் டிராக்கர்கள் பேருதவி புரிந்தன. இந்த ஹெல்த் டிராக்கரின் பயன்பாடு, உடல் ஆரோக்கியம் குறித்த சிந்தனையை, மக்களிடையே அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆரோக்கியமான ஊட்டச்சத்துச் சமநிலையைப் பராமரிக்கின்றது

கார்போஹைட்ரேட், கொழுப்பும், புரதங்கள், வைட்டமின்கள் என ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உங்களது உணவுப்பழக்கவழக்கங்களை, நீங்கள் ஹெல்த் டிராக்கரில் முழுமையாகவும் மற்றும் துல்லியமாகப் பதிவு செய்யும் பட்சத்தில், அது, உங்கள் உணவுமுறையில் உள்ள குறைபாட்டைக் கண்டறிய உதவும்.

பிரபலமான ஹெல்த் டிராக்கர்ச் செயலிகள்

Google Fit: Fitness Tracker App

இந்தச் செயலி, ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான மிகச்சிறந்த ஹெல்த் டிராக்கர்ச் செயலியாக உள்ளது. இந்தச் செயலியை, ஸ்மார்ட் வாட்ச்களிலும் பயன்படுத்த இயலும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும். நீங்கள் உங்களுக்கெனப் பிரத்யேகமாக இலக்குகளை வகுக்க முடிவதோடு, அதை நீங்களே கண்காணிக்கவும் முடியும். ஆரோக்கியமான உடல் மற்றும் அமைதியான மனம் வேண்டுவோர், தாராளமாக இதைப் பயன்படுத்தலாம். சரியான அளவில் இதயத்துடிப்பைச் சீரமைக்கும் வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இந்தச் செயலி அனுமதிக்கின்றது.

MyFitnessPal: Calorie Counter

நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடை மற்றும் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. உங்களது உணவுமுறையிலும் போதிய கவனம் செலுத்துவது முக்கியம் ஆகும். இதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான், MyFitnessPal: Calorie Counter செயலி ஆகும். இந்தச் செயலியானது, நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளின் இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமல்லாது, நீங்கள் உட்கொள்ளவேண்டிய கலோரிகளின் மதிப்புகளையும் மதிப்பிட உதவுகிறது. கலோரிகள், உடற்பயிற்சி, உடல் எடைக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கருவியாக, இது விளங்குகிறது.

Fitness and nutrition mobile app screen page in day and dark mode.

Runtastic: Fitness And Running Tracker

ஓட்டப்பந்தய வீரர்களுக்குப் பெரிதும் பலனளிக்கும் வகையில், அவர்கள் ஓடிய தொலைவு, அதற்காக உடலில் எரிக்கப்பட்ட கலோரி, இதயத்துடிப்பின் வீதம் உள்ளிட்டவற்றை மதிப்பிட, இந்தச் செயலி, பேருதவி புரிகிறது.

Lifesum: Diet Tracker App

உங்களுக்கான உணவுமுறை எது என்பதைச் சரியாகத் திட்டமிட இயலாதவர்களுக்கு, இந்த Lifesum செயலி, சிறந்தத் தேர்வாக விளங்குகிறது. உங்களது உணவுமுறை, அதன்மூலம் கிடைக்கும் கலோரிகள் உள்ளிட்டவைகளை நீங்களே திட்டமிடலாம்.

Pedometer: Step Counter App

நீங்கள் எவ்வளவு தொலைவு நடக்கிறீரகள் என்பதைக் கண்காணிக்கவும், அதன்மூலம், எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டு உள்ளன என்பதைக் கண்டறிய, இந்தச் செயலி உதவுகிறது.

Headspace

நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு நேரம் ஜிம்மில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டிலும், அமைதியான மனநிலையைப் பெறவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், எத்தகைய வகையிலான தியான முறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்பதே முக்கியமாகும். நீங்கள் அமைதியான மனநிலையைப் பெறும் பொருட்டு, தேவையான தியான முறைகளைத் தேர்ந்தெடுக்க, இந்தச் செயலி உதவுகிறது.

Fitplan

உங்களுக்கு என்று ஒரு பிரத்யேகப் பயிற்சியாளர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அதற்கான பொருளாதார வசதிகள் இருப்பதில்லை.

இந்தச் செயலி, மிகவும் குறைந்தக் கட்டணத்திலேயே, உங்களுக்கென ஒரு சொந்தப் பயிற்சியாளர் இருப்பது போன்ற உணர்வினை அளிக்கிறது. இந்தச் செயலியில், முன்னணி விளையாட்டு வீரர்கள், தொழில்முறை நிபுணர்கள் என அவர்கள் அனுபவத்தில் உருவான 20 முதல் 90 நிமிடங்கள் கால அளவிலான வீடியோக்களை, இதில் தொகுத்து உள்ளனர்.

SleepCycle

உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்க, உறக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இரவுநேரத்தில், நாம் சரியான அளவில் உறங்காவிட்டால், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்துவதற்கும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பதற்கும், உறக்கம் இன்றியமையாததாக உள்ளது.

உறக்கச் சுழற்சி நிகழ்வானது, உறக்கத்தின் தரத்தை மட்டுமல்லாது, உறக்க நிலையில், இதயத்துடிப்பின் வீதத்தைக் கணக்கிட உதவுகிறது. SleepCycle செயலி, உங்களின் உறக்கப் பழக்கத்தைக் கண்காணிக்கின்றது. குறட்டை விடுதல் அல்லது உறக்க நிலையில் ஏதாவது பேசுதல் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.

மேலும் வாசிக்க : செயற்கைக் கருத்தரிப்பு முறையில் PGT சோதனையின் பங்கு

Fooducate

அனைவருக்கும் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை வழங்கும் பொருட்டு, இந்தச் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. மரபணு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான வேதிப்பொருட்கள், உணவுவண்ணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. இந்தச் செயலியின் உதவி கொண்டு, உணவுமுறை நிபுணர்கள், சுகாதார வல்லுநர்கள் உள்ளிட்டோரிடமிருந்து தக்க ஆலோசனைகளைப் பெற முடியும்.

HealthTap

உங்களுக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்படும் போது, கூகுள் உள்ளிட்டவைகளை நாடுவதற்குப் பதிலாக, மருத்துவர்களின் ஆதாரப்பூர்வமான உதவிகளைப் பெற, இந்தச் செயலி உதவுகின்றது. இந்தச் செயலியின் மூலம், நீங்கள் உங்கள் சந்தேகங்களுக்குத் தீர்வு வழங்கும் மருத்துவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலும். இதன்மூலம், உங்களுக்கு உண்மையான தகவல்கள் மட்டும் கிடைக்கின்றன.

இதுபோன்ற ஹெல்த் டிராக்கர்களின் உதவியுடன், உடல்நலனைக் கண்காணித்து, நலமான வாழ்க்கை வாழ்வோமாக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.