அலாரம் பயன்படுத்துபவரா – இதை மிஸ் பண்ணாதீங்க!
நீங்கள் காலையில் உறக்கத்தில் இருந்து விழிப்பதற்கு அலாரம் பயன்படுத்துபவர்களாக இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதை அறிவீர்களா?
நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, திடீரென்று அலரும் அலாரம் ஒலி கேட்டு நீங்கள் திடுக்கிட்டு எழுந்திருக்கும் போது, உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பின் வீதம் திடீரென்று அதிகரிக்கின்றன. இது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைப் பன்மடங்கு அதிகரிப்பதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
காலையில் அலாரம் இன்றித் தன்னிச்சையாக எழுந்து இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, அலாரம் உதவியுடன் எழுந்து இருப்பவர்களுக்கு, காலை நேர ரத்த அழுத்தம் 74 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
போதிய அளவிற்கு உறக்கம் இல்லாதவர்களுக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், அலாரத்தின் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து இருப்பவர்களுக்கு, இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம்.
இந்தத் திடீர் ரத்த அழுத்த உயர்வு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, இதயத்திற்குக் கூடுதல் சுமையை உண்டாக்குகிறது. இதனால் சோர்வு, சுவாசப் பிரச்சனை, கவலை, கழுத்து வலி, தலைவலி போன்ற அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. தீவிர நிலையில் மூக்கிலிருந்து ரத்தம் கசிதல் கூட நடைபெறலாம்.
இதயப் பாதிப்புகளைக் கொண்ட பெரியவர்கள், போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலையில், காலையில் அலாரம் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் நிலையில், அவர்களின் உடலில் ரத்த அழுத்த மாறுபாடானது, கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் ஆபத்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிகரிக்கும் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்கள்
அலாரம் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தால், கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உறக்கச் சுழற்சியைக் கலைத்து, சோர்வான மற்றும் ஈடுபாடற்ற மனநிலையை உருவாக்குகின்றன.
காலையில் எழுந்திருக்க அலாரம் பயன்படுத்தும் நிகழ்வானது, மனநிலையையும், மன ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. உணர்ச்சிகளின் கட்டுப்பாடு மற்றும் மனநிலை ஸ்திரத்தன்மைக்கு உறக்கம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அலாரங்களில் இருந்து வரும் குறுக்கீடுகள் எரிச்சல், மன அழுத்தம் மற்றும் பதட்ட நிலைக்கு உட்படுத்துகின்றன. இது இதய ஆரோக்கியத்தை மறைமுகமாகப் பாதிக்கிறது.
மேலும் வாசிக்க : மனச்சோர்வு இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்குமா?
Snooze – ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
உறக்கச் சுகாதாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் முன்னணி ஜெர்னலில் வெளியிடப்பட்டு உள்ளது. அலாரம் ஒலி கேட்டு எழுந்திருப்பவர்கள் Snooze பட்டனை அழுத்தி, கூடுதலாக 5 அல்லது 10 நிமிடங்கள் உறங்கினால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Snooze பட்டனைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், முதல் நாள் இரவின் 6 நிமிட கால உறக்கத்தை மட்டுமே இழக்கின்றனர். இது அவர்களின் காலை உறக்கம் அல்லது மனநிலையைப் பாதிக்காது என்று அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அலாரங்களுக்கு என ஆரோக்கியமான மாற்றுகள்
முன்னணி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர், அலாரத்திற்கு மாற்றாகச் சில ஆரோக்கியமான மாற்று வழிகளைப் பரிந்துரைத்து உள்ளார்.
நிபுணரின் பரிந்துரைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
- அலாரத்தைத் தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- தினசரி இரவு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியம் ஆகும். இது ஒருவரை உறக்க நிகழ்வில் இருந்து இயற்கையாக எழுந்திருக்க உதவுகிறது.
- உங்கள் படுக்கை அறைக்குள் இயற்கை ஒளியை அனுமதிப்பதன் மூலம், மூளையில் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதன்மூலம், காலையில் தன்னிச்சையாக எழுந்திருக்க உதவுகிறது.
- ஒரு சீரான உறக்க அட்டவணையைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம், உடலின் உறக்கச் சுழற்சிக்குக் காரணமான உடலியல் கடிகாரம் எனப்படும் சர்காடியன் ரிதத்தின் சீரான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
காலையில் அலாரம் பயன்பாடு இன்றி, இயற்கையான முறையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல்நலமும் மேம்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.