வலிப்புப் பாதிப்பு குறித்த கட்டுக்கதைகளை அறிவோமா?
வலிப்புப் பாதிப்பு எனப்படுவது, மூளையின் செயல்பாட்டில் நிகழும் அசாதாரண வகையிலான நரம்பியல் பாதிப்பு ஆகும். இது வலிப்புத் தாக்கங்கள் மற்றும் விசித்திரமான நடத்தைகளுக்கு வழிவகுப்பதாய் உள்ளன. பாலினம், வயது உள்ளிட்ட எவ்வித வேறுபாடுகளின்றி, அனைவரையும் இது பாதிக்கின்றது. முறையான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, பாதிப்பில் இருந்து விடுபட்டு, இயல்பான வாழ்க்கை வாழ இயலும்.
200 நபர்களில் ஒருவருக்குப் பாதிப்பு
உலகச் சுகாதார அமைப்பின் (WHO) கூற்றின்படி, சர்வதேச அளவில், வலிப்புப்பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சுமார் 50 மில்லியனைக் கடந்து உள்ளது. இந்தியாவில் மட்டும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வலிப்புப்பாதிப்பிற்கு உள்ளான நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு 100 அல்லது 200 நபர்களில் ஒருவர் ஏதாவதொரு நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
வலிப்புப்பாதிப்பு குறித்து பெரும்பாலான மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பாதிப்பு தொடர்பான கட்டுக்கதைகள் உலவி வருகின்றன. இந்தக் கட்டுக்கதைகள், பாதிப்பு தொடர்பான களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள், முறையான சிகிச்சைகளைப் பெற முன்வருவதில் தடைக்கற்களாக விளங்குகின்றன. இந்தக் கட்டுரையில், வலிப்புப்பாதிப்பு தொடர்பான கட்டுக் கதைகளையும், அதன் உண்மைத் தன்மையையும் விரிவாக அறிவோமாக…
கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்
கட்டுக்கதை : வலிப்புத் தாக்கங்களை உணர்பவர்களுக்கு, வலிப்புப்பாதிப்பு நிச்சயம் இருக்கும்.
உண்மை : வலிப்புப் பாதிப்பின் முதன்மையான அறிகுறி வலிப்புத்தாக்கங்கள் என்பதை யாரும் மறக்கவோ அல்லது மறுக்கவோ இயலாத நிலையில், வலிப்புத்தாக்கங்கள் இருப்பதனால் மட்டுமே, அவர் வலிப்புப்பாதிப்பிற்கு உள்ளானவர் என்பதை அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. மூளையில் நிகழும் அசாதாரண மின்கடத்தலால், பல்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதயப் பாதிப்பிற்கு உள்ளானவர்களும், வலிப்புத்தாக்கங்களை அவ்வப்போது அனுபவிப்பது உண்டு. இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைச்செல்களுக்குப் போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுகின்றன. வலிப்புத்தாக்கங்கள், மனநலப் பாதிப்புகள், உளவியல் அதிர்ச்சி உள்ளிட்ட காரணிகளால் தூண்டப்படுகின்றன.
கட்டுக்கதை : வலிப்புத் தாக்கங்கள், உங்கள் வேலைச் செய்யும் திறனைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
உண்மை : வலிப்புப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், மற்றவர்களைப் போல இயல்பானவர்கள் தான் என்றும், அவர்களால் அனைத்து வகை வேலைகளையும் எளிதாகச் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து ஆகும். வலிப்புப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், சரியான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமாகவே, இயல்பான அளவிலான வாழ்க்கை மற்றும் வேலைச் சூழலை அவர்களால் பராமரிக்க இயலும். அவர்களால், மற்றவர்களைப் போல், எல்லா நேரத்திலும் திறம்பட செயல்பட இயலாது.
கட்டுக்கதை: வலிப்புத்தாக்க நோயாளியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், வலிப்பு நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது.
உண்மை : இது பழமையான மற்றும் மிகவும் பொதுவான கட்டுக்கதைகளுள் முதன்மையானது ஆகும். வலிப்புப் பாதிப்பானது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதில்லை. வலிப்புப் பாதிப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிவது இன்னும் சவாலான நிகழ்வாக உள்ளபோதிலும், இது தொற்றுநோய்ப் பாதிப்பு இல்லை என்பதில் மருத்துவ நிபுணர்கள் உறுதியாக உள்ளனர். உலகச் சுகாதார அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட தரவுகள், வலிப்புப்பாதிப்பிற்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்துவதாக இல்லை என்பதே, மறுக்க இயலாத உண்மை. கடுமையான காயங்கள், மூளையில் ஏற்படும் தொற்றுப் பாதிப்பு, பக்கவாதம் அல்லது பிறவிக் குறைபாடுகளால், மூளைப்பகுதியில் ஏற்படும் சேதத்தின் விளைவாகவே, வலிப்புப் பாதிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
கட்டுக்கதை: வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்ச்சி ஸ்திரத்தன்மையில் பாதிப்பு இருக்கும்.
உண்மை : வலிப்பு நோய்ப்பாதிப்பு தொடர்பாக, நிறைய களங்கங்கள் இருந்தபோதிலும், அது பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சி ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து ஆகும். வலிப்பு நோயாளிகள் மற்றவர்களைப் போலவே இயல்பான உணர்ச்சி நிலையில் உள்ளனர். அனைத்து நோய்களும் ஓரளவு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். இது வலிப்பு நோய்க்கு மட்டும் உரியதல்ல.
கட்டுக்கதை : வலிப்புத்தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழி, பாதிப்பின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமே ஆகும்.
உண்மை : வலிப்புத்தாக்கங்களுக்கு உள்ளானவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. வலிப்பு நிகழ்வானது, 30 முதல் 90 வினாடிகள் வரை மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில், அதன் சிக்கல்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது என்பதே நிதர்சனம். வலிப்பு நிகழ்வின் போது, குறிப்பிட்ட நபரை நீங்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், வலிப்புத்தாக்கமானது நிற்கப் போவதில்லை. அதற்குப்பதிலாக, அந்நபருக்கு எவ்விதக் காயமும் ஏற்படாவண்ணம், பாதுகாப்பான திசை நோக்கி மட்டும் திருப்ப முயற்சி செய்யலாம். இது அவர்களுக்குக் காயங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.
கட்டுக்கதை: வலிப்பு நோய்ப் பாதிப்பானது, “தீய ஆவிகள்” அல்லது “இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளால்” ஏற்படுகிறது.
உண்மை : வலிப்புப் பாதிப்பு என்பது ஒரு நரம்பியல் தொடர்பானது ஆகும். இந்தப் பாதிப்பிற்கு, நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
கட்டுக்கதை: வலிப்புப் பாதிப்பிற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை.
உண்மை : பல வகையான சிகிச்சைகள் உள்ளன. மருந்துகள், அறுவைச் சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் வலிப்புத்தாக்கங்களைக் குறைக்க முடியும். சரியான சிகிச்சையுடன் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.
கட்டுக்கதை : வலிப்பு நோய்ப் பாதிப்பானது, மரபியல் காரணிகளைச் சார்ந்தது ஆகும்.
உண்மை : வலிப்பு நோய்ப்பாதிப்பானது, வாழ்க்கையின் எந்த நேரத்திலும், யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலர் இப்பாதிப்புடன் பிறந்திருப்பர். மற்றவர்களுக்குப் பின்னர் வரலாம். வயது, பாலினம், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
மேலும் வாசிக்க : அல்சைமர் நோயாளிகளின் பராமரிப்பிற்கான குறிப்புகள்
கட்டுக்கதை : வலிப்புத்தாக்க நிகழ்வின்போது, பாதிக்கப்பட்டவர்கள், சில நேரங்களில் தங்களின் நாக்கையே கடித்து விழுங்கி விடுவர்.
உண்மை : வலிப்பு நோய்ப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், தங்கள் நாக்கைக் கடிப்பது வழக்கமான நிகழ்வுதான் என்றபோதிலும், நாக்கை விழுங்கி விடுவர் என்று சொல்வது எல்லாம், சுத்த ஹம்பக் ஆகும்.
மேற்குறிப்பிட்ட கட்டுக்கதைகளையும், அவற்றின் உண்மைத்தன்மையையும் அறிந்த நீங்கள், வலிப்பு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்க, அவர்களுக்குத் தெரிவித்து, அவர்களை வலிப்பு நோய்ப் பாதிப்பில் இருந்து விடுவித்து, உங்களைப்போன்ற இயல்பான நல்வாழ்க்கையை, அவர்களும் வாழ வழிச் செய்வோமாக…