நரம்பியல் குறைபாடுகள் – அறிந்ததும் அறியாததும்!
நரம்பியல் குறைபாடு அல்லது நரம்பியல் பாதிப்பு என்பது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் மருத்துவ நிலைமையாகும். மூளை, முதுகெலும்பு மற்றும் நரம்புகளின் உட்கட்டமைப்பில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்களின் மூலமாகவே, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவ நிலைமைகளின் காரணம் மற்றும் அதன் தோற்றத்தைப் பொறுத்து, நரம்பியல் பாதிப்புகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
நரம்பியல் பாதிப்புகள் ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால், இவை நிரந்தரக் குறைபாடு மற்றும் நினைவக இழப்பை ஏற்படுத்தலாம். இது தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. நீங்கள் அல்லது உங்களுக்குப் பிரியமானவர்கள் நரம்பியல் பாதிப்புகளின் ஆரம்பகால அறிகுறிகளைச் சந்திக்கிறீர்கள் என்றால், அதன் வகைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் குறிந்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகள்
மூளை, நரம்பு மண்டலம், முதுகெலும்புப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களே, நரம்பியல் பாதிப்புகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில், இந்தப் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு, இந்தக் குறிப்பிட்ட பகுதிகளைத் தாண்டி வேறு பகுதிகளிலும் அறிகுறிகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தம், உளவியல் ரீதியிலான மாற்றங்கள் உள்ளிட்டவை, இதன் முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், திடீர்க் கோபம், மற்றவர் மீது பரிதாபம் கொள்ளுதல், மனச்சிதைவுக்கு உள்ளாதல் உள்ளிட்டவை, நரம்பியல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகக் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்த அறிகுறிகளை, நாம் நரம்பியல் பாதிப்பின் அறிகுறிகள் தான் என்று அறுதியிட்டுக் கூறிவிட இயலாது. தகுந்த மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்து, உரிய பரிசோதனைகள் செய்தபின்னரே, நாம் இதனை உறுதிப்படுத்த முடியும்.
நரம்பியல் பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது?
பெரும்பாலான நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மூளைப்பகுதியில் காயம் ஏற்பட்டவர்கள் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளானவர்களுக்கு, நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. நோயாளியின் உடல் ஆரோக்கியம், உணவுமுறை, வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளைப் பொறுத்தும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மாறுபடுகின்றன.
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களுக்கு, மரபணு மாற்றங்களே முக்கியக் காரணமாக உள்ளன. நோயாளியின் தோலின் கீழ்ப்பகுதியில் ஆழமாக அமைந்து உள்ள புற நரம்புகளில் சேதங்கள் ஏற்படுவதாலும், நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளன.
- வாழ்க்கைமுறைச் சார்ந்த காரணிகள்
- நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள்
- மரபணு மாற்றங்கள்
- ஊட்டச்சத்துத் தொடர்பான காரணிகள்
- சுற்றுச்சூழல் பாதிப்புகள்
- உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதிர்ச்சியின் விளைவாகவும், நரம்பியல் குறைபாடுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சில வகை நரம்பியல் பாதிப்புகள்
சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்ட நரம்பியல் குறைபாடு பாதிப்புகள், நரம்பியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், பெரும்பாலான மக்களிடையே பொதுவாகக் காணப்படும் நரம்பியல் பாதிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
அல்சைமர் நோய்ப்பாதிப்பு
இது மறதி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. நினைவு இழப்பு, சிந்தனை மற்றும் நடத்தைப் பாதிக்கும் வகையிலான மூளைப்பாதிப்பு நிலை இது ஆகும்.
பார்கின்சன் நோய்
இது உடலின் இயக்கத்தை முற்றிலுமாகப் பாதிக்கும் வகை நோய்ப்பாதிப்பு ஆகும். நடுக்கம், விறைப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக உள்ளன. இது உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் இடையூறை ஏற்படுத்தவல்லதாக உள்ளது.
மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ்
இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் வகையிலான நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். தசைகள் பலவீனம், கண்பார்வைத் தொடர்பான பிரச்சினைகள், உடலின் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையில் பாதிப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.
வலிப்பு நோய்
இது கை மற்றும் கால்களில் வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையிலான நரம்பியல் பாதிப்பு ஆகும். இதன் பாதிப்பு லேசானது முதல் மிகக் கடுமையானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஒற்றைத் தலைவலி
இது மைக்ரைன் பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது. குமட்டல், வாந்தி, உணர்திறன் குறைவு உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய தலைவலி உணர்வு ஆகும்.
அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ் (ALS)
மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள நரம்புச் செல்களைப் பாதிக்கும் நோய்ப்பாதிப்பே, அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ் ஆகும். இந்த நோய்ப்பாதிப்பு கொண்டவர்களுக்கு, உடலின் தசைகள் பலவீனம் அடைவதால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஹண்டிங்டன் நோய்
இது மூளைச் செல்களின் எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தும் வகையிலான மரபணு பாதிப்பு ஆகும். இந்த நோய்ப்பாதிப்பு உடையவர்களுக்கு உடலின் இயக்கம், அறிவாற்றல் உள்ளிட்டவைகளில் குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாது, மனநலப் பிரச்சினைகள் உருவாவதற்கும் காரணமாக அமைகிறது.
அதிர்ச்சிகரமான மூளைக் காயம் ((TBI)
தலையில் அடிபட்டு காயம் ஏற்படுதல் அல்லது அதிர்ச்சியின் விளைவாக மூளையில் காயம் ஏற்படுதல் உள்ளிட்ட காரணிகளின் மூலமும், நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது மிதமானது முதல் கடுமையானது வரையிலான பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.
பெருமூளைப் பகுதியில் ஏற்படும் வாதம்
இது உடலின் இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பைக் கணிசமான அளவில் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் பிறப்பின் போதோ அல்லது சிறிது நேரத்திற்குப் பிறகோ, பெருமூளைப் பகுதிக்குச் சேதம் ஏற்படுகிறது.
மேலும் வாசிக்க : குளிர்காலத்தில் முழங்கால் வலி எதனால் ஏற்படுகிறது?
பொதுவான நரம்பியல் பாதிப்புகளுக்கான சிகிச்சைமுறைகள்
நரம்பியல் பாதிப்புகளுக்கான சிகிச்சைமுறைகள், குறிப்பிட்ட நிலை வகை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தது. சிறந்த முடிவுக்காக, நோயறிதலின் அடிப்படையில் வெவ்வேறு சிகிச்சை விருப்பங்களை, மருத்துவர்ப் பரிந்துரைப்பர். நிலைமையின் ஆரம்பக் கட்டங்களில், சுகாதார நிபுணரின் அணுகல் மூலமும், அது சிகிச்சை முறையின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் நரம்பியல் பாதிப்புகளின் நிர்வாகத்தை, திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
நரம்பியல் பாதிப்புகளின் அடிப்படையில் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் சில பொதுவான சிகிச்சைமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
மருந்துமுறைகள்
நரம்பியல் பாதிப்புகளின் தீவிரத்தைத் தாமதமாக்குவதற்கும், அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும், சிகிச்சைமுறையின் துவக்க நிலையாக, மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைச் செய்கின்றனர். கை – கால் வலிப்புக்கான ஆன்டி எபிலெப்டிக் மருந்துகள், பார்கின்சன் நோய்ப்பாதிப்பைத் தடுக்கவல்ல டோபமைன் அகோனிடுகள், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் பாதிப்பிற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை, மருத்துவர்கள் பரிந்துரைச் செய்கின்றனர்.
அறுவைச் சிகிச்சைகள்
கை – கால் வலிப்பு உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகளினால் ஏற்பட்ட கட்டி அல்லது திசுக்களை நீக்க அல்லது மூளைத் தூண்டுதல் சாதனங்களைப் பொருத்த சில சமயங்களில் அறுவைச் சிகிச்சைமுறையும் அவசியமானதாக உள்ளது.
உடல் மற்றும் தொழில்சார்ச் சிகிச்சை
நரம்பியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் உடல் சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உடல்சார்ந்த சிகிச்சை முக்கியமானதாக உள்ளது.
மக்கள் தங்கள் அன்றாட பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொள்ளவும், தன்னிச்சையாகச் செயல்படவும் தொழில்சார்ச் சிகிச்சைமுறையானது உதவுகிறது.
பேச்சு சிகிச்சை
நரம்பியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்தவும், மற்றவர்களுடன் சரளமாகப் பேசும் திறனை வளர்க்கவும் பேச்சு சிகிச்சைப் பேருதவி புரிகிறது.
CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை
நரம்பியல் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உணர்ச்சிகள், பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிக்க CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழ்க்கைமுறையில் மாற்றங்கள்
உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மன அழுத்தத்தைக் குறைக்கவல்ல நுட்பங்கள் நிறைந்த வாழ்க்கைமுறையை மேற்கொள்வதன் மூலம், நரம்பியல் குறைபாடு பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க இயலும்.
நரம்பியல் பாதிப்புகளின் தீவிரத்தைத் தகுந்த வழிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைத்தரத்திற்கு உயர்வோமாக..