மேமோகிராம் – அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை..
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனைக்கு, சர்வதேச நாடுகளே அங்கீகாரம் அளித்து உள்ள நிலையில், இந்தச் சோதனையின் முலம், சில குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களின் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது என்பது வருந்தத்தக்கச் செய்தி தான்…
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய, சிறந்த முறையாக மேமோகிராம் சோதனை முறைப் புழக்கத்தில் உள்ளது. பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் சோதனை முறையிலும் சில வரம்புகள் உள்ளன. இந்தச் சோதனையின் மூலம், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா அல்லது இல்லையா என்று 100 சதவீதத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. இந்தச் சோதனையால், சில புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிய முடியாததால், கூடுதலாகச் சில சோதனைகள் அவசியமாகின்றன.
தவறான எதிர்மறைச் சோதனை முடிவுகள்
மேமோகிராம் சோதனையை, பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களிடம் நடத்தும் போது, இந்தத் தவறான எதிர்மறைச் சோதனை முடிவுகள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது. தவறான எதிர்மறைச் சோதனை முடிவுகள், பெண்களுக்குத் தவறான பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பதாக உள்ளது.
மேமோகிராம் சோதனையின் முடிவில், எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தாலும், மார்பகப் பகுதியில் புதிதாக ஏதேனும் புதிய மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். தென்பட்ட மாற்றங்களைப் பொறுத்து, மருத்துவர், டயக்னாஸ்டிக் மேமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்ட் சோதனைக்குப் பரிந்துரைச் செய்வார்.
தவறான நேர்மறை முடிவுகள்
மார்பகப் பகுதியில், புற்றுநோய் இல்லாதபோதிலும், அங்கு ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருப்பது போன்று, மேமோகிராம் சோதனையில் முடிவுகள் வரும் நிகழ்வே, தவறான நேர்மறை முடிவுகள் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றவர்கள், டயக்னாஸ்டிக் மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் மற்றும் சில நேரங்களில் எம் ஆர் ஐ அல்லது மார்பகத் திசு பரிசோதனைப் போன்ற கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.
சிறு வயது பெண்கள், பெரிய மார்பகங்களை உடையவர்கள், மார்பகத் திசு பரிசோதனைகளை இதற்கு முன் மேற்கொண்டவர்கள், ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்பவர்களுக்கு, தவறான நேர்மறை முடிவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
தவறான நேர்மறை முடிவுகள், பெண்களிடையே பயத்தை ஏற்படுத்தி விடுவதால், அவர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதோடு, கால விரயமும் எதிர்கொள்வதால், அவர்கள் மன உளைச்சல் போன்ற அசவுகரியத்திற்கும் உள்ளாகின்றனர்.
மேமோகிராம் மட்டுமே தீர்வு அல்ல
மேமோகிராம் சோதனை முடிவுகள், அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து விடுவது இல்லை. அவரவர்களின் உடல்நிலைச் சார்ந்து, இந்த முடிவுகள் வேறுபடுவதினால், இதன் நம்பகத்தன்மையில் ஒருவிதச் சந்தேகம் ஏற்படுகிறது. இதய நோய்கள், கிட்னி, கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிப்பு உடைய பெண்கள், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே, மேமோகிராம் சோதனையைத் தொடர்ந்து மேற்கொள்வது குறித்த தீர்க்கமான முடிவிற்கு வர வேண்டும்.
இது பரம்பரைக் குறைபாடா?
வீட்டில் இதற்கு முன் யாருக்கும், மார்பகப் புற்றுநோய் தொடர்பான சிகிச்சையோ அல்லது அறிகுறிகளோ தென்படாத படசத்தில், அந்த வீட்டில் உள்ள ஒரு நபருக்கு, மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், என்ன அர்த்தம்? இந்தச் சந்தேகம் தான், இன்றைய நிலையில் பெரும்பாலான பெண்களுக்கு நிகழ்ந்து உள்ளது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு, பரம்பரைக் குறைபாடு என்று நாம் ஒட்டுமொத்தமாகக் கூறிவிட இயலாது. ஏனெனில், இதற்கு முன் வீட்டில் உள்ள நபர்களுக்கு, இந்தக் குறைபாடு காணப்பட்டு இருந்தால், பின்வரும் சந்ததியினருக்கு 5 முதல் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே, இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாமாகவே, மேமோகிராபி சோதனைச் செய்து கொள்ளலாமா?
நிச்சயமாகச் செய்து கொள்ளலாம். உங்கள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மையங்களில், 3D மேமோகிராபி வசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
3D மேமோகிராபி சோதனை, மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனை ஆகும். 2D மேமோகிராபி சோதனையை ஒப்பிடும் போது, 3D மேமோகிராபி அதிகச் செயல்திறன் கொண்டதாகவும், முழுமையான தீர்வு பெறவும் உதவுகிறது.
3D மேமோகிராபி சோதனை, பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மார்பகப் பகுதியில் உள்ள சிறிய கட்டிகளையும் எளிதாக அடையாளம் காண பயன்படுகிறது. தவறான சோதனை முடிவுகளும், இந்தச் சோதனை முறையில் குறைவாகவே வருகின்றன.
மேமோகிராம் சோதனையை எப்போது மேற்கொள்வது சிறந்தது?
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ஆண்டிற்கு ஒருமுறை மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்வது நல்லது. புற்றுநோய் பாதிப்பின் விகிதம் அதிகம் உள்ள பெண்கள், வருடாந்திர மேமோகிராம் சோதனையை, 30 வயதிலிருந்தே துவக்குதல் நலம்.
மேமோகிராபி சோதனையை எந்த வயதிலிருந்து துவங்கலாம்?
புற்றுநோய் பாதிப்பின் விகிதம் அதிகம் உள்ள பெண்கள், வருடாந்திர மேமோகிராம் சோதனையை, 30 வயதிலிருந்தே துவங்கலாம்.
40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள், வழக்கமான மேமோகிராம் சோதனைப் பெரும்பாலும் பரிந்துரைச் செய்யப்படுவது இல்லை.
50 முதல், 74 வயது பெண்கள், 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமான மேமோகிராம் சோதனைச் செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
75 முதல் அதற்கு மேற்பட்ட பெண்கள், மேமோகிராம் சோதனை எந்த வகையில் தேவை என்பதை, மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
மேமோகிராம் சோதனை எவ்வளவு துல்லியம் கொண்டது?
பெண்களின் மார்பகப் பகுதியில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் காணப்படும் போதிலும், அதன் தீவிரம் அதிகரிக்கும் போதுதான், அவர்களால் அதன் கொடூரத்தை உணர முடியும். மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மேமோகிராபி சோதனைப் பேருதவி புரிகிறது. இந்தச் சோதனை 85 சதவீதம் முதல் 90 சதவீதம் துல்லியம் கொண்டது ஆகும்.
கதிரியக்க ஆபத்து உள்ளதா?
மேமோகிராம் சோதனையின் போது, மார்பகப் பகுதியில் குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களே செலுத்தப்படும் போதிலும், நாம், மேமோகிராம் சோதனையைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், உடலில், கதிரியக்கம் சேகரம் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது உடனடியாக இல்லை என்றாலும் கூட, பிற்காலத்தில் ஏதேனும் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால், இந்த விவகாரத்தில், நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை மேமோகிராம் உறுதி செய்கின்றதா?
மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மேமோகிராம் சோதனை உதவுகிறது. மேமோகிராம் சோதனையில், மார்பகப் பகுதியில் குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்கள் உட்செலுத்தப்பட்டு, படம் பிடிக்கப்படுகிறது. வழக்கமான மேமோகிராம் சோதனைகளின் மூலம், மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியலாம். சிலருக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு கூட பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படலாம்.
மேமோகிராம் சோதனையில் உள்ள அபாயங்கள்
மேமோகிராம் சோதனையில், குறைந்த அளவிற்கே எக்ஸ்ரே கதிர்கள் பயன்படுத்தப்படுவதால், தவறான முடிவுகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளன. நாம் நம் அன்றாட வாழ்வில் இயற்கையாகவே, பல்வேறு கதிரியக்கத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இந்தச் சூழ்நிலையில், மெமொகிராபி சோதனையிலும் கதிரியக்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், அதிக அளவிலான கதிரியக்கம் நமது உடலில் சேகரம் ஆகும் வாய்ப்பு இருப்பதால், இதன் காரணமாகவும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.
மேமோகிராபி சோதனையை விட அல்ட்ரா சவுண்ட் சோதனைச் சிறந்ததா?
மேமோகிராபி சோதனையை விட அல்ட்ரா சவுண்ட் சோதனைச் சிறந்தது ஆகும். ஏனெனில், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய மேமோகிராம் சோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், 45 வயதிற்குக் குறைவான பெண்களிடையே, இந்தப் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் சோதனையே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
எந்த வகை மேமோகிராபி சிறந்தது?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து கொள்ள மேமோகிராம் சோதனையை, மருத்துவர்கள் பரிந்துரைப்பது அனைவரும் அறிந்ததே. புற்றுநோய் பாதிப்பு சிறிய அளவிலிருந்தாலும், 3D மேமோகிராபி சோதனையில், அதைத் துல்லியமாகக் கண்டறியலாம். இந்த முறையில், தவறான முடிவுகள் வரும் வாய்ப்பும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.
மேலும் வாசிக்க : மேமோகிராம் சோதனை முடிவுகள் உணர்த்துவது என்ன?
மேமோகிராம் சோதனையைவிட மார்பக எம் ஆர் ஐ ஸ்கேன் சிறந்ததா?
மார்பக எம் ஆர் ஐ ஸ்கேன் சிறந்த முறை என்றபோதிலும், இது மேமோகிராம் சோதனைக்கு மாற்று என்று சொல்லிவிட முடியாது. மேமோகிராம் சோதனையில் கண்டுபிடிக்க இயலாத சில வகைக் கட்டிகளைக் கண்டறிய எம் ஆர் ஐ ஸ்கேன் பயன்படுகிறது. மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் கொண்ட பெண்களுக்கு, மேமோகிராம் சோதனையைத் தொடர்ந்து, மார்பக எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
மேமோகிராபி சோதனைக்கு முன் செய்யக் கூடாதவை?
மேமோகிராபி சோதனை மேற்கொள்ளப்படும் நாளில் டியோடரண்ட், வியர்வைச் சுரத்தலைத் தடுக்கும் மருந்துகள், லோஷன்கள், கிரீம்கள், அழகு சாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவற்றை, மார்பகப் பகுதியில் உபயோகப்படுத்த கூடாது. இது, உங்கள் சோதனை முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
மாதவிடாய் சுழற்சியின் போது மேமோகிராம் சோதனைச் செய்யலாமா?
மாதவிடாய் சுழற்சி காலத்தின் போதும் மற்றும் அதற்கு முந்தைய வாரத்தில், மார்பகங்கள் தளர்வாகக் காணப்படும். இந்தச் சூழ்நிலையில், மேமோகிராபி சோதனைச் செய்தால் சரியான முடிவுகள் வராது. எனவே, மாதவிடாய் சுழற்சி துவங்கி 1 அல்லது 2 வாரங்களுக்குப் பிறகு, மேமோகிராபி சோதனைச் செய்வது நலம்.
ஹார்மோன் சிகிச்சையால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
மேமோகிராபி சோதனை முடிவுகளின் சென்சிட்டிவிட்டி, அப்பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சைச் செய்து கொண்டார்களா என்பதைப் பொறுத்தது.
மேமோகிராம் சோதனை மட்டுமே தீர்வு அல்ல என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மருத்துவர்களைக் கலந்தாலோசித்து, விரைவில் இந்தப் பாதிப்பில் இருந்து விடுபடுவோம்….