உணவுமுறையின் உண்மைத்தன்மையை அறிவோமா?
நீங்கள் தினமும் சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? சமூக ஊடகங்களில் காணும் உணவு முறைகளைப் பின்பற்றுகிறீர்களா? இன்றைய காலத்தில் அனைவருக்கும் போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்கிறதா என்பதே முக்கிய கேள்வி. நீங்கள் எந்த உணவுமுறையைப் பின்பற்றினாலும் சரி. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு இன்றியமையாத அம்சமாக, ஊட்டச்சத்து முறையானது திகழ்கிறது. இன்றைய அவசர உலகில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பற்றிப் பல தவறான கருத்துகள் உள்ளன. இந்தக் கட்டுரையில், ஊட்டச்சத்து முறையில் உள்ள கட்டுக்கதைகளை நீக்கி, ஆதாரங்கள் அடிப்படையிலான உண்மைகள் வாசகர்களுக்கு விளக்கப்பட்டு உள்ளன. கட்டுக்கதைகளில் இருந்து உண்மைத்தன்மையைப் பிரித்துணர்ந்து, நாம் நமக்குத்தேவையான உணவுமுறையைக் கவனமாகப் பின்பற்றுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள இயலும்.
கட்டுக்கதை – கார்போஹைட்ரேட் உணவுகள், உடல் பருமனை ஏற்படுத்துகின்றன.
உண்மை
கார்போஹைட்ரேட் உடல் எடையை மட்டுமே கூட்டுகிறது என்பது தவறு. நம் உணவில் 50-60% கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும்.கார்போஹைட்ரேட்கள், நம் உடலுக்கு எளிதில் கிடைக்கவல்ல ஆற்றல் மூலமாக உள்ளது. உங்கள் உணவுமுறையில் இருந்து சிக்கலான கார்போஹைட்ரேட்களை முழுவதுமாக நீக்குவதற்குப் பதிலாக, முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகளில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கட்டுக்கதை : கொழுப்புகள் உடலுக்குத் தீமை விளைவிக்கின்றன.
உண்மை
கொழுப்புக்கள் உடலுக்கு மிக முக்கியமானவை. இவைச் செல்களைப் பராமரிக்கவும், வளர்ச்சிக்கும், வைட்டமின்கள் உறிஞ்சுதலுக்கும் உதவுகின்றன. மேலும் இதயம், மூளைப் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் தேவை. இறைச்சிகள், அதிகக் கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் உள்ளிட்டவைகளைத் தவிர்த்து, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புவைப் பகுதிப்பொருட்களாகக் கொண்ட ஆலிவ் எண்ணெய், கொட்டைகள் உள்ளிட்ட உணவுவகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
கட்டுக்கதை – உப்பு ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தும்
உண்மை
சோடியம் (உப்பு) உடலுக்கு அவசியமான கனிமம். இது ஒரு முக்கிய எலக்ட்ரோலைட் ஆகும். உப்பு உடலின் நீர்ச்சமநிலை, இதயம், மூளை, தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. அதிகப்படியான உப்பின் பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதன்காரணமாக, உணவுமுறையில், குறைந்த அளவிலான உப்பைப் பயன்படுத்தி வருவது நல்லது.
கட்டுக்கதை – ரெட் ஒயின், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
உண்மை
தினமும் ரெட் ஒயின் அருந்துவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும். ரெட் ஒயின் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது தவறான கருத்து. ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறையைப் பின்பற்றினாலே, இதயம் மட்டுமல்லாது, உடலின் எல்லா உறுப்புகளின் நலனையும் பேணிக்காக்க இயலும்.
கட்டுக்கதை – கொட்டை உணவுகள் உடல் எடையை அதிகரிக்கின்றன
உண்மை
கொட்டை வகைகளில் கொழுப்பும் கலோரிகளும் அதிகம். ஆனால் அவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன.தினசரி உணவுமுறையில், சில வகையான கொட்டை உணவுகளைச் சேர்த்து வருவது நல்லது.
கட்டுக்கதை – நொறுக்குத்தீனிகள், உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன
உண்மை
நொறுக்குத்தீனிகள், பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் என்ன வகையான நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள், என்ன அளவில் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அது நம் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். எண்ணெயில் பொறிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட வகையிலான சிற்றுண்டி வகைகளுக்குப் பதிலாக ஆப்பிள், வாழைப்பழங்கள், கேரட், தயிர் எனச் சத்தான சிற்றுண்டிகளாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், அது உடலுக்கு நன்மையே விளைவிக்கின்றன.
கட்டுக்கதை – இயற்கையானது என்று குறிப்பிடப்பட்டு உள்ள எடைக் குறைப்பு உணவு வகைகள் பாதுகாப்பானவை
உண்மை
இயற்கையானது என்று குறிப்பிடப்பட்டு உள்ள உணவு வகைகள் பாதுகாப்பானதாகவும் மற்றும் பயன் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. இயற்கையானது என்று குறிப்பிடப்பட்டு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்கு முன், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. உடல் எடையைக் குறைக்க, எவ்வித விரைவான தீர்வும் இல்லை என்பதை எந்தத் தருணத்திலும் மறந்துவிடக் கூடாது.
மேலும் வாசிக்க : ஐபோன் பயனர்க்கான சிறந்த ஃபிட்னெஸ் செயலி இதுவா!
கட்டுக்கதை – உணவு சப்ளிமெண்ட்ஸ், ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
உண்மை
ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், முதலில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட முயற்சிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். சப்ளிமெண்ட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுக்க வேண்டும்.
இந்த உணவுவகைகளை எடுத்துக்கொண்ட பிறகும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நீடிக்கும்பட்சத்திலேயே, நாம் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், உணவு சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவுமுறையில் உள்ள கட்டுக்கதைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதன் உண்மைத்தன்மையைக் கவனமாகக் கண்டறிந்து, அதைப் பின்பற்றி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…