நீரிழிவு, குடல் ஆரோக்கியம் தொடர்புடையதா?
நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிவீர்களா? மருத்துவத்துறையின் சமீபத்திய ஆராய்ச்சிகள் நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பைத் தெளிவாக்கி உள்ளன.
நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்து வருவது இன்றியமையாதது ஆகும். இரத்தத்தில் சர்க்கரை அளவில் முக்கியம் செலுத்துபவர்கள், சில நேரங்களில், செரிமான அமைப்பில் போதிய கவனம் செலுத்த தவறிவிடுகின்றனர். நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, குடல் ஆரோக்கியக்குறைவிற்கும் வழிவகுக்கிறது என்பதைப் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்பதில்லை.
குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
குடல் ஆரோக்கியம் என்பது உடலின் செரிமான மண்டலத்தில் நுண்ணுயிரிகளின் சமநிலையைக் குறிக்கிறது. இது உடல் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. குடல் பகுதியில் வாழும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள், சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்யவும், அதில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு போன்ற நாள்பட்ட மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது முக்கியம் ஆகும். உடலின் செரிமான மண்டலம், சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக ஜீரணம் அடைவது உறுதிசெய்யப்படுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை, நீரிழிவு எவ்வாறு பாதிக்கிறது?
பெரும்பாலான நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகள், செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றனர். உயர் ரத்த சர்க்கரை அளவானது, செரிமானத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிக்கிறது. இது கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளிட்ட நிலைமைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்தப் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள், வயிறு காலியாக அதிக நேரம் எடுக்கும். இதனால் வீக்கம், குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இதன்காரணமாக, நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கும் குடலுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது. இது மோசமான ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, மோசமான குடல் செயல்பாட்டிற்கும் வழிவகுக்கிறது.
நீரிழிவு நிர்வாகத்தில், குடல் பாக்டீரியாவின் பங்கு
மனிதனின் குடல் பகுதியானது, டிரில்லியன் கணக்கான பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் இருப்பிடமாக உள்ளது. உடல் சர்க்கரையைச் செயலாக்குவதில், இந்த நுண்ணுயிரிகள் முக்கியப்பங்கை வகிக்கின்றன. குடலில் இருக்கும் சில வகைப் பாக்டீரியா, இன்சுலின் உணர்திறனைப் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. குடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் சமநிலை, நீரிழிவு நோய் நிர்வாகத்தின் முக்கிய பகுதியாக இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க : குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது எப்படி?
நீரிழிவு நோயாளிகள், குடலைப் பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீரிழிவு நோய்ப்பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்க உதவும் வழிமுறைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடவும்
காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள் உள்ளிட்ட உணவு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த உணவு வகைகள், செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
உடலைப் போதிய நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
உடல் போதிய அளவிலான நீரேற்றத்துடன் இருப்பதன்மூலம், செரிமான நிகழ்வு எளிதாகிறது.
புரோபயாடிக்குகள் மற்றும் ப்ஃரீபயாடிக்குகள்
தயிர் அல்லது புளித்த சுவைக் கொண்ட புரோபயாடிக் உணவுகள், குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
மன அழுத்த பாதிப்பானது, குடல் ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரையின் அளவைச் சீர்குலைக்கிறது. மன அழுத்தத்தைச் சிறப்பாக நிர்வகிப்பது இன்றியமையாததாகும்.
நீரிழிவு நோய்ப்பாதிப்பின் நீண்டகால பராமரிப்பில் குடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு முக்கியம்?
நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில் குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது என்பது பல சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதுதொடர்பான ஆராய்ச்சிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடல் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம், செரிமானம் மேம்படுத்தப்படுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நிர்வாகத்தைத் திறம்பட மேற்கொள்ள மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசிப்பது அவசியம் ஆகும்.
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையைப் போலவே குடல் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். சரிவிகித ஊட்டச்சத்துகள் நிறைந்த சீரான உணவுமுறை, சரியான உடல் நீரேற்றம் உள்ளிட்டவற்றைத் திறம்பட பராமரிப்பதன் மூலம் குடல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கலாம்..
குடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து, நீரிழிவு நோய்ப்பாதிப்பிலிருந்து பூரணமாக விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…