Elderly man struggling to see smartphone, symbolizing diabetes-related vision loss.

வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழிவுப் பாதிப்பு

நீரிழிவு என்பது நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இந்தப் பாதிப்பிற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை இன்றியமையாததாக உள்ளது. வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுமாயின், அவர்களின் வயதுக்காரணி காரணமாக, அவர்கள் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வயதானவர்கள் சர்க்கரை அளவைச் சரியாக நிர்வகித்து, வழக்கமான கவனிப்பு முறைகளைப் பின்பற்றினால் நீரிழிவுப் பாதிப்பின் சிக்கல்களைக் குறைக்கலாம். இந்தக் கட்டுரையில், வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பராமரிப்புக்கான அத்தியாவசிய வாழ்க்கைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

அறிகுறிகள்

  • வயதானவர்களுக்கு நீரிழிவுப் பாதிப்பு இருப்பதை அறிய உதவும் பொதுவான அறிகுறிகள்
  • அதிகத் தாக உணர்வு
  • அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
  • அதீத உடல் சோர்வு
  • பார்வை மங்குதல்
  • திடீரென்று உடல் எடைக் குறைதல்
  • கை, கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வு இல்லாத நிலை
  • காயங்கள் மெதுவாகக் குணமடைதல்
  • தோல்பகுதியில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் உள்ளிட்டவை, அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

பொதுவான சிக்கல்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான சிக்கல்கள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

உயர் ரத்த அழுத்தம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. இதன்காரணமாக, அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள், ரத்த அழுத்த மாறுபாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்பட்சத்தில், அதை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்து மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

மனச்சோர்வு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் தங்களை மற்றவர்களுக்குப் பாரமாக நினைத்து மனச்சோர்வடைகிறார்கள். இது அவர்களின் மனச்சோர்வை, கணிசமான அளவிற்கு அதிகரித்துவிடுகிறது. அதீதச் சோகம், எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, போதிய உறக்கம் இல்லாத நிலை, உடல் எடை இழத்தல் போன்றவைகளாலும், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

கட்டுக்கடங்காமல் சிறுநீர் வெளியேறுதல்

நீரிழிவுப் பாதிப்பானது, பொதுவாக எல்லா வயதினருக்கும் சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது. சாதாரணமான நிலையில் இருப்பவர்களின் சிறுநீர்ப்பை நிரம்பும் நிலையில், நரம்புகள் அதனை மூளைக்குத் தெரிவித்து, சிறுநீர்க் கழிக்கத் தூண்டும். ஆனால், வயதானவர்களுக்கு, இந்த நிகழ்வானது நடைபெறுவதில்லை. அதுமட்டுமல்லாது, வயதானவர்கள் நீரிழிவுப்பாதிப்பிற்கு உள்ளாகும்பட்சத்தில், சிறுநீர்ப்பையில் தொற்றுகளும் ஏற்படுகின்றன. சிறுநீர்க் கட்டுக்கடங்காமல் வெளியேறுதல் என்பது அசாத்தியமான நிலை ஆகும். இதற்கு உடனடிச் சிகிச்சை மிகவும் அவசியமானதாக உள்ளது.

மேலும் வாசிக்க : நீரிழிவு, குடல் ஆரோக்கியம் தொடர்புடையதா?

டிமென்ஷியா எனும் அறிவாற்றல் குறைபாடு

வயதானவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவகப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உங்களால் எதுவும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை என்றால், அதை உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் முழுமையாகத் தெரிவிக்கவும். மனச்சோர்வு குறித்த பாதிப்பிற்கும் சிகிச்சைப் பெறுவது முக்கியம் ஆகும்.

காது கேட்கும் திறன் குறைதல்

வயது அதிகரிக்க அதிகரிக்க, காது கேட்கும் திறன் குறைவது இயல்பான நிகழ்வு தான் ஆகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு இது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கான அறிகுறிகள் தோன்றும் நிலையிலேயே, அதற்கென உள்ள சரியான மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.

Broken cigarettes on a wooden surface with 'STOP SMOKING' in Scrabble tiles, symbolizing a no-smoking message.

சுயப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான வழிமுறைகள்

புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்

புகைப்பழக்கத்தின் மூலம் கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது குறைகிறது. இதன் காரணமாகக் கால்களில் புண்கள், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அதில் இருந்து மீள்வது சவாலான நிகழ்வாகிறது.

  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
  • இதய நோய்கள்
  • பக்கவாதம்
  • கண் நோய்கள், சில சமயங்களில் குருட்டுத்தன்மையும் ஏற்படுத்துகிறது
  • நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது
  • சிறுநீரகப் பாதிப்பு
  • இளவயது மரணம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாகக் கைவிடுவது நல்லது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிகக் கொலட்ரால், நீரிழிவுப் பாதிப்புடன் ஒன்றிணைந்து ரத்த நாளங்களைத் துரிதமாகச் சேதப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், முதல் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நீரிழிவுப் பாதிப்புகள் உள்ளிட்டவற்றின் தீவிரத்தைக் குறைக்க இயலும்.

வழக்கமான உடற்பயிற்சி மற்றும் கண் பரிசோதனைகள்

வயதானவர்கள், வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், கண் பார்வையை அடிக்கடி பரிசோதனைச் செய்வதன் மூலம், நீரிழிவுப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய இயலும்.

பற்களின் பாதுகாப்பு அவசியம்

பற்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, நீரிழிவு நோய் நிர்வாகத்தின் முக்கிய படிநிலை ஆகும்.

தினமும் இரண்டு முறை ஃபுளுரைடு டூத்பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கவும். பல் பரிசோதனைகளைச் சீரிய இடைவெளிகளில் மேற்கொள்வதன் மூலம், வயதானவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பற்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, வயதானவர்கள் நீரிழிவு நோய்ப்பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.