ஸ்கிரீனிங் – டயக்னாஸ்டிக் மேமோகிராம் : வேறுபாடுகள்
மார்பகப் புற்றுநோயை அதன் துவக்க நிலையிலேயே மருத்துவர்கள் கண்டறிய சிறந்த சோதனை முறையாக, மேமோகிராபி விளங்கி வருகிறது. மார்பகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையின் மூலம் கிடைக்கும் படங்களைக் கொண்டு, புற்றுநோய் ஆக மாற்றம் அடைய உள்ள கட்டிகள் முதல் சிறு கட்டிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும்.
மேமோகிராம் சோதனையை, அதன் பயன்பாட்டைப் பொறுத்து ஸ்கிரீனிங் மேமோகிராம் மற்றும் டயக்னாஸ்டிக் மேமோகிராம் என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஸ்கிரீனிங் மேமோகிராம்
மார்பகப் புற்றுநோய் பாதிப்பைத் துவக்க நிலையிலேயே கண்டறிய உதவும் வழக்கமான எக்ஸ்ரே கதிரியக்கச் சோதனையே ஸ்கிரீனிங் மேமோகிராம் ஆகும்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாலோ மற்றும் மார்பகப் பகுதியில் எந்த ஒரு அசவுகரியுமும் இல்லை என்றாலோ, ஆண்டிற்கு ஒருமுறை ஸ்கிரீனிங் மேமோகிராம் செய்து கொள்வது நல்லது.
குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொண்டு இருக்கும் பட்சத்தில், 40 வயதிற்குள் உள்ள பெண்களும் மேமோகிராம் சோதனையை ஆண்டிற்கு ஒருமுறைச் செய்து கொள்வது நல்லது.
30 வயதிற்கு உள்ளான பெண்களுக்கு, மார்பின் ஒரு பகுதியில் வலி, முலைக்காம்பு அமைப்பில் இடமாற்றம், மார்பகப் பகுதியில் கட்டி, மார்பகத்தின் அளவு மற்றும் வடிவங்களில் மாற்றம் இருந்தால், அவர்கள் மேமோகிராம் சோதனையை மேற்கொள்ளாமல், அல்ட்ரா சவுண்ட் சோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இதில்தான் கதிரியக்கப் பாதிப்பு இல்லை.
டயக்னாஸ்டிக் மேமோகிராம்
நீங்கள் 30 வயதிற்கு மேம்பட்டவராக இருந்தால், மேமோகிராம் சோதனையின் முடிவுகளில் மார்பகக் கட்டி, முலைக்காம்பு அமைப்பில் இடமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையை மேற்கொண்டவர்கள், அதன்பின், டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், மேலும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் ஸ்கிரீனிங் மேமோகிராமிற்குப் பதிலாக, நேரடியாகவே, அவர்கள், டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையை மேற்கொண்டு விடலாம். ஏனெனில், அப்போதுதான் அவர்களுக்கு உடனடி சோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்று, சிகிச்சைத் தொடர்பான முடிவுக்கு வரமுடியும்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அவர்கள், நேரடியாக டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையை மேற்கொள்வதன் மூலம், அவர்களுக்கு எந்த இடத்தில் எத்தகைய பாதிப்புகள் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
மேலும் வாசிக்க : மேமோகிராம் – கட்டுக்கதைகளும் உண்மைகளும்…
வேறுபாடுகள்
ஸ்கிரீனிங் மேமோகிராம் மற்றும் டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனைகளின் வழிமுறைகள் முழுமையாக ஒத்து இருந்தாலும், சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
மேமோகிராம் சோதனையின் போது, மார்பகப் பகுதியின் மேல், கீழ்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்துவதற்கு முன்னால், அந்தப் பகுதிகளில் சிறிது அழுத்தம் ஏற்படும் வகையில் அமுக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் படங்களை வைத்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையில், இந்த நிகழ்வு 10 முதல் 15 நிமிட கால அளவிலேயே முடிவடைந்து விடுகிறது. டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையில், துல்லிய முடிவுகளைக் காணும் பொருட்டு, மேலும் கூடுதல் இடங்களில், மார்பகப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுவது உடன், தேவைப்படும் சில இடங்களில் உருப்பெருக்கம் செய்யப்பட்டுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
டயக்னாஸ்டிக் மேமோகிராமின் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், அதன் முடிவுகள் அன்றைய தினமே, நமது கைக்கு வந்துவிடும், அப்போதுதான், இந்த விவகாரத்தில், அடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.
ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையின் முடிவுகள் நமது கைகளுக்குக் கிடைக்கச் சில நாட்கள் கூட ஆகலாம். ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையை ஒப்பிடும் போது, டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனை முடிவுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற சோதனை முறையைத் தேர்ந்தெடுத்து, விரைவில், இந்த இக்கட்டிலிருந்து விடுதலைப் பெறுவீராக….