குழந்தைகளின் வயதுவாரியான உடற்பயிற்சிகள்…
முன்னொரு காலத்தில் வயதான பெரியவர்களை மட்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வந்த மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், நீரிழிவுப் பாதிப்பு, உடற்பருமன் போன்றப் பாதிப்புகள், இன்றைய அவசரகதியிலான நவநாகரீக உலகில், குழந்தைகளுக்கும் வரத் துவங்கி உள்ளன.
பெற்றோர்கள் தற்போது குழந்தைகளின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுகின்றனர். பெற்றோராக, உங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொள்கிறதா என்பதைக் அவசியம் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும், வெவ்வேறு வகையான உடல் அமைப்பு, உடல் திறன் உள்ளிட்டவைகள் உள்ளன. அவர்களுக்கு என்னவிதமான உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடல் உழைப்புகள் செய்ய விருப்பமோ, அதனைச் செய்ய விடுவது நல்லது. குழந்தைகள் தங்கள் உடல் அமைப்பு மற்றும் விருப்பத்திற்கேற்ப உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பர். இவற்றில் அவர்களை ஊக்குவிப்பதே பெற்றோரின் முக்கியப் பணியாகும்.குழந்தைகளுக்கு விருப்பமான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை, இங்கு விரிவாகக் காண்போம்.
குறுநடை நடக்கும் குழந்தைகள்
1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள், இந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர். இப்பிரிவுக் குழந்தைகளின் உடலமைப்பைப் பொறுத்து, அவர்களின் நுண் இயக்கவியல் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அவர்கள் நடக்க, குதிக்க, மேலே ஏற, ஏதாவது பிடித்துக் கொள்ள, பொருளை இழுக்க, தரையில் கிறுக்க உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, தங்களது சிறிய மற்றும் தசைகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பர்.
இந்தக் குழந்தைகள், உறங்கும் நேரத்தைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல், அவர்கள் ஓரிடத்தில் சும்மா இருந்து யாராலும் பார்க்க இயலாது. ஏதாவது ஒரு வேலையை, அவர்கள் செய்துகொண்டே இருப்பர் என்று அமெரிக்காவின் முன்னணி விளையாட்டு மற்றும் உடற்கல்வி அகாடமி தெரிவித்து உள்ளது.
இந்த வயதுக் குழந்தைகளை 30 நிமிடங்கள், ஒருவரின் கண்காணிப்பில் குழுவாக விளையாட விட்டுவிட்டு, பின் அடுத்த 30 நிமிடங்கள், அவர்களாகவே விளையாட அனுமதிக்க வேண்டும்.
குழந்தை ஒருவரின் கண்காணிப்பில் இருக்கும் போது, நடக்கவும், படி ஏறவும், ஓடவும், குதிக்கவும், பந்தைக் கேட்ச் பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். பின்னர் அது தனிமையில் இருக்கும்போது, அந்தப் பயிற்சிகளை மீண்டும் மேற்கொள்ளும். இவர்கள் குழுக்களாக இணைந்து விளையாடும் போது, ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பாங்கும், அவர்களின் மன உறுதியும் அதிகரிக்கின்றது.
மழலையர்ப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்
3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், இந்தப் பிரிவில் அடங்குவர். இந்த வயதுக் குழந்தைகள் பெரும்பாலும் சிறு குழுக்களாக இணைந்து விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் கொள்வர். இதன்மூலம், அவர்களது நுண் இயக்கவியல் திறன்கள் மேம்படும். ஓடுதல், குதித்தல், உதைத்து விளையாடுதல் உள்ளிட்ட செயல்களை விரும்பிச் செய்வர். நீச்சல், மூன்று சக்கர வண்டி ஓட்டுதல், நடனம் உள்ளிட்டவைகளைக் கற்றுக் கொடுத்தால் விரும்பி மேற்கொள்வர். இத்தகைய குழந்தைகளை, ஒரு மணி நேரம் ஒருவரின் கண்காணிப்பில் விளையாட அனுமதித்து விட்டு, பின்னர், அவர்களாகவே 1 மணி நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகள்
6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள், இந்தப் பிரிவில் அடங்குவர். இவர்கள் குறைந்தது 1 மணி நேரம் அதிதீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்வது கட்டாயமாகும். இவர்கள் 2 மணிநேரத்திற்கு மேலாக, ஒரே இடத்தில் செயலற்று இருப்பதை, ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கராத்தே, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், பந்தை எட்டி உதைத்து விளையாடுதல், நடனமாடுதல், வெளிப்புற விளையாட்டுகள் ஆகியவற்றில் இவர்களது கவனம் இருக்க வேண்டும். பள்ளிகளில் உடற்கல்வி அமர்வின்போது, உடலைத் தயார்படுத்தும் நீட்சிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள், வெளிப்புற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாது, தசைகளை வலிமையாக்க உதவுகிறது. இந்த நிகழ்வு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான அடித்தளமாக விளங்குகிறது.
மேலும் வாசிக்க : யதார்த்தமான உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்தல்
பதின்பருவத்தினர் அல்லது இளைஞர்கள்
உடல், உணர்வு மற்றும் அறிவுரீதியாக முதிர்ச்சி அடைந்து உள்ள இந்தப் பிரிவினர், தங்களது ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற வகையிலான செயல்பாடுகளையே, தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். கால்பந்து, ஹாக்கி, பேஸ்பால், கூடைப்பநது, தடகளம், அரைமணி நேரத்தில் ஜிம்மில் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள், யோகாப் பயிற்சி, குங்பூ அல்லது கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளைக் கற்றல், சல்சா, ஜூம்பா அல்லது பரதநாட்டியம் உள்ளிட்ட நடனங்களைக் கற்கின்றனர். இந்த வயதினர், தங்களது ஆர்வங்களை நன்கு புரிந்துகொள்கின்றனர். இந்த வயதில் அவர்களுக்குத் தேவையானது குடும்ப உறுப்பினர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவு மட்டுமே ஆகும்.
உங்கள் குழந்தையின் ஆளுமைத்திறன் மற்றும் உடற்திறனைப் பொறுத்து, அவர்களுக்கு ஆர்வமுள்ள செயல்பாடுகளில், பங்கேற்க, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் உடல்ரீதியாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பினாலும், அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்கு, பெற்றோர்களிடமிருந்து உறுதியான உதவி தேவைப்படுகின்றது.
உங்கள் குழந்தைக்கு, குறிப்பிட்ட விளையாட்டில் உள்ள திறனைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளித்து, அவர்கள் அந்த விளையாட்டு அல்லது உடற்பயிற்சி நடவடிக்கைகளில் வெற்றிப் பெறுவது மட்டுமல்லாமல், உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாகத் திகழ்வதனால், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.