Top view of a pale blue coloured table with sugar cubes in spoon,blood glucose meter, lancet and stethoscope kept on it.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு – கட்டாயம் படிங்க!

நீரிழிவு நோய் மருத்துவத்துறையில் Diabetes mellitus என்று அழைக்கப்படுகிறது. இது வளர்சிதை மாற்ற நோய்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையையே, நீரிழிவுப் பாதிப்பு என்று குறிப்பிடுகிறோம். இது தற்போது சர்வதேச அளவில் பெரும்பாலானோரைப் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

நீரிழிவுப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

நமது உடலில் போதிய அளவிலான இன்சுலின் சுரக்காத நிலை

இன்சுலின் போதுமானதாக இருந்தும், உடல் செல்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலையிலும் நீரிழிவு ஏற்படலாம்.

நீரிழிவுப் பாதிப்பு யாருக்கு வரும்?

BMI எண் 23க்கும் மேல் இருப்பவர்கள்

உடலில் அதிகளவில் கொழுப்பு கொண்டவர்கள்

அதிக ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள்

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்

குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது நீரிழிவுப் பாதிப்பு இருத்தல்

உள்ளிட்டோருக்கு, இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அறிகுறிகள்

  • அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
  • அதிகளவு தாகம் எடுத்தல்
  • பசி உணர்வு அதிகரிப்பு
  • உடல் அசதி அதிகரிப்பு
  • காயங்கள் மற்றும் புண்கள் குணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல்
  • தோல்களில் எரிச்சல் உணர்வு
  • கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போதல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிதல்

நீரிழிவுப் பாதிப்பைக் கண்டறிய, பெரும்பாலும் சிறுநீர்ப் பரிசோதனை மேற்கொள்வர். இதன்மூலம் உடலில் அதிகச் சர்க்கரை உள்ளதா என்பதை அறியலாம்.இந்தச் சோதனையில், திருப்தி அடையாதவர்கள், அடுத்ததாக, ரத்த சோதனையை மேற்கொள்வர். இதில் சர்க்கரையின் அளவில் மாறுபாட்டைக் கண்டறிய இயலவில்லை எனில், இந்தச் சோதனையை ஒரேநாளில் சில மணிநேர இடைவெளிகளில் அடுத்தடுத்து மேற்கொள்வர். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிவர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் சோதனைகள்

FPG சோதனை

Fasting Plasma Glucose என்பதன் சுருக்கமே, FPG ஆகும். ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு, 8 மணிநேரம் கழித்து, இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சோதனைப் பெரும்பாலும் இரவு உணவை முடித்து 8 மணிநேரம் கழித்து, அதாவது காலையில் எழுந்தவுடன் மேற்கொள்ளப்படுகிறது.இதன்மூலம், நீரிழிவுப் பாதிப்பு உள்ளதா அல்லது அதற்கு முந்தைய நிலையா என்பதைக் கண்டறிய முடியும்.

சோதனையின் முடிவில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு

100 mg/dlக்கு குறைவாக இருந்தால் – சாதாரண நிலை

100 mg/dl முதல் 125 mg/dl அளவில் இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை

126 mg/dlக்கும் அதிகமாக இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

PPG சோதனை

Postprandial Plasma Glucose என்பதன் சுருக்கமே PPG ஆகும். இந்தச் சோதனையானது, உணவு சாப்பிட்டு முடித்து 1 அல்லது 2 மணிநேரங்கள் கடந்தபிறகு எடுக்கப்படுகின்றது. இந்தச் சோதனை, சாப்பிட்ட உணவிலிருந்து கிடைத்த குளுக்கோஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்படுத்திய மாறுபாட்டைக் கணக்கிட உதவுகிறது.

சோதனையின் முடிவில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு

140 mg/dlக்கு குறைவாக இருந்தால் – சாதாரண நிலை

140 mg/dl முதல் 200 mg/dl அளவில் இருந்தால் – பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை நிலை

200 mg/dl அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

Close up view of a hand holding a blood sampling tube with HbA1c mentioned on it.

HBA1C சோதனை

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் எத்தனைச் சதவீதம் சர்க்கரை உள்ளது என்பதைக் கண்டறிய உதவும் சோதனையே,HBA1C சோதனை ஆகும். ஹீமோகுளோபின் என்பது, ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒருவகைப் புரதம் ஆகும். இது உடலின் பலபகுதிகளுக்குப் பிராண வாயுவான ஆக்சிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.

இந்தச் சோதனையின் முடிவில், A1Cயின் அளவு அதிகமாக இருப்பின், நீரிழிவுப் பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகம். நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை, முதலாம் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பைக் கண்டறிய, இந்தச் சோதனை உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் ஏற்படும்

கண் சார்ந்தப் பிரச்சினைகள்

சிறுநீரகம் சார்ந்தப் பிரச்சினைகள்

நரம்புகள் சார்ந்தப் பிரச்சினைகள்

மாரடைப்பு

பக்கவாதம்

புற தமனி நோய்கள்

உள்ளிட்ட பாதிப்புகளை வருவதற்கு முன்னரே, A1C சோதனையின் மூலம் கண்டறிய இயலும்.

நீரிழிவுப் பாதிப்பின் வகைகள்

முதலாம் வகை நீரிழிவு

இந்த வகைப் பாதிப்பானது, குழந்தைப்பருவம் அல்லது விடலைப் பருவத்தில் ஏற்படுகின்றது. சீரான இடைவெளிகளில், இன்சுலின் ஹார்மோனை எடுத்துக்கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க : முதல் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு – ஒரு ஒப்பீடு

இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு

இந்த நிலையே, தற்போது பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. இளம்பருவத்திலேயே, இந்தப் பாதிப்பானது ஏற்படுகின்றது. உடல் பருமன் பாதிப்பு கொண்டவர்களிடம், இவ்வகைப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்

அதிகத் தாகம் எடுத்தல்

வறண்ட உதடு மற்றும் வாய்

திடீரென்று உடல் எடைக் குறைதல்

அதிகப் பசி உணர்வு

கை, கால்கள் மரத்துப் போதல்

சிறுநீரகப் பாதையில் தொற்றுப் பாதிப்புகள்

கண்பார்வை மங்குதல்

தலைவலி மற்றும் சோர்வு

உள்ளிட்டவை, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

வேறுபாடுகள்

முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பு இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு
இந்த வகைப் பாதிப்பில், கணையத்தில் உள்ள செல்கள் பதிக்கப்படுவதால், இன்சுலின் சுரப்பு தடுக்கப்படுகிறது. போதிய அளவிலான இன்சுலின் சுரக்காமை அல்லது சுரந்த இன்சுலின் சரியான அளவு செயல்படாதநிலை
இதன் அறிகுறிகள் மிக விரைவாகத் தோன்றுகின்றன. இரண்டாம் வகை நீரிழிவின் அறிகுறிகள் மெதுவாக வளரும். எனவே, அவற்றைக் கவனிக்கத் தவறுவது எளிது.
இன்சுலின் மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். மருந்துகள், உடற்பயிற்சி, உணவுமுறை உள்ளிட்டவைகளின் மூலம் நிவாரணம் பெறலாம்.
இதற்கு இன்னும் முழுமையான சிகிச்சைமுறைக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆய்வுகள் தொடர்கின்றன. இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பைக் குணப்படுத்த இயலாது என்றபோதிலும், தீவிரத்தைத் தடுக்க முடியும்.

சிகிச்சை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதில், வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ளும் போது, வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகள், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரித்து, நீரிழிவுப் பாதிப்பு என்ற அரக்கனை விரட்டியடித்து, நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.