இரத்த பரிசோதனைச் செய்ய உள்ளீர்களா – இதைப்படிங்க!
மருத்துவ நிபுணர்கள் நோயாளியின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கும் நோய்த் தன்மையை ஆராய்வதற்கும் ரத்த பரிசோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்தச் சோதனை, ஆராய்ச்சி மைய சோதனைகளுள் முதன்மையானது ஆகும். மருத்துவர்கள் எந்தவொரு அறுவைச் சிகிச்சைக்கு முன்னரும், நோயாளிக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப் பரிந்துரைச் செய்கின்றனர். மருத்துவச் செயல்முறை மற்றும் அதன் முடிவுகளுக்கு ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் இடையூறு விளைவிக்கும் என்பதால், இதனைத் தடுக்க ரத்த பரிசோதனைகளை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடலில் ஏற்படும் நோய்ப்பாதிப்பு மற்றும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய, ரத்த பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.
இரத்த பரிசோதனை, ரத்த விசாரணை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையானது, உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் அதன் பண்புகள் உடலில் காணப்படுகிறதா என்பதைக் கண்டறியவும், அதுதொடர்பான தரவுகளைப் பெறவும் உதவுகிறது. நோய்ப்பாதிப்பை, நோயாளி எங்ஙனம் கையாள்கிறார் என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்காணிக்கவும், ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரத்த பரிசோதனைக்கு முன் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
செய்யக்கூடியவை
உண்ணாவிரத வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அறிவுறுத்தும்பட்சத்தில், அதற்கான வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். பரிசோதனைக்கு முன் எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, லிப்பிடுகள் உள்ளிட்டவைகளின் துல்லியமான அளவீடுகளைக் கண்டறிய உதவுகிறது.
நீரேற்றத்தின் பங்கு
இரத்த பரிசோதனைக்கு முன்னதாக, தண்ணீரை அருந்துவதன் மூலம், மருத்துவ நிபுணருக்கு, ரத்தத்தை மிக எளிதாகச் சேகரிக்க மட்டுமல்லாது, நரம்பின் தெரிவுநிலையை மேம்படுத்த உதவுகிறது. தண்ணீர் அருந்துவது நற்பலனை அளிக்கும் என்றபோதிலும், உடலில் அதிகப்படியான நீரேற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிகப்படியான நீரேற்ற நிகழ்வானது, ரத்தத்தின் சில கூறுகளை, நீர்த்துப் போகச் செய்யும் அபாயம் உள்ளது.
வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் உடல் உபாதைகளுக்காக, மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருப்பின், அந்த மருந்து விவரங்கள் குறித்து மருத்துவ நிபுணரிடம் கட்டாயம் தெரிவிக்கவும். இந்த மருந்துகள், சோதனை முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்று கருதி, அவர் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்த அறிவுறுத்தினால் மட்டுமே, நீங்கள் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தலாம். இல்லையென்றால், வழக்கமான மருந்துகளை, தொடர்ந்து உட்கொண்டு வரலாம்.
உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவும்
கர்ப்பம் தரித்தவர்கள், சமீபத்தில் அறுவைச் சிகிச்சைச் செய்து கொண்டவர்கள், ஒவ்வாமைப் பாதிப்பு உடையவர்கள், ரத்த பரிசோதனை முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான உடல்நலப் பாதிப்பைக் கொண்டவர்கள், தங்களின் உடல்நலப் பிரச்சினைகளை, மருத்துவ நிபுணரிடம் வெளிப்படையாகத் தெரிவித்து விடுவது சாலச் சிறந்தது.
இலகுவான உடைகளை அணியுங்கள்
எளிதாக, கை மடிப்பைச் சுருட்டிக் கொள்ளும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். இவ்வகை ஆடைகள், சுகாதாரத் தொழில்நுட்ப வல்லுநர், ரத்த சேகரிப்பை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.
மன அமைதியைப் பேணவும்
கவலை உணர்வானது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்த மாறுபாட்டில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக, ரத்த பரிசோதனை முடிவுகளில் மாற்றங்கள் உண்டாகும் சூழல் உள்ளது. உடல் மற்றும் மனம் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்துவர வேண்டும் மற்றும் ரத்த பரிசோதனையின் போது, மன அமைதியுடன் இருக்கச் சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
மேலும் வாசிக்க : வீட்டில் செய்யப்படும் ரத்த மாதிரி சேகரிப்பு ஏன் சிறந்தது?
செய்யக்கூடாதவை
உடலின் நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும்
உடலின் நீரேற்ற சமநிலையைக் காப்பது முக்கியம் என்றபோதிலும், ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, ஆல்கஹால் உள்ளிட்ட மதுவகைகளை அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை இழக்கச் செய்வதோடு, ரத்தத்தின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, சோதனை முடிவுகளின் துல்லியத்தன்மையைப் பாதிக்கும்.
அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்
இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்னதாக, அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதன் மூலம், உடலின் கொழுப்பு மற்றும் லிப்பிட் அளவீடுகளில் பெரிய அளவிலான மாறுபாடுகளை ஏற்படுத்தும். இரத்த பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடும் நாளிலிருந்தே, சீரான உணவுமுறையைப் பின்பற்றுவது நல்லது.
கடுமையான உடற்பயிற்சிகள் வேண்டாம்
கடுமையான உடற்பயிற்சிகள், ரத்தத்தின் சில கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ரத்த பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டதில் இருந்தே, கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்
புகைப்பிடிக்கும் பழக்கமானது, ரத்தத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட பகுதிப்பொருட்களின் அளவுகளில் பெரிய அளவிலான மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. இதன்காரணமாக, பரிசோதனை முடிவுகளில், துல்லியத்தன்மை இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு, குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன்னதாகவே, புகைப்பிடித்தலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
உடல்நலக்குறைவு இருப்பின் ரத்த பரிசோதனையைத் தவிர்க்கவும்
நீங்கள் ரத்த பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் சமயத்தில், உங்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக ரத்த பரிசோதனை மேற்கொள்வதைத் தள்ளிப் போடவும். நோய்த்தொற்றுக்கள் மற்றும் உடல்நலக்குறைவானது, ரத்த பரிசோதனையில் மாற்றங்களை ஏற்படுத்தி, தவறான முடிவுகளுக்கு வழிவகுத்துவிடும்.
உண்ணாவிரத அறிவுறுத்தல்களைப் புறந்தள்ளாதீர்கள்
இரத்த பரிசோதனைக்கு முன்னதாக, உங்கள் சுகாதாரத் தொழில்நுட்ப வல்லுநர், உங்களை உண்ணாவிரதம் இருக்க அறிவுறுத்தினால், அதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். உண்ணாவிரதச் சமயத்தில் ஏதாவது சாப்பிட்டாலோ அல்லது அருந்தினாலோ, அது சோதனை முடிவுகளில் தவறான அளவீடுகளுக்கு வழிவகுத்துவிடும். மீண்டும் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவீர்கள்.
இரத்த பரிசோதனைச் செய்யத் திட்டமிட்டு உள்ளவர்கள், மேலே குறிப்பிட்டு உள்ள செய்யக்கூடிய நிகழ்வுகள் மற்றும் செய்யக் கூடாதவைகளைக் கவனமாகக் குறிப்பெடுத்து அதன்படி செயல்பட்டு, உடல்நலப் பாதிப்புகளை விரைந்து கண்டறிந்து, நல்வாழ்க்கை வாழ்வீராக…