இதயச் செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் முறைகள்
சர்வதேச அளவில், மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் முக்கியமான நோய்ப்பாதிப்பாக இதயச் செயலிழப்பு உருவெடுத்து உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால், நாட்டின் பொது சுகாதாரத்திற்குச் சவால் விடும் வகையில் உள்ளது. மோசமான உணவுமுறைகள், உடல் உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம் போன்ற காரணிகளால், நகர்ப்புறங்களில் 65 வயதுக்குட்பட்டோரிடையே இப்பாதிப்புகள் பொதுவாகிவிட்டன.
இதயச் செயலிழப்புப் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், இந்தப் பாதிப்புகளைத் திறம்பட நிர்வகிக்கும் வழிமுறைகளாக மாறி உள்ளன.
இதயம் ரத்தத்தைச் சுத்திகரித்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்ப முடியாத நிலையே இதயச் செயலிழப்பு ஆகும்.இதனால், உடல் திசுக்களுக்குப் போதுமான பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத நிலை உருவாகிறது. இதன்காரணமாக மூச்சுத்திணறல், சோர்வு, வயிறுவீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தப் பாதிப்பை, தாமதமாகக் கண்டறிவதன் மூலம், அந்த நபரின் வாழ்க்கைத்தரம் கடுமையாகப் பாதிப்படைகின்றது. இந்தப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சரியான மருத்துவச் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது. இதயச் செயலிழப்பு பாதிப்புடன் போராடும் நபர்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.
இதயச் செயலிழப்பைக் கண்டறிதல்
இதயச் செயலிழப்பைக் கண்டறியும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல்
மூச்சுத்திணறல், சோர்வு, கால்கள் மற்றும் வயிற்றில் வீக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்டவைகள் இதயச் செயலிழப்பின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளை, முன்கூட்டியே கண்டறிவது அவசியம் ஆகும். உடலின் கொழுப்பு அளவு மற்றும் உயர் ரத்த அழுத்த அளவைத் தவறாமல் கண்காணிக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு உள்ளிட்டவை, இதயச் செயலிழப்புக்கான முக்கியக் காரணிகளாக உள்ளன. இந்த நிலைமைகளை நிர்வகிப்பதன் மூலம், இதயச் செயலிழப்பை, அதன் ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும்.
குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு
உங்கள் குடும்ப மருத்துவ வரலாற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம், உங்களுக்கான இதயச் செயலிழப்பு ஆபத்தை மதிப்பிடலாம்.உங்களுக்கு இதய நோய்ப்பாதிப்பிற்கான ஆபத்து இருப்பின், மருத்துவப் பரிசோதனைகளுக்கு, சுகாதார நிபுணரை நாடுவது நல்லது.
நோயைக் கண்டறியும் சோதனைகள்
நீங்கள் இதய நோய்ப்பாதிப்பிற்கான அறிகுறிகளை உணரும்பட்சத்தில், இதய ஆரோக்கியத்தை மதிப்பிடும் வகையிலான ரத்த பரிசோதனைகள், எலக்ட்ரோகார்டியோகிராம் (ECG), எலக்ட்ரோகாடியோகிராபி, MAP சோதனைகள் உள்ளிட்டவைகளை, நிபுணரின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும்.
இதயச் செயலிழப்பு பாதிப்பை, சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைக் காட்டிலும், பாதிப்பைத் தடுப்பது எளிமையான வழிமுறை ஆகும். செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம், இதயச் செயலிழப்புப் பாதிப்பை, எளிதாகத் தடுத்துக் காத்திட முடியும்.
தடுப்பு நடவடிக்கைகள்
இதய நலனுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுமுறை
பழ வகைகள், காய்கறிகள், புரதங்கள் செறிந்த பருப்பு வகைகள், முழுத் தானியங்கள் உள்ளிட்டவை, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இத்தகைய உணவு வகைகளை உள்ளடக்கிய உணவுமுறையினை மேற்கொள்ள வேண்டும்.
அதிக உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட உணவுகள் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயலிழப்பு ஆபத்தை அதிகரிக்கின்றன.உப்பு , சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகளை அடையாளம் கண்டு, அதைத் தவிர்க்கவும். அதேபோன்று பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி நடைமுறைகள்
உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கமானது, உடல் எடையைப் பராமரிப்பது மட்டுமல்லாது, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பேருதவி புரிகிறது. வாரத்திற்குக் குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான ஏரோபிக் வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். உடல்பருமன், இதயச் செயலிழப்பு பாதிப்பு ஏற்படுவதற்கான முதன்மையான காரணியாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளைச் சரிவர மேற்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதுடன், இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்க முடியும்.
மன அழுத்தத்தை நிர்வகித்தல்
யோகா, தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் உள்ளிட்டவை, மன அழுத்தத்தை நிர்வகிக்கவல்லச் சிறந்த நுட்பங்களாக விளங்குகின்றன. நாள்பட்ட மன அழுத்த பாதிப்பானது, இதயச் செயலிழப்பு பாதிப்பின் தீவிரத்தை உயர்த்தும் அபாயம் இருப்பதால், மேற்கூறிய பயிற்சிகளைக் கடைப்பிடிப்பது நலம்பயக்கும்.
மன அழுத்த மேலாண்மை: மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள், ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் இதயச் செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்போம்
மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடுகள், இதய நோய் உள்ளிட்ட உடலுக்கு ஊறு விளைவிக்கும் நோய்களை வரவழைக்கும் காரணிகளில் முதன்மையானதாக விளங்குகிறது. இந்தப் பழக்கங்கள் இருப்பின், உடனே அதை நிறுத்துவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்வைத் தனதாக்கிக் கொள்ளலாம்.
மேலும் வாசிக்க : மனநல திட்டங்களில் சிகிச்சைகளின் ஒருங்கிணைப்பு
மருத்துவப் பரிசோதனைகள்
உடலின் ஆரோக்கியத்தைக் காப்பது சுகாதார நிபுணரின் கடமை என்பதால், அவர்ப் பரிந்துரைச் செய்யும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளைப் புறந்தள்ளாமல், உடனுக்குடன் மேற்கொள்வது நல்லது. இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளின் மூலம், உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவல்ல ஆபத்துக் காரணிகளை முன்கூட்டியே அறிய இயலும். இதன்மூலம், இதயச் செயலிழப்புப் பாதிப்பை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதயச் செயலிழப்பு பாதிப்பின் அறிகுறிகளைக் கண்காணித்தல், உரிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம், இதயச் செயலிழப்பு பாதிப்பின் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இதயச் செயலிழப்புப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமல்லாது, இதய நலனைப் பராமரிக்கவல்லது ஆகும். இந்த வழிமுறைகளை, கவனமாகப் பின்பற்றி இதய ஆரோக்கியத்தைக் காப்போமாக….