உங்களைப் பலவீனமாக்கும் உணவு – இவைகள் தானா?
உங்களது உடல் அடிக்கடி பலவீனமாவது போல் உணர்ந்தால், உடல் சில உணவு வகைகளை ஏற்றுக் கொள்வது இல்லை என்று பொருள். சில் உணவு வகைகளை, நம் உடல் ஏற்றுக் கொள்ளாததனால், சகிப்புத்தன்மையற்ற நிலை உருவாகிறது. இத்தகைய உணவு வகைகளை அடையாளம் கண்டு, அவைகளைத் தவிர்க்க வேண்டும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, அந்த உணவு வகைகளை மீண்டும் சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்பட்டால், அவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.இந்த உணவு வகைகள், சகிப்புத்தன்மை அற்ற உணவு வகைகள் என்று குறிப்பிடுகின்றோம். இந்தச் செயல்முறைக்கு, நீக்க உணவுமுறை என்று பெயர்.
நீக்க உணவுமுறை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது
முதல் கட்டமாக, உணவுமுறைகளில் இருந்து சில உணவுவகைகளைப் படிப்படியாக நீக்க வேண்டும். இந்தச் செயல்முறை 2 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கும். துல்லியமான முடிவுகளுக்கு, இதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
உணவுமுறையில், நீக்கப்பட்ட உணவு வகைகளுக்குப் பதிலாக, முக்கிய ஊட்டச்சத்துகளைப் பெறும் வகையிலான, பொருத்தமான மாற்று உணவு வகைகளுடன் பட்டியல் தயாரிக்கவும்.
நீக்கப்பட்ட உணவு வகைகளின் நுகர்வை, தற்காலிகமாகத் தவிர்க்கவும்.
இந்த உணவுமுறையைப் பின்பற்றும் போது, பாதிப்பின் அறிகுறி மாற்றங்களைக் கண்காணிக்கவும்.
இரண்டாம் கட்டத்தில், நீக்கப்பட்ட உணவு வகைகளை, சிறிதுசிறிதாகச் சேர்க்கவும். உடலில் நிகழும் எதிர் விளைவுகளைக் குறித்துக் கொள்ளவும்.
எதிர்விளைவுகளின் வீரியம் உள்ளிட்டவைகளைப் பதிவு செய்து கொள்ளவும்.
பாதகமான அறிகுறிகள் எதுவும் தோன்றவில்லை என்றால், அதற்கடுத்த உணவு வகைகளை நீக்கி, சோதனையைத் திரும்ப மேற்கொள்ள வேண்டும்.
உணவு நீக்கச் சோதனையைத் துவக்குவது எப்படி?
உடலில் ஏற்படும் அறிகுறிகள், வீரியம், பாதிப்பு பற்றி மருத்துவரிடம் ஆலோசித்து, தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை அறிந்து கொள்ளவும்..
தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை அடையாளம் காண வேண்டும்.
நீக்கப்பட்ட உணவு வகைகளுக்கு மாற்றாக, அதே ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு வகைகளை உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சிறிதுகால இடைவெளியில், நீக்கப்பட்ட உணவு வகைகளைச் சேர்த்து, உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.
நீக்க உணவுமுறைகளின் வகைகள்
பால் பொருட்கள், சோயா பீன்ஸ், முட்டைகள், கொட்டைகள், ஷெல் மீன் உள்ளிட்ட ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளை அடையாளம் கண்டு அதை நீக்க வேண்டும்.
கோதுமை, பால் மற்றும் பால் சார்ந்தப் பொருட்களை 3 வாரங்களுக்கு வழக்கமான உணவுமுறையில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
எரிச்சலுடனான குடல் நோய்க்குக் காரணமாக அமையும் உணவுகளை உணவுமுறையில் இருந்து நீக்க வேண்டும்.
இவற்றில் அதிகக் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் அடங்கும்.
உணவுமுறையில் இருந்து சில உணவு வகைகளை நீக்கியபிறகு, தொடர்ந்து 5 நாள்களுக்குத் தண்ணீர் அருந்த வேண்டும். பின்,சிறிது சிறிதாக, நீக்கப்பட்ட உணவு வகைகளைச் சேர்க்கத் துவங்க வேண்டும். இந்தச் சோதனை, உடலுக்கு மிக ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இதைத் தொடங்கும் முன்பு, மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டுமே சாப்பிடும் முறை இது ஆகும். இது குறுகிய கால அளவிற்கு மட்டுமே, மிகுந்த கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
நீக்க உணவுமுறையானது, உணவு சகிப்புத்தன்மையின்மை அல்லது ஒவ்வாமை நிலையை அடையாளம காண உதவுவதோடு மட்டுமல்லாது, சில உடல்நலக் குறைபாடுகளையும் நிர்வகிக்க உதவுகிறது.
எரிச்சலுடன் கூடிய குடல் நோய்
சோரியாசிஸ், முகப்பரு உள்ளிட்ட தோல் பாதிப்புகள்
கற்றல் குறைபாடுகள்
ஒற்றைத் தலைவலி
நீக்க உணவுமுறையானது, பின்வரும் பாதிப்புகளையும் இனங்கண்டறிய உதவுவதாகச் சான்றுகள் உள்ளன
சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் ஏற்படும் பிரச்சினைகள்
உடற்சோர்வு
மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலிகள்
ஆஸ்துமா
நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் நோய்கள்
பார்கின்சன் மற்றும் டிமென்சியா பாதிப்புகள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
மன இறுக்கம் உள்ளிட்ட மனநலம் சார்ந்த குறைபாடுகள்
உறக்கமின்மை
உடற்பருமன்
உள்ளிட்ட பாதிப்புகளை, நீக்க உணவுமுறையானது சரியாக நிர்வகிப்பது மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
நீக்க உணவுமுறையில் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியல்
புரதச்சத்து நிறைந்த அசைவ உணவுகளான கோழி, மீன்
பருப்பு வகைகள், டோஃபு உள்ளிட்டவைகள்
கீரை, காலிபிளவர், முட்டைக்கோஸ், புரோக்கோலி உள்ளிட்ட மாவுச்சத்து இல்லாத காய்கறி வகைகள்
குறைந்த மாவுச்சத்து கொண்ட காய்கறிகள்
வெள்ளை அரிசி மற்றும் கோதுமை
வைட்டமின் சி சத்து கொண்ட சிட்ரஸ் பழங்களைத் தவிர்த்த மற்ற பழ வகைகள்
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்
நீக்க உணவுமுறையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
நீக்க உணவுமுறையின் போது, கீழ்க்கண்ட உணவு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள், முட்டை, பட்டாணி, ஷெல்மீன் – இவை ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்த கூடியவை
கோதுமை, கோதுமையில் இருந்து செய்யப்படும் பொருட்கள், பார்லி
சோயா பீன்ஸ், சோயா சாஸ், சோயா பகுதிப்பொருட்களாக உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
தக்காளி, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் அடிப்படையிலான தயாரிப்புகள்
பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகள்
செயற்கையான நிறமூட்டிகள், பதப்படுத்திகள்
காஃபி, டீ, மதுபான வகைகள்
பழைய பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, நொதித்தல் உணவு வகைகள்
சோயா, கடுகு சாஸ் உள்ளிட்ட அனைத்துச் சாஸ் வகைகள்
யார் நீக்க உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும்?
பெரும்பாலான மக்கள் உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் தெரியும்வரை அதன் தீவிரத்தை அறியமாட்டார்கள்.
அடிக்கடி நிகழும் தலைவலி மற்றும் தோல் பாதிப்பிற்கு, மரபியல் முக்கியக் காரணியாக உள்ளது. சில உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க உணவுமுறையால் கண்டறியலாம்.
வளர்சிதை மாற்ற குறைபாடு
நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் நோய்கள்
அழற்சியுடன் கூடிய உடல் வலிகள்
சோரியாசிஸ் போன்ற தோல் பாதிப்புகள்
நீக்க உணவுமுறையின் பயன்கள்
நீக்க உணவுமுறையின் மூலம், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்த கூடிய உணவு வகைகளைக் கண்டறிய முடியும். இதன்மூலம், பாதிப்பின் அறிகுறிகள் குறித்த அறிவை மேம்படுத்தவும், உடல்நல ஆரோக்கியத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சர்வதேச அளவில் 10 பேரில் ஒருவருக்கு, குடல் பகுதியில் ஏற்படும் குறைபாடான எரிச்சலுடன் கூடிய குடல் நோய்ப்பாதிப்பு காணப்படுகின்றது. நீக்க உணவுமுறை மேற்கொண்ட 150 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தப் பாதிப்பு 10 சதவீதம் குறைந்து உள்ளது தெரியவந்துள்ளது.
சோரியாசிஸ், டெர்மாடைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை நிர்வகிக்க, நீக்க உணவுமுறை உதவுகிறது. பால், முட்டை, தக்காளி உள்ளிட்ட உணவு வகைகளை, தவிர்ப்பதன் மூலம், எக்சிமா தோல் பாதிப்பில் நிவாரணம் கிடைக்கிறது.
நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளினாலேயே, சிலருக்குத் தலைவலி உணர்வு ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட 9 பேருக்கு, 6 வாரக்கால அளவிலான நீக்க உணவுமுறை, இந்தப் பாதிப்பை 6 நபர்களாகக் குறைத்தது.
மேலும் வாசிக்க : மீல் பிளானர் என்றால் என்ன – முக்கியத்துவம் அறிவோமா?
பக்கவிளைவுகள்
நீக்க உணவுமுறையை கவனமாக பின்பற்றாவிட்டால், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படலாம்.
உணவுமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்ற நிகழ்வுகளால், சிலருக்கு உடல் எடை அதிகரிப்பதற்கோ அல்லது குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உணவுமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதால், சிலருக்கு அதிகப் பசி உணர்வு ஏற்படலாம். மாற்றியமைக்கப்பட்ட உணவுகளை, உடல் ஏற்றுக்கொள்வதற்கு, சில அசவுகரியங்கள் ஏற்படலாம்.
உணவுமுறையில் பெரும்பாலான உணவு வகைகள் நீக்கப்படுவதால், இருக்கும் சில உணவு வகைகளைக் கொண்டு, ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்திச் செய்வது என்பது சவாலான நிகழ்வு ஆகும்.
தெளிவான மற்றும் சரியான உணவுமுறை இதுதான் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான விசயம் ஆகும். இது தேவையில்லாத உணவுப்பழக்கவழக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.
நீக்க உணவுமுறையில், பெரும்பாலான உணவு வகைகள் பரிசோதனை முயற்சியின் காரணமாக நீக்கப்படுவதால், இது குழந்தைகளிடையே, வளர்ச்சிக்குன்றலை ஏற்படுத்துகிறது.
நம் உடலைப் பலவீனமாக்கும் உணவுவகை எது என்பதை, நீக்க உணவுமுறையின் வாயிலாகக் கண்டறிந்து, அந்த உணவு வகைகளை அகற்றி, இடர்களிலிருந்து விடுபட்டு, வளமான வாழ்க்கை வாழ்வீராக….