A balanced diet, stethoscope, and physical fitness symbolize a healthy lifestyle.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை எப்படிச் சாத்தியம்

வாழ்க்கைமுறை என்பது, நாம் வாழும் தினசரி முறையைக் குறிக்கிறது. இது ஒரு நபரின் உடல், மனம், உணர்ச்சி, நல்வாழ்வு உள்ளிட்டவைகளுடன் நேரடி தொடர்புடையது ஆகும். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, சரியான உடல் எடைப் பராமரிப்பு போன்ற நல்ல பழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அடையலாம்.ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்தக் கட்டுரை. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளும் இங்கு விரிவாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைக்கான காரணிகள்

முறையற்ற உணவுப்பழக்கம், புகையிலை, மது, போதைப்பொருள் பயன்பாடு, அதிகச் சர்க்கரை மற்றும் துரித உணவு உட்கொள்ளல் போன்றவை உடல்நலத்தைப் பாதிக்கின்றன.இந்தப் பழக்கங்களுக்கு நீங்கள் ஆட்கொள்ள நேரும்பட்சத்தில், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்ப்பாதிப்புகளுக்கு வழிவகுக்கின்றன.

உடல்நலனில், வாழ்க்கைமுறை மாற்றத்தின் முக்கியத்துவம்

ஒழுங்கற்ற வாழ்க்கைமுறையின் விளைவாக, உடல்நலனில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட குறைபாடுகள், வாழ்க்கைமுறைக் குறைபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குறைபாடுகளின் மூலம், முன்கூட்டிய இறப்புகளின் என்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக அமைந்து உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில், சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக, உடல்நலன் சார்ந்த விசயங்களிலும் நாம் நிர்ணயித்த இலக்கை அடைய இயலும்.

வாழ்க்கைமுறைத் தேர்வுகளை மேம்படுத்துங்கள்

வாழ்க்கைமுறை என்பது வழக்கமான உணவுமுறை, உடற்பயிற்சி பழக்கங்களைக் கொண்டது மட்டுமின்றி, நடத்தைகள், தேர்வுகள், பழக்கவழக்கங்கள், முடிவுகள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியது ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான நுழைவுவாயிலாக, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து முறையானது விளங்கி வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடைய, சிறிய அளவிலான நல்ல பழக்கங்களை மேம்படுத்துவதிலும், சரியான தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல்

துரித உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்தல்

போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுதல்

மன அமைதிக்குத் தியான முறைகளைப் பின்பற்றவும்

லிப்டுக்குப் பதிலாக, மாடிப்படிகளைப் பயன்படுத்தவும்

இயற்கையான, புத்தம்புதிய உணவு வகைகளையே சாப்பிடுதல்

உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனித உடலின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், கொழுப்புகள் உள்ளிட்டவை இன்றியமையாததாக உள்ளன. நாம் சாப்பிடும் உணவுமுறையானது, நம் உடலின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்யுமா என்று நாமே கேள்வி கேட்டுக் கொள்வது நல்லது. சீரான, ஆரோக்கியமான, மேம்பட்ட உணவுமுறையானது, நமது உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்து, மனநிலையையும் மேம்படுத்துகிறது.

வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஊட்டச்சத்து

நீங்கள் சரியான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுமுறையைப் பின்பற்றுபவராக இருந்தால், எப்போதும் சுறுசுறுப்புடனேயே இருப்பீர்கள். கர்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், புரதங்கள் கொண்ட உணவுமுறைக்கு அதிகக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நுண்ணூட்டச்சத்துகள் அதிகம் உட்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு போன்ற உடலின் முக்கிய செயல்பாடுகளுக்குப் பேருதவி புரிகிறது.

A happy woman wakes up in her bedroom in the morning, stretching her hands to start the day.

உறக்க ஆரோக்கியம் தேவையா?

உடல் செயல்பாடுகளால் சோர்வுற்ற தசைகள், மீண்டும் புத்துணர்வு பெற, உறக்கம் என்பது அவசியமாகிறது. அதிகபட்ச ஆரோக்கியமான நன்மைகளைப் பெற, எட்டு மணிநேர உறக்கம் அவசியமானது ஆகும். எப்போது சாப்பிட வேண்டும், எப்போது உறங்க வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சர்காடியன் ரிதம் என அழைக்கப்படும் உடலியக்கக் கடிகாரம் சிறப்பாகச் செயல்பட, போதிய அளவிலான உறக்கம் அவசியமாகின்றது.

சூரிய உதயம், மற்றும் அஸ்தமனம், வெப்பநிலை, சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்டவைகளில் இருந்து உடலியக்கக் கடிகாரமானது, தனக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. உறக்கமின்மை மூளையின் செயல்திறனையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. உறக்கமின்மை நிகழ்விற்கும், உடல் பருமன் குறைபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. போதிய அளவிலான உறக்கமானது, ஞாபகச் சக்தியை மேம்படுத்துவதோடு, நாள்முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உறங்கச் சென்று, காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களிலும் இதே நடைமுறையைப் பின்பற்றவும்.

கேட்ஜெட்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும். அதில் இருந்து வெளியாகும் நீலநிற ஒளியானது, உறக்க நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் வாசிக்க : உடல்நலப் பரிசோதனைக்குத் தயாராவது இவ்வளவு சுலபமா?

அமைதியான சூழல்

படுக்கையறையை, குளிர்ந்த, இதமான அமைதியான உறக்கப் புகலிடமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

மனநல ஆரோக்கியத்தில் கவனம்

உடல் ஆரோக்கியம் போல் மனநலமும் முக்கியம். மனநலம் குன்றினால், உடல் வலிமை இருந்தும் ஒருவர் ஆரோக்கியமற்றவராகிறார்.இது உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எதிரொலிக்கின்றன.

உடல் மற்றும் மனம் இணைந்தால் மட்டுமே, உகந்த அளவிலான உடல் ஆரோக்கியத்தையும், உடல்தகுதியையும் எட்ட இயலும்.

உடற்பயிற்சி நிகழ்விற்கு, தசைகளுக்குத் தளர்வு தேவைப்படுவது போல, மனதிற்கு மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமாகிறது. ஒவ்வொருவரும் தங்களது ரசனைக்கு ஏற்றவாறு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். யோகாப் பயிற்சி, தியானம், சிறந்த உறக்கம், மெல்லிசையைக் கேட்டல் உள்ளிட்டவை, மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகும்.

சிந்தனைத் திறனை மேம்படுத்தும் சரிவிகித உணவுமுறை

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய வால்நட், இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சை, கீரை வகைகள், போலிக் அமிலம் கொண்ட அவகேடோ, பீன்ஸ், துத்தநாகம் கொண்ட காளான், முந்திரி உள்ளிட்ட உணவு வகைகளை உள்ளடக்கிய சரிவிகித உணவுமுறையானது, மூளையின் செய்லதிறனை மேம்படுத்தி, சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அமைத்து, நல்வாழ்க்கை வாழ்வோமாக..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.