ஹைபர்டென்சன் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகள்
ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் சர்வதேச அளவில் அதிகம் பேரைப் பாதித்து உள்ள தொற்றுநோய்ப் பாதிப்பாக உள்ளது. இந்தியாவில், இந்தப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது மக்களின் வாழ்க்கைமுறை நோய்களில் ஒன்றாக மாறிவருகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பைச் சரிவர நிர்வகிக்காதபட்சத்தில், மாரடைப்பு போன்ற இதய நோய்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, கடுமையான உறுப்பு சேதத்திற்கும் வழிவகுக்கிறது.
இதில் மிகச்சிறந்த நற்செய்தி யாதெனில், ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பானது (அதன் நிலைத் திடீரென்று உயர்ந்த நிலைக்குச் செல்லாமல் இருக்கும்பட்சத்தில்) கடுமையான சேதத்தை உடனடியாக விளைவித்து விடுவதில்லை. அதற்குச் சில ஆண்டுகள் கால அளவை எடுத்துக் கொள்கிறது. அதற்குள் நாம் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தப் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பின்வரும் நடவடிக்கைகளின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தின் தீவிரத்தைக் குறைக்கலாம்:
- அடிப்படைக் காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணுதல்
- இதய நோய்ப்பாதிப்பிற்கான பிற ஆபத்துக் காரணிகளைத் தேடுதல்
- உடலுக்கு ஏற்கெனவே சேதம் ஏற்பட்டுள்ளதா என மதிப்பிடுதல்
உயர் இரத்த அழுத்த பாதிப்பைக் கண்டறிவதற்கான முக்கியமான சோதனைகள்
உயர் இரத்த அழுத்த பாதிப்பு கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் சில சோதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
இரத்த அழுத்த அளவீடு
உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் கண்டறிய உதவும் ரத்த அழுத்த அளவீட்டுச் சோதனையானது, டயஸ்டாலிக் அழுத்தம் (இதயம், துடிப்புகளுக்கு இடையில் ஓய்வெடுக்கும் போது) மற்றும் சிஸ்டாலிக் அழுத்தம் (இதயம் துடிக்கும்போது) உள்ளிட்டவற்றை மதிப்பிடுகிறது. இதன்மூலம், உயர் இரத்த அழுத்த பாதிப்பானது கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சையைத் துல்லியமாக மேற்கொள்ள உதவுகிறது.
உடல் பரிசோதனை
உடல் பருமன் அல்லது நீரிழிவு உள்ளிட்ட உயர் ரத்த அழுத்தத்தின் ஆபத்துக் காரணிகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காண உடல் பரிசோதனை உதவுகிறது.
இரத்த பரிசோதனைகள்
உடலின் கொழுப்பின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் சிறுநீரகச் செயல்பாடு உள்ளிட்டவைகளைக் கண்டறிய, ரத்த பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.
சிறுநீர்ப் பரிசோதனைகள்
சிறுநீரகச் செயல்பாட்டை மதிப்பிட சிறுநீர்ப் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. உயர் ரத்த அழுத்த அறிகுறிகளுடன் தொடர்புடைய சிறுநீர்ப் பாதிப்பைக் கண்டறிய உதவுகின்றன. சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கக்கூடிய புரோட்டினூரியாவின் அளவுகளை, சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் மதிப்பிட இயலும். இதுமட்டுமல்லாது, ஹைபர்டென்சன் பாதிப்பு அறிகுறிகளுடன் தொடர்புடைய ரத்த அணுக்கள், சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகளின் அசாதாரண அளவையும் மதிப்பிட இந்தச் சோதனைகள் உதவுகின்றன.
எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG)
இதயத்தின் மின் செயல்பாட்டைக் கண்டறிய எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சோதனை உதவுகிறது. இதயத்தின் அசாதாரண துடிப்புகளை அடையாளம் காணவும், அதன் செயல்பாட்டை மதிப்பிடவும் இந்தச் சோதனை உதவுகிறது. ECG சோதனை முடிவுகள், இதய ஆரோக்கியத்தை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், இடது வெண்ட்ரிகுலார் ஹைபர்டிராபி அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட ஹைபர்டென்சன் பாதிப்பு தொடர்பான சிக்கல்களை மதிப்பிட உதவுகின்றன.
மேலும் வாசிக்க : உயர் இரத்த அழுத்தம் – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
நடமாடும் வகையிலான ரத்த அழுத்த கண்காணிப்பு சோதனைமுறை
இரவு மற்றும் பகல் என நாள்முழுவதும் ரத்த அழுத்தம் சார்ந்த ஏற்ற, இறக்கங்கள் தொடர்பான நுண்ணறிவுகளை வழங்கும் வகையிலான கண்காணிப்புச் சோதனையே, இந்தச் சோதனைமுறை ஆகும். மருத்துவ அமைப்பில் மட்டும் அதிகரித்த ரத்த அழுத்த நிலை உள்ளிட்டவற்றை அடையாளம் காணுதல், மருந்துகளின் செயல்திறனை மதிப்பிடுதல் மற்றும் நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்த போக்குகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
எக்கோ கார்டியோகிராம் (Echo)
ஒலி அலைகளைப் பயன்படுத்தி இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான படங்களை உருவாக்க, இந்த Echo சோதனை உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும், உயர் ரத்த அழுத்தம் தொடர்பான அசாதாரணங்களைக் கண்டறிவதற்கு, இதயச் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு உதவுகிறது.
டாப்ளர் அல்ட்ராசவுண்ட்
இது ஒரு வகை நோயறிதல் சோதனை ஆகும். இது ரத்த நாளங்கள் வழியாக நிகழும் ரத்த ஓட்டத்தை மதிப்பிடுகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்குக் காரணமான அடையாளங்களைக் காண உதவுகிறது. தமனிப்பகுதிகளில் ஏற்படும் அசாதாரணங்களைக் கண்டறிகிறது. வாஸ்குலார் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்கிறது.
மேற்குறிப்பிட்ட சோதனைகளில் உங்களுக்கு எது தேவை என்பதைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்து, அதைக் கவனமாகக் கடைப்பிடித்து, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோமாக..