பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு குறித்து அறிவோமா?
வலிப்புப் பாதிப்பு என்பது தொடர்ச்சியான வலிப்புத் தாக்கங்களால் வெளிப்படுத்தப்படும் நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஆகும். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், இரு பாலினத்தவரும், இந்தப் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இருந்தபோதிலும், பெண்களிடையே இதன் பாதிப்பானது தனித்துவம் கொண்டதாக உள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிகழ்வின் போது நிகழும் ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்பத்தின் இடைநிலைக் கட்டங்கள், மாதவிடாய்ச் சுழற்சி நிறுத்தம் உள்ளிட்ட இனப்பெருக்கம் தொடர்பான நிகழ்வுகளுடன், வலிப்புப் பாதிப்பின் அறிகுறிகள் மிகுந்த நெருக்கம் கொண்டவையாக உள்ளன. நரம்பியல் நிபுணர்கள், வலிப்புப்பாதிப்பை ஏற்படுத்தவல்ல அனைத்துக் காரணிகளையும், அதன் தன்மை மற்றும் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப, வெவ்வேறு வகைகளாக அதன் அறிகுறிகளைப் பிரித்து உள்ளனர்.
பெண்களின் இளமைப் பருவத்தில் இருந்து முதுமைக்காலம் வரை, அவர்களிடையே வலிப்புப் பாதிப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
இளம் வயது பெண்களுக்கு ஏற்படும் வலிப்புப் பாதிப்பு
பெண்கள், அவர்களின் இளமைப் பருவத்திலேயே, ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கத் துவங்கி விடுகின்றனர். இதன்காரணமாக, அவர்கள் சிறிய வயதிலேயே, வலிப்புத் தாக்கங்கள் மற்றும் சமூக, உணர்ச்சி ரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. சில சந்தர்ப்பங்களில், பெண்கள் இந்தச் சவால்களை, சங்கடமாகவும் அல்லது களங்கமாகவும் உணர்கின்றனர். இது அவர்களின் சுயமரியாதையை மட்டுமல்லாது, மற்றவர்களுடனான தகவல்தொடர்புகளையும் பாதிக்கின்றன. இளம்வயது சிறுமிகளுக்கு, சில நேரங்களில் சிகிச்சைத் தொடர்பான சிக்கல்களும் உருவாகின்றன.
எண்டோஜீனஸ் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக, பெண்களிடையே பருவமடைதல் மற்றும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வின் போது, வலிப்புத்தாக்கப் பாதிப்பானது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எண்டோஜெனஸ் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் நரம்பியல் பண்புகள் காரணமாகப் பருவமடைதல் மற்றும் மாதவிடாய் ஆகியவற்றின் போது வலிப்புத்தாக்கச் செயல்பாடு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. கருமுட்டைச் சரியாக வளர்ச்சி அடையாத நிலை, மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள், அமினோரியா உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பெண்கள், ஆன்டிபிலெப்டிக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், அதுகுறித்த விவரங்களை, பெண்கள் நல மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஹார்மோன் தொடர்பான ஆராய்ச்சி நடைமுறைகள், குறைந்தபட்ச அளவிலேயே நடந்தேறி உள்ள நிலையில், குறிப்பிட்ட வகையிலான புரோஜெஸ்டின்களின் ஆண்டி கான்வல்சண்ட் பண்புகள், சாத்தியமான சிகிச்சைமுறைகளாகக் கருதப்படுகின்றன.
திருமணமாகாத பெண்களுக்கு ஏற்படும் வலிப்புப் பாதிப்பு
திருமணமாகாத பெண்கள், வலிப்புப்பாதிப்பிற்கு உள்ளாகும்போது, அவர்கள் சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பிடத்தக்கத் தடைகளைக் கொண்டு உள்ளனர். தங்களின் எதிர்கால கணவர் இந்த வலிப்புப் பாதிப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வார் என்ற கவலை அவர்களைத் தொடர்ந்து வாட்டுகிறது. இந்தக் கவலை உணர்வானது, அவர்களை, நம்பிக்கைக் குறைவு கொண்டவர்களாக மாற்றுகிறது. சில பெண்கள், பணியிடங்களில் அல்லது சமூகச் சூழ்நிலைகளில் பெரும் களங்கத்தை எதிர்கொள்கின்றனர். வலிப்புப் பாதிப்பிற்கு உள்ளான திருமணமாகாத பெண்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெற, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது.
திருமணமான பெண்களுக்கு வலிப்புப் பாதிப்பு
திருமணமான பெண்களும் வலிப்பு நோய்ப்பாதிப்பின் போது திருமணமாகாத பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையே எதிர்கொள்கின்றனர். திருமணமான பெண்களுக்கு, கூடுதலாக, குடும்பம் மற்றும் வீடு சார்ந்த பொறுப்புகள் உள்ளன. வலிப்புப் பாதிப்பானது, திருமண உறவில் சுணக்கம், குழந்தைகளின் பராமரிப்பில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அஞ்சுகின்றனர். வலிப்புப் பாதிப்புக் குறித்து, பெண்கள் தங்களது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதற்கென உள்ள ஆதரவுக் குழுக்களுடனும் இணைந்து, குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பெறலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வலிப்புப் பாதிப்பு
வலிப்புப் பாதிப்பிற்கு உள்ளான கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைப் பேறுக்குத் திட்டமிடும் போது, குழந்தைப் பிரசவ நிகழ்வின் போதும், அசாதாரணமான தடைகளை எதிர்கொள்கின்றனர். இவர்கள், குழந்தைப் பேறுக்குத் திட்டமிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட மருத்துவருடன், வலிப்புப் பாதிப்பு சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனேனில், இத்தகைய மருந்துகளினால், கருவுறுதல் தடைப்படுதல், குழந்தைக்குப் பிறவிக் குறைபாடுகளை உருவாக்குதல் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்த இயலும் என்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் ஆகும். கர்ப்பக் காலத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் சாத்தியமான அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்த விரிவான புரிதல் மிகவும் அவசியம். இதோடு மட்டுமல்லாது, பயனுள்ள தலையீட்டுத் திட்டத்தையும், அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஹார்மோன் சுரப்பில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள், வலிப்புத் தாக்கம் மற்றும் உடல் எடையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, மருந்துகளின் செயல்திறனையும் கணிசமான அளவிற்குப் பாதிக்கின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வலிப்பு மருந்துகள் குழந்தையைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வழக்கமான பரிசோதனைகள் அவசியம். பெண்கள், தங்களின் பிரசவ காலத்தில் உட்கொள்ளும் மருந்துகளால், பிறக்கப்போகும் குழந்தைக்குப் பிறவிக் குறைபாடுகள் அல்லது அறிவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உட்கொள்ளும் வலிப்புப் பாதிப்பிற்கான மருந்துகளை நிறுத்தும் நிலை ஏற்படலாம். பிரசவ நிகழ்வின் போது ஏற்படும் சிக்கல்களினால், அவர்களுக்குச் சிசேரியன் முறையில் குழந்தைப் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. பிரசவ நிகழ்வின் போதும், அதற்குப் பிறகும் விரிவானதொரு மருத்துவக் கண்காணிப்பு என்பது அவசியம். குழந்தைப் பிரசவித்த பிறகு, பெண்கள், தங்கள் மருந்து மற்றும் சிகிச்சைத் திட்டங்களில் மேலும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.
குழந்தையைப் பராமரிப்பது, தாய்ப்பால் கொடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகள், வலிப்புப் பாதிப்பு உள்ள தாய்மார்களுக்குச் சாத்தியமானது தான் என்றபோதிலும், வலிப்புப் பாதிப்பிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள், பச்சிளம் குழந்தைக்கு எந்தளவிற்குப் பாதுகாப்பானது என்பதை, மருத்துவரைக் கலந்தாலோசித்து, உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. வலிப்புப் பாதிப்பிற்கு உள்ளான பெண்கள், பாதிப்பைக் குறைக்க உறக்கமின்மையைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : வலிப்புப் பாதிப்பு குறித்த கட்டுக்கதைகளை அறிவோமா?
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வலிப்புப் பாதிப்பு (Epilepsy in Menopasal Women)
பெண்கள், மாதவிடாய் மற்றும் பெரிமெனோபாஸ் உள்ளிட்ட மற்ற சவாலான நிலைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் மற்றும் பெரிமெனோபாஸ் நிகழ்வின் போது, பெண்கள் ஹார்மோன் ரீதியிலான மாற்றங்களை அனுபவிக்கிறார்கள், இந்த ஹார்மோன் மாற்றங்கள், வலிப்புத்தாக்கங்களைத் தூண்டுவதாக உள்ளன. இந்த ஹார்மோன் சுரப்பில் நிகழும் மாற்றங்கள், பெண்களுக்கு மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், பதட்டம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படலாம். இது மாதவிடாய் மற்றும் பெரிமெனோபாஸ் நிகழ்வின் அறிகுறிகளை அதிகரிக்கின்றன.
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வலிப்புப் பாதிப்பு
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு, வலிப்புப்பாதிப்பு ஏற்படுமாயின், அது அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட வயது தொடர்பான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மாதவிடாய் சுழற்சி நின்ற பிந்தைய சிகிச்சைகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட திட்டம் தேவைப்படுகிறது. சிகிச்சை விருப்பங்களில், ஆண்டிபிலெப்டிக் மருந்துகள், வாழ்க்கைமுறையில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்று சிகிச்சை உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.
வலிப்புப் பாதிப்பில் ஹார்மோன்களின் தாக்கம்
ஹார்மோன் சுரப்பில் நிகழும் மாற்றங்கள், வலிப்புத் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பெண்கள் பருவமடைதல், கர்ப்பம், மாதவிடாய், வயதுக்காரணி உள்ளிட்டவை, ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளன. வலிப்புப்பாதிப்பு தொடங்கும் போது, வலிப்புத் தாக்கங்களின் நிகழ்வு, வலிப்புத் தாக்கங்கள், அவர்களது வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறதா அல்லது இடையிலேயே நின்றுவிடுகிறதா என்பதை, ஹார்மோன் அளவீடுகளே நிர்ணயிக்கின்றன. மாதவிடாய் சுழற்சிப் பாதிப்பானது, வலிப்புத்தாக்கங்களைத் தூண்டுகிறது அல்லது மருந்துகளின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதுமட்டுமல்லாது, கருத்தடை மருந்துகள், வலிப்புத்தாக்க அதிர்வெண்ணையும் பாதிக்கிறது. ஹார்மோன் சுரப்பில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இது பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கின்றன. சிறந்த முறையிலான சிகிச்சை விருப்பங்களைக் கண்டறிய, மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிப்பது விவேகமானதாக உள்ளது.
அன்றாட வாழ்க்கையில், வலிப்பு நோய்ப்பாதிப்பைச் சமாளிக்கும் வழிமுறைகள்
வலிப்பு நோய்ப்பாதிப்புடன் வாழ்வது மிகச் சவாலானது ஆகும். அன்றாட வாழ்க்கையில், இந்த நிலையை எதிர்கொள்ளப் பெண்களுக்கு உதவ, சில வழிமுறைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
- வலிப்பு நோய்ப் பாதிப்பைத் திறம்பட சமாளிக்க, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சுகாதாரத் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு மிக முக்கியமானது ஆகும்.
- மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்து முறைகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம், வலிப்புப் பாதிப்பின் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மருந்துகள்போதிய பலனளிக்காத நிலையில், அறுவைச் சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை நிகழ்வின் போது, மருத்துவர். மூளையில் வலிப்புத்தாக்கப் பாதிப்பை ஏற்படுத்தவல்லப் பகுதியை அகற்றுவார்.
- மருந்துகளின் மூலம், ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படும்பட்சத்தில், மாற்று மருந்துகள் மற்றும் மருந்துகளில் அளவில் மாற்றங்களை, மருத்துவர் மேற்கொள்வார்.
- மன அழுத்தத்தைக் குறைக்கவல்ல யோகா அல்லது தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை, தினமும் தவறாமல் மேற்கொண்டு வருவது நல்லது.
- ஆதரவுக் குழுக்களில் இணைவதன் மூலம், பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மன உறுதி மற்றும் நம்பிக்கை மேம்படும்.
பெண்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, வலிப்பு நோய்ப் பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற்று, வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..