இரத்த சர்க்கரை அளவு கண்டறியும் சோதனை அறிவோமா?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிப்பதன் மூலம், உடலில் குளுக்கோஸ் எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது குறித்த நுண்ணறிவை வழங்குகிறது. இது சரியான உணவு மற்றும் வாழ்க்கைமுறைத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. நீரிழிவு நோயைத் திறம்பட நிர்வகிக்க, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம் ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிப்பதன் விளைவாகவே, நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், கையடக்கக் குளுக்கோஸ் மானிட்டர்கள் உதவியுடன், ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க இயலும். நிலையான ரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது முக்கியமா?
உடல் செயல்பாடுகளுக்கு, குளுக்கோஸ் அல்லது சர்க்கரை, முக்கிய ஆற்றல் மூலமாகச் செயல்படுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களில் இருந்து கிடைத்த சர்க்கரை, ரத்தத்தில் வெளியிடப்படுகிறது. உணவு சாப்பிட்டபிறகு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, இன்சுலின் ஹார்மோனைச் சுரக்கக் கணையம் தூண்டப்படுகிறது. இந்த ஹார்மோன், அதிகப்படியான குளுக்கோஸை, உடலில் உள்ள செல்கள் உறிஞ்சி ஆற்றலாக மாற்ற உதவுகிறது.
நீங்கள் நீண்ட நாள்களாக, உயர் ரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் எனில், உங்கள் உடலில் போதிய அளவில் இன்சுலின் சுரப்பு இருந்தபோதிலும், அது முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம் ஆகும். இதன்காரணமாக, அதிகப்படியான குளுக்கோஸ், உடல் செல்களால் உறிஞ்சப்படாமல், ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. இந்த நிலையானது, நீரிழிவுப் பாதிப்பிற்கு வித்திடுகிறது.
நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை வழங்காவிட்டால், இது பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அவற்றில் கண் பார்வை, நரம்பு மண்டலம், தோல் நிலை, சிறுநீரகம், இதய நோய் மற்றும் பக்கவாதம் முக்கியமானவை.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் பல்வேறு சோதனைகள்
நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கண்டறிதல் நிலைக்கும், அதற்குப்பிறகு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் பல்வேறு வகையான சோதனைகளைப் பரிந்துரைக்கின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் பல்வேறு வகையான சோதனைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
HBA1C சோதனை
கடந்த 2 முதல் 3 மாதங்களின் சராசரி ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய மருத்துவர் இந்த HBA1C சோதனையைப் பரிந்துரைச் செய்கிறார்.
இந்தச் சோதனை முடிவுகளில் கிடைக்கும் அளவீடு 5.7 சதவீதமாக இருப்பின் அது இயல்பானது ஆகும்.
5.7 முதல் 6.4 சதவீதமாக இருப்பின் அது நீரிழிவு பாதிப்பிற்கு முந்தைய நிலை ஆகும்.
6.5 சதவீதத்திற்கு மேல் இருப்பின் நீரிழிவு பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை எனில், அது இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப் பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும் அபாயம் உள்ளது.
சாப்பிடாத நிலையில் மேற்கொள்ளப்படும் சோதனை / FBS சோதனை
இந்தச் சோதனை மேற்கொள்வதற்கு முதல்நாள் இரவு, குறிப்பிட்ட நபர்கள் எதுவும் சாப்பிட அனுமதிக்கப்படுவதில்லை. சோதனையின் முடிவில் கிடைக்கும் மதிப்பானது
99 mg/dL என்ற அளவில் இருந்தால், அது இயல்பான நிலை
100 முதல் 125 mg/dL அளவில் இருந்தால், நீரிழிவுக்கு முந்தைய நிலை
126 mg/dL க்கு மேல் இருந்தால், நீரிழிவு நிலை என்றும் வரையறுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : இன்சுலின் எதிர்ப்புத்தன்மைக் குறித்து அறிவோமா?
குளுக்கோஸ் சகிப்புத்தன்மைச் சோதனை
குளுக்கோஸைப் பகுதிப்பொருளாகக் கொண்ட திரவ வகையிலான உணவை உட்கொள்வதற்கு முன் மற்றும் பின், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய, இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முதல்நாள் இரவு, எதுவும் சாப்பிடாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பின் காலையில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின் திரவ உணவு வழங்கப்படுகிறது. அது அருந்தப்பட்டு 1, 2 மற்றும் 3 மணிநேரங்களில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்காணிக்கப்படுகிறது.
சோதனையின் முடிவு 140 mg/dL அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இயல்பான நிலை
140 முதல் 199 mg/dL இருந்தால், நீரிழிவுக்கு முந்தைய நிலை
200 mg/dLக்கு மேற்பட்டு இருந்தால், நீரிழிவு நிலை என்று வரையறுக்கப்படுகிறது.
Random Blood Sugar சோதனை
இந்த சோதனையை, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இந்தச் சோதனைக்கு முன்னதாக, உணவு சாப்பிடக் கூடாது என்ற எந்தவொரு நிபந்தனையும் இல்லை.
சோதனையின் முடிவில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 mg/dL அல்லது அதற்கு மேல் இருந்தால், நீரிழிவு நோய்ப்பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு முதல் வகை நீரிழிவுப் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் இருப்பின், ஆன்ட்டிபயாடிக் பரிசோதனை மற்றும் கீட்டோன் பரிசோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது. சிறுநீர்ப் பரிசோதனையில் கீட்டோன் காணப்படின், முதல் வகை நீரிழிவு நோய்ப்பதிப்பு இருப்பதை உறுதி செய்ய இயலும்.
கர்ப்பகால நீரிழிவுச் சோதனைகள்
பெண்களுக்கு அவர்களின் கர்ப்பக் காலத்தில்,ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிகழ்வையே, கர்ப்பகால நீரிழிவுப் பாதிப்பு என்று குறிப்பிடுகிறோம். கர்ப்பிணிகளுக்கு, கீழ்க்கண்ட சோதனைகளின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அளவிடப்படுகிறது.
குளுக்கோஸ் சவால் சோதனை
கர்ப்பிணிகள், குளுக்கோஸ் கொண்ட திரவம் அருந்த அறிவுறுத்தப்படுவர். பின் 1 மணிநேரத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும். கிடைக்கும் அளவீட்டில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், குளுக்கோஸ் சகிப்புத்தன்மைச் சோதனை மேற்கொள்ளப்படவேண்டும்.
வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மைச் சோதனை
குளுக்கோஸ் கொண்ட திரவத்தை அருந்துவதற்கு முன் மற்றும் பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அளவிட வேண்டும். சோதனை முடிவுகளைக் கொண்டு மருத்துவரைக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய, மேற்குறிப்பிட்ட சோதனைகளைக் கவனமாக மேற்கொண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…