PET – CT ஸ்கேன் : அறிந்ததும்… அறியாததும்…
PET – CT ஸ்கேன் சோதனை, உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளின் அளவு மற்றும் அமைவிடம், இதன்காரணமாக, செல்களில் நிகழும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை முப்பரிமாண படங்களாகத் தொகுத்து வழங்குவதால், மருத்துவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய்ப் பாதிப்பின் நிலை மற்றும் அதைக் குணப்படுத்தும் தன்மை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் துல்லியமாக அறிவதற்கு மட்டுமல்லாது, மறதி நோய் எனப்படும் அல்சைமர் நோய் மற்றும் இதய நோய்களையும், அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்து உரியச் சிகிச்சைகளை மேற்கொள்ள, PET – CT ஸ்கேன் நல்வாய்ப்பு வழங்குகிறது.
PET – CT ஸ்கேன் தொடர்பாக, உங்களுக்கு எழும் சந்தேகங்களை, நாங்கள் கேள்வி பதில்களாகத் தொகுத்து உள்ளோம்.
PET – CT ஸ்கேனின் நன்மைகள்
புற்றுநோய் பாதிப்பின் துவக்க நிலையை முன்கூட்டியே அறிய PET – CT ஸ்கேன் பேருதவி புரிகிறது. மேலும்
புற்றுநோய் கட்டி எங்கே உள்ளது?
அது பரவும் தன்மையைக் கொண்டு உள்ளதா?
எத்தனைப் பெரியதாக உள்ளது?
மீண்டும் கட்டி வர வாய்ப்பு உள்ளதா? உள்ளிட்டவற்றைக் கண்டறிய உதவி செய்கிறது.
புற்றுநோய் பாதிப்பு இருப்பின் அதற்குரிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய உதவுகிறது.
பயாப்ஸி எனப்படும் திசுப் பரிசோதனை அல்லது அறுவைச் சிகிச்சையின் தேவையைக் குறைக்கிறது.
நேர விரயத்தைக் குறைக்கிறது.
மேற்கொண்ட சிகிச்சைப் பலனளிக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.
PET – CT ஸ்கேனர் இயந்திரத்தின் எடை அளவு?
PET – CT ஸ்கேனர் இயந்திரத்தின் எடை 450 பவுண்டுகள் கொண்டதாக இருக்கும். ஸ்கேன் எடுக்க வேண்டிய நபரின் உடல் எடை, அவரது உடல்வாகு, உள்ளிட்டவை ஸ்கேன் முடிவுகளில் எவ்வித மாற்றங்கள் நிகழலாம் என்பதைத் தீர்மானிக்கும்..
ஸ்கேன் எடுப்பதற்கு முன் நடப்பது என்ன?
ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர், கதிரியக்க பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. இது ரேடியோடிரேசராகச் செயல்படுகிறது. இந்த ஊசி செலுத்தப்பட்ட பிறகு, 30 முதல் 90 நிமிடங்கள் ஓய்வு நிலையிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான், ரேடியோடிரேசர் உடல் முழுவதும் பரவும்.
ஓய்விற்குப் பிறகு, தொழில்நுட்ப உதவியாளரின் உதவியுடன், ஸ்கேனர் இருக்கும் இடத்தில் படுக்க வைக்கப்படுவீர்கள். முதலில் CT ஸ்கேனும், அதனைத் தொடர்ந்து, PET ஸ்கேனும் எடுக்கப்படும். CT ஸ்கேன் எடுக்கப்படும் போது, சில விநாடிகள், மூச்சை அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியது கட்டாயம்.
ஸ்கேன் நிகழ்வு முடியும்வரை, அசையாமல் இருக்க வேண்டும். ஸ்கேன் எடுத்து முடித்த உடன், கணினி, எடுத்த படங்களை, முப்பரிமாண படங்களாக மாற்றி, மருத்துவ நிபுணரிடம் வழங்கும்.
கால அளவு
ஒவ்வொரு நோய் தொடர்பான PET – CT ஸ்கேனுக்கும் ஒவ்வொரு நேரம் ஆகும். ஸ்கேன் எடுக்க வேண்டிய நபர், அந்த மையத்தில் குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் இருப்பது அவசியம் ஆகும். இந்தக் கால இடைவெளியில், அந்த நபருக்கு, ரேடியோடிரேசர் மருந்தை ஊசி மூலம் ஏற்றுவது, ஓய்வு நிலையில் இருப்பது, ஸ்கேனர் இயந்திரத்தில் இருக்கும் நேரம் உள்ளிட்டவையே அடங்கும்.
ஸ்கேன் நிகழ்விற்குப் பிந்தைய நடவடிக்கைகள்
ஸ்கேன் முடிந்த பின் உடனடியாக, நாம் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் உடல் முழுவதும் பரவி இருக்கும். ஸ்கேன் நிகழ்வு முடிந்த பின்னர், அதிகளவு நீரைப் பருக வேண்டும்.
எந்த வகைப் புற்றுநோய் வகைகளைக் கண்டறிய முடியும்?
PET – CT ஸ்கேன் சோதனையின் மூலம், கர்ப்பப்பைப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், உள்ளிட்ட வகைகளைக் கண்டறிய முடியும்.
இந்தச் சோதனையின் மூலம் வீக்கங்களைக் கண்டறிய முடியுமா?
PET – CT ஸ்கேன், செல்களில் நிகழும் உயர் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் கண்டறியப் பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளாக இல்லாத நிலையில், வீக்கம், தொற்று உள்ளிட்டவைகளையும், இதன்மூலம் கண்டறிய முடியும்.
PET – CT ஸ்கேன் சோதனை எந்த நேரத்தில் பரிந்துரைச் செய்யப்படுகிறது?
புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்குப் பரிசோதனையின் போது தென்படும்பட்சத்தில், PET – CT ஸ்கேன் சோதனை உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. அதேநேரத்தில், நீங்கள் புற்றுநோய் பாதிப்பிற்கு மேற்கொண்ட சிகிச்சையின் செயல்திறனையும், இந்தச் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
இந்தச் சோதனை வலியை ஏற்படுத்துமா?
PET – CT ஸ்கேன் சோதனைப் பெரும்பாலும் வலி உணர்வை ஏற்படுத்துவது இல்லை. ரேடியோடிரேசர், ஊசி மூலம் செலுத்தப்படும் போது, அந்த இடம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள இடங்களில் ஏதாவது அசவுகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
எத்தகைய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்?
PET – CT ஸ்கேன் சோதனை முடிந்தபிறகு,
ஸ்டார்ச் (மாவு) சத்து அதிகம் உள்ள காய்கறிகள்
இனிப்பு சுவைக் கொண்ட உணவு வகைகள்
பழங்களின் சாறு வகைகள்
பாஸ்தா
தானியங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பக்கவிளைவுகள் உண்டா?
PET – CT ஸ்கேன் சோதனைப் பாதுகாப்பானது என்றபோதிலும், சில பக்கவிளைவுகள் இதில் இருக்கவே செய்கின்றன. இந்தச் சோதனை முடிந்தபிறகு, சிலருக்கு வாந்தி, குமட்டல், தலைவலி, தலைச் சுற்றல், வலி அல்லது அசவுகரியம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
PET ஸ்கேன் எவ்வளவு துல்லியமானது?
PET ஸ்கேன் நம் உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களின் செயல்பாடுகளைத் துல்லியமாகப் படம் எடுக்கிறது. இதன்மூலம், செல்களின் வளர்சிதை மாற்றத்தில் நிகழும் மாற்றங்களை எளிதில் கண்டறியலாம்.
PET ஸ்கேன்; CT ஸ்கேன் – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
CT ஸ்கேன் சோதனையில் எக்ஸ்ரே டிடெக்டர் உதவி உடன், நம் உடலின் திசுக்கள் மற்றும் செல்களைப் படமெடுக்க உதவுகின்றன.
PET ஸ்கேன் சோதனையில், ரேடியோடிரேசர் மற்றும் ஸ்கேனர்ப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் உதவியால், திசுக்கள் மற்றும் செல்களின் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும்.
கதிரியக்க வீச்சு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனையில் கதிரியக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நேரம், கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது புற்றுநோய் போன்ற இன்னபிற உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடுகின்றன. PET – CT ஸ்கேன் சோதனை முறையில், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்கே, கதிரியக்கம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : PET – CT ஸ்கேன் – பக்கவிளைவுகள், அபாயங்கள்
ஹாட்ஸ்பாட் என்றால் என்ன?
Pet ஸ்கேனரில் காமா கதிர்கள் அடிப்படியிலான கேமரா அமைப்பு உள்ளது. இந்தக் காமா கேமரா, திசுக்களில் உள்ள செல்களைப் படம்பிடிக்கின்றன. பின், இந்தப் படங்கள் முப்பரிமாண படங்களாக மாற்றப்பட்டு நமக்குக் கிடைக்கிறது. இந்தப் படங்களில், புற்றுநோய் பாதிப்பு உள்ள இடங்களில் நெருப்பு இருப்பது போன்று காட்டும். இதனை ஹாட்ஸ்பாட் என்று குறிப்பிடுகிறோம்.
மற்ற நோய்களின் பாதிப்புகளையும் கண்டறியுமா?
PET ஸ்கேன் சோதனையில் கிடைக்கும் முடிவுகளை, அதற்குரிய மருத்துவரிடம் காண்பித்து, புற்றுநோய், மூளை, நரம்பு குறைபாடுகள் மற்றும் இதய நோய்களின் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
PET – CT ஸ்கேன் சோதனை முடிவுகளைக் கொண்டு, பல்வேறு நோய்களின் பாதிப்புகளை நாம் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, நல்வாழ்க்கை வாழ்வோமாக…