இரத்த பரிசோதனைச் செய்யத் திட்டமா – இதைப் படிங்க பிளீஸ்!
இரத்த பரிசோதனைகள் என்பதைப் பொதுவான நோயறிதல் பரிசோதனைகள் ஆகவும் வரையறுக்கலாம். இது வழக்கமான உடல்நலப் பரிசோதனையின் ஒருபகுதியாக விளங்குகிறது. நோயாளிக்கு ஏற்படும் உடல் உபாதைகள் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. இரத்த பரிசோதனகள், லேசான வலியை ஏற்படுத்தும் நிகழ்வு ஆகும். நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அது எதன் காரணமாக ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.
இரத்த பரிசோதனை என்பது ரத்தத்தின் பல்வேறு கூறுகளான ரத்த சிவப்பு அணுக்கள் , ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் எனப்படும் ரத்த நுண் தட்டுகள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஹார்மோன்களை அளவிட பயன்படுத்தப்படும் மருத்துவ சோதனை ஆகும். நோய்ப்பாதிப்பைக் கண்டறிதல், அதைக் கண்காணித்து உரிய சிகிச்சை முறையைத் திட்டமிடுவதே, ரத்த பரிசோதனைச் செய்வதன் நோக்கம் ஆகும்.
நீரிழிவுப் பாதிப்பு, நோய்த் தொற்றுக்கள், ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட மருத்துவ நிலைமைகளைக் கண்டறிய, ரத்த பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. இரத்த பரிசோதனை முடிவுகள், உங்கள் உடலின் தற்போதுள்ள ஆரோக்கிய நிலையைப் புரிந்து கொள்ளவும், தேவையான சிகிச்சை முறைகளை அடையாளம் காணவும், சிகிச்ச்சையின் செயல்திறனைக் கண்காணிக்கவும் சிகிச்சை நிபுணருக்கு உதவுகின்றன.
இரத்தத்தின் பகுதிப் பொருட்களைப் பொறுத்து, ரத்த பரிசோதனைகள் பல்வேறு வகையினதாக உள்ளன. உதாரணமாக,CBC என்றழைக்கப்படும் முழுமையான ரத்த பரிசோதனை, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்த நுண் தட்டுகளின் எண்ணிக்கையை அளவிட உதவுகின்றன.
குளுக்கோஸ் சோதனை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிட உதவுகிறது. இந்தச் சோதனை, நீரிழிவுப் பாதிப்பைக் கண்டறியவும் மற்றும் கண்காணிக்கவும் உதவுகிறது.
இரத்த பரிசோதனைகள் நீரிழிவுப் பாதிப்பு மட்டுமல்லாது, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளையும் கண்காணிக்க உதவுகின்றன. வழக்கமான ரத்த பரிசோதனைகள், ரத்த அளவுகளில் நிலவும் மாற்றங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சைத் திட்டங்களை, மருத்துவர்த் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
இரத்த பரிசோதனைச் செய்துகொள்வதற்கு முன் மற்றும் பின் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பு
இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பு, சுகாதாரச் சேவை வழங்குநர் வழங்கும் எத்தனை மணிநேரங்களுக்கு முன்பிருந்து சாப்பிடாமல் இருத்தல், மருந்துமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது இன்றியமையாததாகும். உண்ணாவிரதம் என்றால், ரத்த பரிசோதனைக்கு முன்னர்க் குறிப்பிட்ட காலத்திற்குத் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. இதனை மீறும்பட்சத்தில், சோதனையில் துல்லியமற்ற முடிவுகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் பற்றி மருத்துவரிடம் தெரிவிப்பது, சோதனை முடிவுகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்ய உதவும். உங்களுக்கு ஒவ்வாமைப் பாதிப்பு இருப்பின், அதுகுறித்தும் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. ஏனெனில், இது சோதனை முடிவுகளில், துல்லியமற்ற நிலைக்கு வழிவகுத்துவிடும்.
இரத்த பரிசோதனையின் போது
இரத்த பரிசோதனை நிகழ்வின்போது, பயிற்சி பெற்ற நிபுணர், நோயாளியின் உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு, குறிப்பிட்ட நரம்பில் ஊசியைச் செலுத்துவார். ஊசி செலுத்தப்படும்போது, லேசான வலியை உணர்வீர்கள். உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்ட பின்னர், அதை மேற்கொள்ளும் பரிசோதனைகளைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட குப்பிகளில் சேகரிக்கப்படும். இரத்தம் எடுக்கப்பட்ட இடத்தில், உடனடியாகக் காட்டன் பேண்டேஜ் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும். இந்த அனைத்துச் செயல்முறைகளும், சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த பரிசோதனைக்குப் பிறகு
இரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கப்படும் நேரத்தில் சிலருக்கு லேசான தலைவலி, மயக்கம் ஏற்படுவது இயல்பான நடவடிக்கைத் தான் ஆகும். இரத்த சேகரிப்பு நிகழ்விற்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுப்பது நல்லது. ஓய்விற்குப் பிறகு, தண்ணீர்ப் பருக வேண்டும். இதற்குப் பிறகும், நீங்கள் மயக்கம் அல்லது அசதியாக உணரும்பட்சத்தில் உடனடியாக நிபுணரிடம் தெரிவிக்கவும்.
இரத்தம் சேகரிக்கப்பட்ட இடத்தில், வீக்கம் அல்லது வலி இருப்பின் அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்
இந்தப் பரிசோதனை மேற்கொண்ட சிறிது காலத்திற்குக் கனமான பொருட்களைத் தூக்குதல் அல்லது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. பரிசோதனைக்குப் பிந்தைய வழிமுறைகளையும் கவனமாகப் பின்பற்றுவது அவசியம் ஆகும்.
மேலும் வாசிக்க : இரத்த பரிசோதனைகளின் வகைகளை அறிவோமா?
இரத்த பரிசோதனைச் சுமூகமாக நடைபெற உதவும் வழிமுறைகள்
இரத்த பரிசோதனைகள் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இரத்த பரிசோதனைக்கு முன்னும், பின்னும் எவ்விதச் சங்கடங்கள் நிகழாமல் இருக்கப் பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்வது மிகச் சிறந்தது ஆகும்.
அமைதியான மனநிலை
இரத்த பரிசோதனைக்கு முன்பும், பரிசோதனை மேற்கொள்ளும் போதும், எவ்விதப் பதட்டமும் அடையாமல், அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். பயம் மற்றும் மன அழுத்த நிகழ்வுகளானது, இதயத்துடிப்பின் வீதம் மற்றும் ரத்த அழுத்த வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், ரத்தம் சேகரிக்கும் நிகழ்வானது சவாலானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், மனதிற்கு இதமான இசையைக் கேட்பது உள்ளிட்ட அமைதியான மனநிலையை உருவாக்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
அதிகளவு தண்ணீர்க் குடிக்க வேண்டும்
இரத்த பரிசோதனைக்கு முன்னர், அதிகளவு தண்ணீர்க் குடிப்பதன் மூலம், ரத்தம் சேகரிப்பது இலகுவான பணியாக மாறும். இது உடலின் நீரிழப்பைக் கணிசமாகக் குறைப்பதால், சோதனையின் முடிவுகளும் துல்லியத்தன்மைக் கொண்டதாக அமையும். இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு, 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர்க் குடிப்பது அவசியம் ஆகும்.
சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்
இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு, நீங்கள் உண்ணாவிரதத்தைத் துவக்குவதற்கு முன்பாக, ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அதிகச் சர்க்கரை மற்றும் அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள், சோதனை முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் அதிகம். புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்கள் சம அளவு கொண்ட உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இலகுவான உடைகளை உடுத்த வேண்டும்
இரத்த பரிசோதனையின் போது இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இறுக்கமான உடைகள், கைகளுடனே ஒட்டிக் காணப்படுவதால், ரத்தம் சேகரிக்க உதவும் நரம்பை எளிதில் கண்டறிய இயலாத சூழலை உருவாக்கி விடும். எனவே, இலகுவான அதேசமயம் வசதியான உடைகளை உடுத்துவது நல்லது.
இரத்த பரிசோதனைச் செய்யத் திட்டமிடும்போதே, நீங்கள் அதற்கான சரியான பரிசோதனை மையத்தைத் தேர்வு செய்து, நிபுணரின் சந்திப்பு நேரத்தைக் குறித்துக் கொள்வது அவசியம் ஆகும். பரிசோதனைக் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, துல்லியமான முடிவுகளைப் பெற உதவுவது மட்டுமல்லாது, உங்களையும் மன அமைதியோடு இருக்க உதவும். பரிசோதனைகள் தொடர்பாக, ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நிபுணரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
மேற்கண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, ரத்த பரிசோதனையின் மூலம் உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…