உயர் இரத்த அழுத்தம் – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
ஹைபர்டென்சன் என்றழைக்கப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, இதயம் மற்றும் ரத்த குழாய் ஆரோக்கியத்திற்கு முக்கியமான எச்சரிக்கையான குறியீடாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, இந்நோய் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் இல்லாமல் மறைந்திருக்கக்கூடும், அதனால் அதை நீங்கள் உணராமல் இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு என்று தனிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. அரிய தருணங்களில், சில அறிகுறிகள் தோன்றலாம். அவற்றைப் பொதுவான அறிகுறிகள் எனத் தவிர்த்துவிடாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
நீங்கள் புறக்கணிக்கக் கூடாத உயர் ரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறிகள்
கடுமையான தலைவலி
தலையின் பிற்பகுதியில் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தலைவலி, உயர் ரத்த அழுத்த பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்க வேண்டும். தலைச்சுற்றல் மற்றும் குமட்டலுடன் கூடிய தலைவலி ஏற்படுகிறது. இது ரத்த அழுத்த மாறுபாட்டின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.
உடல் சோர்வு
விவரிக்க இயலாத உடல் சோர்வு மற்றும் நிலையான உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, இதயம் அதிகப் பாரத்தில் ரத்தத்தைப் பம்ப் செய்வதால் உடலின் ஆற்றல் குறைந்து சோர்வு அதிகரிக்கிறது.
பார்வைக் குறைபாடுகள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சில அரிய தருணங்களில், கண்களில் உள்ள ரத்த நாளங்களைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தவல்ல ரெட்டினோபதி பாதிப்பிற்கும் இது வழிவகுக்கிறது.
மார்புப் பகுதியில் வலி உணர்வு
மார்புப் பகுதியில் வலி உணர்வு மற்றும் அசவுகரியமான நிலையை, பெரும்பாலானோர் மாரடைப்பின் அறிகுறியாகவே கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு ஆகும். இது உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் தொடர்புடையதாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, இதயத்தின் தசைகளுக்கு இடையூறு ஏற்பட்டு மார்பில் வலி உருவாகிறது.
சுவாசித்தலில் சிரமம்
சுவாசித்தலில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் பாதிப்பும், உயர் ரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, அது ரத்தத்தைப் பம்ப் செய்யும் நடவடிக்கைகளுக்காக, இதயத்துடிப்பைக் கணிசமாக அதிகரிக்கச் செய்து, அந்த அதீதத் துடிப்பானது நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மூச்சுத்திணறல் நிலை ஏற்படுகிறது.
சீரற்ற இதயத் துடிப்பு
சீரற்ற இதயத்துடிப்பு அல்லது அரித்மியா நிலை, உயர் ரத்த அழுத்த பாதிப்பின் வெளிப்பாடாகக் கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும்போது, அது இதயத்தின் வழக்கமான இதயத்துடிப்பு நிகழ்வைச் சீர்குலைக்கிறது. உடனடி மருத்துவ கவனிப்பு மற்றும் வழக்கமான கண்காணிப்பு மேற்கொள்வதன் மூல, இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும்.
சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
ஹெமட்டூரியா எனப்படும் சிறுநீரில் ரத்தம் வெளியேறும் நிகழ்வானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும்பட்சத்தில், அது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களைப் பாதித்து, சிறுநீரில் ரத்தம் கசிவதற்கு வழிவகுக்கிறது. இந்தப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்வதன் மூலமாகவே, கட்டுப்படுத்த இயலும்.
மார்பு, கழுத்து அல்லது காதுப்பகுதிகளில் துடிப்பு உணர்வு
மார்பு, கழுத்து அல்லது காதுப்பகுதிகளில் துடிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல், ரத்த அழுத்த அளவு அதிகரித்ததற்கான அடையாளம் ஆகும். இந்த உணர்வை, நாம் சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது. இதற்கு நீங்கள் தகுந்த சிகிச்சையளிக்காவிடில், அது இதய நோய்ப்பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும் அபாயம் உள்ளது.
மேலும் வாசிக்க : ஹைபர்டென்சன் இருந்தாலும் ஹாயாக வாழலாம்!
இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையில் விரைந்து மேற்கொள்ள வேண்டியவை
உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும்பட்சத்தில் அதன் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.
- மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தத்தைக் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், மனதை அமைதிநிலையில் வைத்திருப்பது மற்றும் கூடுதல் அழுத்தங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். இதற்காக, ஒரு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு உடலை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
- இரத்த அழுத்த அளவைச் சீரமைப்பதில், உடலின் நீரேற்றத்திற்கு முக்கிய பங்குண்டு. எனவே தினமும் போதிய அளவு தண்ணீர்க் குடிப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
- உடல் தளர்வை ஊக்குவிக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மெதுவான மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
- மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது பரிந்துரையின் பேரில், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
- கார்பனேட்டட் பானங்கள் அல்லது அதிக உப்பு கொண்ட உணவுகள், ரத்த அழுத்தத்தைக் கணிசமாக அதிகரித்துவிடும் என்பதால், இவைகளைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
அறிகுறிகள் தீவிரமடைந்து மோசமான நிலையை எட்டுவதற்கு முன்பாக, மருத்துவரைக் கலந்தாலோசித்து, சிகிச்சைமுறையை மேற்கொள்வது சாலச் சிறந்தது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து, ரத்த அழுத்த பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…