குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது எப்படி?
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பல்வேறு உடல் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள இயலும். குளிர்காலத்தில் வெளிப்புற செயல்பாடு குறைதல், வீட்டில் அதிக நேரம் கழித்தல், அதிகக் கலோரி உணவு, குறைந்த சூரிய ஒளி, வைட்டமின் D பற்றாக்குறை மற்றும் பருவகால நோய்ப்பாதிப்பு ஆகியவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதைச் சவாலாக்குகின்றன. குளிர்காலத்தில் நமது உடல் அதிக மன அழுத்தத்திற்கு உட்படுகின்றன. இதன்காரணமாக, இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகி, இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தவறாமல் கண்காணித்தல், மருத்துவரைக் கலந்தாலோசித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், குளிர்காலத்திலும் ரத்த சர்க்கரை அளவைத் திறம்பட நிர்வகிக்க இயலும்.
உயர் ரத்த சர்க்கரை அளவு
இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையே, உயர் ரத்த சர்க்கரை நிலை என்று வரையறுக்கப்படுகிறது. உடல் செயல்பாடுகளுக்கு, சர்க்கரை இன்றியமையாத தேவையாக உள்ளது. இது நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்து பெறப்படுகிறது. குளிர்காலத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது.
குளிர்காலத்தில் உயர் ரத்த சர்க்கரை நிலை ஏற்படுவதற்கான காரணங்கள்
குளிர்காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு நிகழ்விற்குப் பல்வேறு காரணிகள் பங்கு வகிக்கின்றன. அவற்றில் முதன்மையான மற்றும் பொதுவான காரணிகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
உடல் உழைப்பு குறைதல்
குளிர்ந்த சூழலில் வெளியிடங்களுக்குச் செல்வது குறைக்கப்படுகிறது. இதனால் உடலின் உழைப்பு குறைந்து, குளுக்கோஸ் ஆற்றலாக மாற்றம் பெறாமல் ரத்தத்தில் குவிந்து, உயர் ரத்த சர்க்கரை நிலையை ஏற்படுத்துகிறது.
பண்டிகைக் கால சிறப்பு உணவுகள்
பண்டிகைக் காலங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் அதிகளவில் சர்க்கரைக் காணப்படுகின்றது. இவ்வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் அதிகக் கலோரிகளைச் சேர்ப்பதோடு, உணவுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
குளிர்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம்
குளிர்ந்த சூழலில், உடலில் தூண்டப்படும் மன அழுத்தத்திற்கான ஹார்மோன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாக உயர்த்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உயர் ரத்த சர்க்கரை அளவு தொடர்புடைய அபாயங்கள்
உயர் ரத்த சர்க்கரை அளவு பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடின், அது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் மற்றும் மண்டலங்களைப் பாதித்து உடல்நலச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன.
- இதயம் சார்ந்த பாதிப்புகள்
- சிறுநீரகப் பாதிப்பு
- பார்வை மங்கல் உள்ளிட்ட கண் பார்வைச் சார்ந்த பிரச்சினைகள்
- நரம்புகள் சேதம் அடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உயர் ரத்த சர்க்கரைப் பாதிப்பின் அறிகுறிகள்
உயர் ரத்த சர்க்கரைப் பாதிப்பின் முக்கியமான அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
- அதிகத் தாக உணர்வு
- அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
- அதீத உடல் சோர்வு
- கண் பார்வை மங்குதல் உள்ளிட்டவை ஆகும்.
உயர் ரத்த சர்க்கரைப் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகள்
உயர் ரத்த சர்க்கரைப் பாதிப்பைக் கண்டறிய உதவும் பொதுவான சோதனைகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
சாப்பிடாமல் இருந்து மேற்கொள்ளும் ரத்த சர்க்கரைச் சோதனை
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மேற்கொள்ளும் இந்தச் சோதனையின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மதிப்பிடப்படுகிறது.
வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மைச் சோதனை (OGTT)
சர்க்கரையைச் சாப்பிட்ட பிறகு, நமது உடல் அதனை எவ்வாறு கையாள்கிறது என்பதைக் கண்டறிய, OGTT சோதனைப் பேருதவி புரிகிறது.
ஹீமோகுளோபின் A1c சோதனை
கடந்த இரண்டு முதல் மூன்று மாத கால அளவிலான சராசரி ரத்த சர்க்கரை அளவை மதிப்பிட இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பைத் துவக்கத்திலேயே தவிர்ப்பது எப்படி?
குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவைத் திறம்பட நிர்வகிப்பதற்கான வழிமுறைகள்
உடலை வெதுவெதுப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்
சுற்றுப்புறச் சூழல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ரத்த சர்க்கரை அளவில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இதனைத் தடுக்க, உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இதற்குக் கம்பளி, பட்டு, பாலியஸ்டரால் ஆன உடைகளை உடுத்த வேண்டும். இத்தகைய ஆடைகள், உடலின் வெதுவெதுப்பான வெப்பநிலையைப் பேணிக்காத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.
வீட்டிற்கு உள்ளேயும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
குளிர்ந்த சூழலின் காரணமாக, வெளியிடங்களுக்குச் செல்வது பெருமளவில் குறைவதனால், உடல் உழைப்பு கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு, மாற்றுவழிகளைக் கடைப்பிடிப்பது அவசியமானதாக உள்ளது. உடற்பயிற்சிகளை, வீட்டின் உட்புறத்திலேயே மேற்கொள்ளுதல், வீட்டிலேயே ஜிம் கட்டமைப்பை உருவாக்கி, தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிக்கப்படுவதினால், இன்சுலின் உணர்திறன் மேம்படுத்தப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உணவுத்தேர்வில் கவனம்
குளிர்காலத்தில், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில், நாம் மேற்கொள்ளும் உணவுத்தேர்வுகளும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், அதிக நார்ச்சத்துக் கொண்ட தானியங்கள், மெலிந்த புரதங்கள் கொண்ட உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகள் உள்ளிட்ட உடலுக்கு நன்மைபயக்கும் வகையிலான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் அதிகச் சர்க்கரைக் கொண்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
வைட்டமின் D நுகர்வை அதிகரித்தல்
உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிப்பிற்கு, வைட்டமின் D முக்கியப்பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் சூரிய ஒளியின் வெளிப்பாடு குறைவாகவே காணப்படுவதால், வைட்டமின் D அதிகம் உள்ள மீன் உணவுகள், பால் பொருட்கள், முட்டைகள் மற்றும் மருத்துவர்ப் பரிந்துரைக்கும் உணவு வகைகள் மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம், வைட்டமின் D பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கண்காணித்தல்
குளிர்காலத்தில் போதிய உடல் உழைப்பு இல்லாதது மற்றும் உணவுமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதால், அத்தகைய தருணங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரியான இடைவெளிகளில் தொடர்ந்து கண்காணிப்பது நன்மைப் பயக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் பெரிய அளவிலான மாறுபாடுகள் இருப்பின், மருந்துகள் முறை மற்றும் எடுத்துக்கொள்ளும் இன்சுலின் ஹார்மோனின் அளவில், தேவையான மாற்றங்களை மேற்கொள்வது நல்லது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், நீரிழிவு நோய்ப்பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்க இயலும். இரத்தத்தில் சர்க்கரை அளவீடுகளைக் கண்காணிப்பதில் விழிப்புடன் இருந்து, மருத்துவரைக் கலந்தாலோசித்து, மருந்து முறைகள் மற்றும் உணவுமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம்,குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இந்தப் பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…