ஹைபர்டென்சன் இருந்தாலும் ஹாயாக வாழலாம்!
ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு, சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள நோய்க்குறைபாடாக உள்ளது. இதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிடில், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். இந்தப் பாதிப்பிற்கு உள்ளானவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் மட்டுமே, உயர் ரத்த அழுத்த பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும். நான்கில் ஒரு இந்தியருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இந்தப் பாதிப்பு இருப்பவர்களில் 90 சதவீதம் பேர், இந்தப் பாதிப்பு குறித்த புரிதல் இன்றியோ அல்லது தகுந்த சிகிச்சை மேற்கொள்ளாமலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹைபர்டென்சன்
தமனிகளின் சுவர்கள் மீது ரத்தத்தின் தொடர்ச்சியான அதிக அழுத்தம் ஹைபர்டென்சன் நிலைக்கு வழிவகுக்கிறது. இந்தப் பாதிப்பானது, இதயம் மற்றும் ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
இரத்த அழுத்த அளவீடானது, மில்லி மீட்டர்ப் பாதரசம் (mm Hg) என்ற அலகால் குறிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சிஸ்டாலிக் ( இதயம் துடிக்கும்போது தமனிகளின் சுவர்கலில் ஏற்படும் அழுத்தம்) மற்றும் டயஸ்டாலிக் ( இதயம் ஓய்வு நிலையில் இருக்கும்போது அதன் அழுத்தம்) என இரண்டு அளவீடுகளால் கணக்கிடப்படுகிறது. இரத்த அழுத்தத்தின் இயல்பான அளவு 130/80 (mm Hg) என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்த பாதிப்பின் வகைகள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
முதன்மை (அத்தியாவசிய) உயர் இரத்த அழுத்தம்
இது மிகவும் பரவலான வகை ஆகும். வயதாகும்போது, இந்தப் பாதிப்பு உருவாவது இயல்பானதே ஆகும். இதற்கெனத் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. இது வாழ்க்கைமுறையுடனும், சுற்றுச்சூழல் காரணிகளாலும் நிகழ்கிறது.
இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்
இது நாம் உட்கொள்ளும் சில வகை மருந்துகளின் விளைவாக ஏற்படுகிறது. குறிப்பாகச் சிறுநீரக நோய், தைராய்டு நிலைமைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த வகைப் பாதிப்பு, எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது முதன்மை உயர் ரத்த அழுத்த பாதிப்போடு ஒப்பிடும்போது, மிகவும் வீரியமானது ஆகும்.
ஹைபர்டென்சன் பாதிப்பை நிர்வகிக்கும் வழிமுறைகள்
இரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்ல உணவுமுறை மாற்றங்கள்
உணவுமுறையில், தினசரி உப்பு (சோடியம்) பயன்பாடு 1,500 மில்லிகிராம் என்ற அளவிற்குள் தான் இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு சேர்க்கப்பட்டு இருப்பதால், அதனைத் தவிர்த்து, வீட்டிலேயே தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
தினசரி உணவில் காய்கறிகள், பழ வகைகள், முழுத்தானியங்கள், குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் உள்ளிட்டவைத் தவறாது இடம்பெற வேண்டும். இந்தச் சரிவிகித உணவுமுறையானது, ரத்த அழுத்தத்தைத் துரிதமாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகள் மற்றும் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இந்த வகை உணவுகள், ரத்த அழுத்தத்தைக் கணிசமாக அதிகரித்து, இதய ஆரோக்கியத்தைக் கேள்விக்குரியதாக மாற்றிவிடுகிறது.
அதீதக் குடிப்பழக்கமும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணி ஆகும். ஆண் என்றால் தினமும் இரண்டு பெக், பெண்கள் ஒரு பெக் என்று குடித்து வந்தால், எவ்விதப் பாதிப்பும் இல்லை.
உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள்
ஹைபர்டென்சன் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உடற்பயிற்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், இதய நலன் மேம்படுவது மட்டுமல்லாது, ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக நடைபெற்று, ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் பயிற்சியைத் தினசரி மேற்கொள்வதன் மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து இதய ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுகிறது.
பளு தூக்குதல் போன்ற வலிமையான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, தசைகளின் வலிமை அதிகரித்து, ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
யோகா மற்றும் நீட்சிப் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதன் நேர்மறைத் தாக்கம், ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மருந்துகளின் மூலம் தீர்வு
சிலருக்கு வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மட்டுமே, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருப்பதில்லை. அவர்கள் மருந்துகளின் உதவியையும் நாட வேண்டி உள்ளது. மருந்துகள் உட்கொள்வதாலும் ,பாதிப்புகள் வரும் என்ற நிலை உள்ளதால், மருத்துவர்களின் பரிந்துரையிலான மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.
டையூரிடிக் மருந்துகள், உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் மற்றும் நீரை அகற்றுவதால், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
ACE தடுப்பான்கள், ரத்த நாளங்களைக் கடினப்படுத்தும் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துவதால், ரத்த நாளங்கள் சீராகி, ரத்த ஓட்டமானது சீராக நடைபெற்று, ரத்த அழுத்தம் குறைகிறது.
பீட்டா தடுப்பான்கள், இதயத்துடிப்பு வீதத்தைக் குறைக்கின்றன. இதன்மூலம், இதயத்திற்கான சுமைக் குறைக்கப்படுவதால், ரத்த அழுத்தமானது குறைகிறது.
இதயம் மற்றும் ரத்த நாளங்களின் தசைச் செல்களுக்குள் கால்சியம் நுழைவதை, கால்சியம் தடுப்பு மருந்துகள் தடுத்துவிடுகின்றன. இதன்காரணமாக, ரத்த அழுத்தமானது கட்டுப்படுத்தப்படுகிறது.
இரத்த அழுத்த மாறுபாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
இரத்த அழுத்த மாறுபாட்டைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மானிட்டர்கள், சந்தையில் குறைந்த விலையிலும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருப்பதால், அனைவரும் வீட்டிலேயே வாரத்திற்கு ஒருமுறை , அல்லது மாதத்திற்கு இருமுறை, ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த அளவீடுகளை, மருத்துவரிடம் தெரிவிக்கும்போது, அவர் அதற்குரிய வகையில் சிகிச்சை முறைகளில் மாற்றங்களை மேற்கொள்வார்.
மேலும் வாசிக்க : உயர் ரத்த அழுத்தம் – அறிந்ததும், அறியாததும்
மன அழுத்த நிர்வாக நுட்பங்கள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட, மன அழுத்தம் முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே, மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிப்பது இன்றியமையாததாக உள்ளது.
மனந்தெளிநிலைத் தியான பயிற்சியானது, மனதைச் சாந்தப்படுத்தி ஒருநிலைப்படுத்த உதவுகிறது. தினசரி 5 முதல் 10 நிமிடங்கள் கால அளவிற்குத் தியான பயிற்சிகளை மேற்கொண்டால், அதன்மூலம் ஏற்படும் நேர்மறைத் தாக்கமானது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
தியானம், சுவாசப் பயிற்சிகள், யோகா, உடலமைப்பைச் சீராக்கும் பயிற்சிகள் மனதைச் சாந்தப்படுத்தி, ரத்த அழுத்தத்தைத் திறம்பட குறைக்கிறது.
மெதுவான அதேசமயத்தில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சியானது, உடலைத் திறம்பட தளர்த்துகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூக்கு வழியாக உள்சுவாசம் மேற்கொண்டு, சிறிதுநேரம் இழுத்துப்பிடித்து, பிறகு வாய் வழியாக மூச்சு விட வேண்டும். இதன்மூலம், சுவாச நிகழ்வானது மேம்படும்.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழித்தல், மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல், மனநல ஆலோசகர் அல்லது சிகிச்சை நிபுணரிடம் கலந்தாலோசித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலமும், மன அழுத்தத்தைக் குறைக்க இயலும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கையாண்டு, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…