உயர் ரத்த அழுத்தம் – அறிந்ததும், அறியாததும்
உயர் ரத்த அழுத்தம் என்றழைக்கப்படும் ஹைபர்டென்சன் என்பது தமனிகளின் சுவர்களில், ரத்தம் இயல்பைவிட அதிக அழுத்தம் செலுத்தும் வகையிலான சுகாதார நிலை என்று வரையறுக்கப்படுகிறது. உலகச் சுகாதார அமைப்பு (WHO) சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டிற்குள் உலகளவில் உயர் ரத்த அழுத்தம் கொண்ட மக்கள் 1.57 பில்லியனைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 30 சதவீத வயதானவர்களுக்கு, இந்தப் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், இளைய தலைமுறையினரும், இந்தப் பாதிப்பிற்கு ஆட்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்தப் பாதிப்பு இருப்பதை அறிந்து இருப்பதில்லை என்பதே, இதில் சோகமான விஷயம் ஆகும்.
நாம் மேற்கொள்ளும் வழக்கமான உணவுமுறையில் அதிகளவிலான உப்பு, காரம் சேர்த்துக் கொள்வதே, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முதன்மைக் காரணியாக உள்ளது. உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, இதய நோய்களுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாது, மூளை, கண் உள்ளிட்ட உறுப்புகளையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன. அதீத வியர்வை மற்றும் தலைச்சுற்றல் உணர்வு, உயர் ரத்த அழுத்த பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக வரையறுக்கப்படுகின்றன.
உயர் ரத்த அழுத்த பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
ஆரோக்கியமற்ற உணவுமுறை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் வகையிலான வாழ்க்கை முறை, தொடர்ச்சியான மன அழுத்தம், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கும் சூழல், உடல் பருமன் மற்றும் மோசமான அல்லது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தவல்ல முக்கியமான ஆபத்துக் காரணிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
- அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுதல்
- சாப்பிடும் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
- குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல்
- அதிகச் செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கைமுறை
- பொட்டாசியம் குறைபாடு
- மன அழுத்தம் உள்ளிட்டவைகள் ஆகும்.
அறிகுறிகள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்பட்டவரின் ரத்த அழுத்த அளவீடுகள் அதிக அளவில் இருக்கும்போதும், சம்பந்தப்பட்ட நபர், அதன் அறிகுறிகளை உணராமலேயே இருக்கும் சூழலும் இங்குண்டு.
உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு உள்ளானவர்களிடையே பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாவன..
- கடுமையான தலைவலி உணர்வு
- சுவாசிப்பதில் சிரமம்
- அசாதாரண நிலையில் இதயத்துடிப்பு
- கண் பார்வை மங்குதல்
- மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
- அதீத உடல் சோர்வு
- மார்புப்பகுதியில் வலி உணர்வு
- கழுத்து மற்றும் காதுகள் பகுதியில் அதிக வியர்வை
உள்ளிட்டவை இதன் பொதுவான அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
நோயறிதல் நிலை
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்தால், அவர், உங்கள் மருத்துவ வரலாறு குறித்த சந்தேகங்களைத் தீர்க்க முற்படுவார். உங்கள் இதயத்துடிப்பு சீராக உள்ளதா என்பதை ஸ்டெதஸ்கோப்பின் உதவியுடன் அறிந்துகொண்டு, உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவார்.
துல்லியமான ரத்த அழுத்த மாறுபாட்டைப் பெற, இரு கைகளிலும் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தத்தைக் கண்டறிய வேண்டியது அவசியம்.
சிஸ்டாலிக் அழுத்தம் – தமனிகளில், இதயத்துடிப்பால் ஏற்படும் அழுத்தமே, சிஸ்டாலிக் அழுத்தம் ஆகும். இது எப்போதும் அதிக எண் மதிப்பைக் கொண்டதாக உள்ளது.
டயஸ்டாலிக் அழுத்தம் – தமனிகளில் இதயத்துடிப்புகளுக்கு இடையில் காணப்படும் அழுத்தமே டயஸ்டாலிக் அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது. இது குறைந்த எண் மதிப்பைக் கொண்டது ஆகும்.
மேலும் வாசிக்க : இதய ஆரோக்கியத்தில் காற்று மாசுபடுதலின் தாக்கம்
சிகிச்சை முறைகள்
ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது மட்டுமல்லாது, கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வாழ்க்கைமுறையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.
- உப்பு மிகவும் குறைந்த அளவே உள்ள, அதேசமயம் இதய நலனிற்கு ஏற்ற வகையிலான உணவை உட்கொள்ளுதல்
- தினசரி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல்
- ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
- மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல்
- தினசரி இரவு 7 முதல் 9 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் கட்டாயம் வேண்டும்.
நீங்கள் இந்த வாழ்க்கைமுறையோடு, மருத்துவர்ப் பரிந்துரைக்கும் சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இந்த மருந்துகளின் செயல்திறன் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியம் இங்கு முக்கியமானதாக உள்ளது. இதுதொடர்பாக, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சாலச் சிறந்தது.
மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து, அவர்ப் பரிந்துரைத்த வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, உயர் ரத்த அழுத்த பாதிப்பு எனும் அரக்கனிடம் இருந்து முழுமையான விடுதலைப் பெறுவீராக…