குழந்தைகளில் காணப்படும் ஹைபர்டென்சன் பாதிப்பு
உயர் ரத்த அழுத்த பாதிப்பே, ஹைபர்டென்சன் என மருத்துவ நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பாதிப்பு, பெரும்பாலும் பெரியவர்களிடத்தே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தப் பாதிப்பானது குழந்தைகளிடையேயும் காணப்படுவது தெரியவந்துள்ளது. இதன்மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான சாத்தியம் இருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிக்க, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை அவசியமானதாகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு, அதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு
இரத்த அழுத்தம் (BP) என்பது, ரத்த நாளங்கள் வழியாகச் செல்லும் ரத்தத்தின் அழுத்தம் ஆகும். இந்த அழுத்தம், இயல்பைவிட தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அது உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சன் என்று குறிப்பிடப்படுகிறது. இது குழந்தைகளில் ஏற்படும்போது, Paediatric hypertension என்றழைக்கப்படுகிறது.
குழந்தைகளின் வயது, பாலினம் மற்றும் உயரத்திற்கு ஏற்ப ரத்த அழுத்தம் மாறுபடும். இந்த அளவிலிருந்து அதிகரிக்கும்பட்சத்தில் அது உயர் ரத்த அழுத்த பாதிப்பாகக் கணக்கிடப்படுகிறது. பெரியவர்களுக்கு 120/80 mmhg என்பது சாதாரண ரத்த அழுத்த அளவாகும். 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் இந்த அளவு காணப்பட்டால், அது உயர் ரத்த அழுத்தமாகக் குறிப்பிடப்படுகிறது.
காரணங்கள்
குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரு வகைக் காரணங்கள் உள்ளன. அவை முதன்மை மற்றும் இரண்டாம் நிலைக் காரணங்கள் ஆகும்.
முதன்மை உயர் ரத்த அழுத்தம்
இது அடிப்படை அல்லது ஆளுமை ஹைபர்டென்சன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகைப் பாதிப்பு மரபியல் காரணிகள், உடல் எடை அதிகரிப்பு அல்லது மற்ற காரணிகளால் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்
இது வேறு சில அடிப்படை நிலைகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது. இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். இதில் சிறுநீரக நோய்கள், இதயப் பிரச்சனைகள், ஹார்மோன் கோளாறுகள் ஆகியவை அடங்கும். மேலும் உறக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல், நச்சு உலோகங்களான கேட்மியம், காரீயம், பாதரசம் நிறைந்த சூழலில் வாழ்வதும் காரணமாக அமையலாம்.
அறிகுறிகள்
குழந்தைகளிடையே ஏற்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவது இல்லை. குழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் போது, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், ரத்த அழுத்தததையும் பரிசோதனைச் செய்வது அவசியமாகும்.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், பின்வரும் அறிகுறிகளை நாம் கண்கூடாகப் பார்க்க இயலும்.
- கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட பார்வைச் சார்ந்த பிரச்சினைகள்
- குழப்பமான மனநிலை
- தலை எப்போதுமே பாரமாக இருப்பது போன்ற உணர்வு
- வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
- மார்புப் பகுதியில் வலி
- சீரற்ற இதயத்துடிப்பு
- 13 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் வடிதல், விரைவான இதயத்துடிப்பு, மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குழந்தை அல்லது பதின்ம வயதினர், தீவிர உயர் ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்படும்பட்சத்தில், மருத்துவ நிபுணரின் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியமாகிறது.
மேலும் வாசிக்க : ஹைபர்டென்சன் நிர்வகித்தலில் உடற்பயிற்சியின் பங்கு
குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்த பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது?
குழந்தைக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் மருத்துவ நிபுணரை உடனடியாகக் கலந்தாலோசிப்பது அவசியம். குடும்ப வரலாறு, குழந்தையின் மருத்துவ வரலாறு, உடலின் செயல்பாட்டு நிலைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து முறை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் குழந்தைக்குப் பரிசோதனையை மேற்கொண்டு, நோயறிதல் நிகழ்வைச் செயல்படுத்துவர்.
மன அழுத்தமானது, குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரித்துவிடும் என்பதால், பரிசோதனைகளின் போது குழந்தைகள் அமைதியாகவும், அவர்களுக்கேற்ற வசதிகளை அமைத்துத் தருவது முக்கியம் ஆகும். துல்லியமான சோதனை முடிவுகளுக்கு, அளவீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேற்கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதை உறுதி செய்ய, குறைந்தது 3 முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். இந்தப் பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான சிக்கல்களைக் கண்டறிய உதவுகின்றன. குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட உள்ள சோதனைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
இரத்த பரிசோதனைகள்
குழந்தையின் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு, சிறுநீரகச் செயல்பாடுகள், கொழுப்பின் அளவு உள்ளிட்டவைச் சரியான முறையில் உள்ளதா என்பதைக் கண்டறிய, ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அல்ட்ரா சவுண்ட் சோதனை
குழந்தைகளின் சிறுநீரகச் செயல்பாட்டை, இந்தச் சோதனையின் மூலம் கண்டறிய இயலும்.
சிறுநீர் மாதிரிச் சோதனை
மோசமான சிறுநீரகச் செயல்பாட்டின் அறிகுறியாகத் திகழக்கூடிய புரதம் உள்ளிட்ட பொருட்களைக் கண்டறிய சிறுநீர் மாதிரிச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ECG எனப்படும் எக்கோகார்டியோகிராம்
குழந்தையின் இதயத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதைச் சரிபார்க்க இந்தப் பரிசோதனை உதவுகிறது.
உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இதயப் பிரச்சினைகள், சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட சோதனைகளைச் சரியாக மேற்கொண்டு, குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்த பாதிப்பினைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…